எதை பற்றியாவது புகார் கூற நினைத்தேன்.. ஆனால் எல்லாம் பிரம்மாதம்! முரசொலியில் ஸ்பெயின் செஸ் வீரர்!
சென்னை: செஸ் ஒலிம்பியாட் ஏற்பாடுகளில் எதைப் பற்றியாவது புகார் சொல்லலாம் என்று நினைத்தேன், ஆனால் நான் புகார் சொல்லும் விதமாக இதுவரை எதையும் பார்க்கவில்லை என ஸ்பானிஷ் செஸ் வீரர் வெல்லேஜு போன்ஸ் கூறியிருக்கிறார்.
இதனை தலையங்கமாக வெளியிட்டுள்ள முரசொலி நாளிதழ், யார் இந்த ஸ்டாலின் என தமிழக முதல்வரை உலகமே வியந்து பார்ப்பதாக குறிப்பிட்டுள்ளது.
இது தொடர்பாக முரசொலியில் வந்த விவரம் வருமாறு;

விஸ்வநாதன் ஆனந்த்
பத்தொன்பது வயதில் இருந்து விளையாடுகிறார் விஸ்வநாதன் ஆனந்த். முப்பது ஆண்டுகளாக விளையாடி வருகிறார். அவர் போகாத நாடு இல்லை. பெறாத வெற்றிகள் இல்லை. கடந்த இரண்டு வாரங்களாக தமிழ்நாடு அரசு செய்து கொடுத்த வசதிகளைப் பார்த்து. "மிகவும் பெருமிதத்துடன் இங்கு நிற்கிறேன்" என்று சொல்லி இருக்கிறார். "நேப்பியர் பாலம் துவங்கி பால் பாக்கெட் வரை செஸ் விளையாட்டை பிரபலப்படுத்தி சாத்தியப்படுத்திய முதல்வருக்கு வாழ்த்துகள் பாராட்டுகள்" என்று அவர் சொல்லி இருக்கிறார். "இனி எனது செஸ் விளையாட்டு நண்பர்கள் தமிழகத்தை மிகவும் வியந்து பார்ப்பார்கள்" என்றும் அவர் சொல்லி இருக்கிறார்.

ஸ்பானிஷ் வீரர்
"எதைப் பற்றியாவது புகார் சொல்லலாம் என்று நினைத்தேன். ஆனால் நான் புகார் சொல்லும் விதமாக இதுவரை எதையும் பார்க்கவில்லை. எல்லாமே சிறப்பாக இருக்கிறது. இதனை நான் எதிர்பார்க்க வில்லை" என்று, ஸ்பானிஷ் நாட்டு வீரர் வெல்லேஜு போன்ஸ் சொல்லி இருக்கிறார். ஐந்து முறை சேம்பியன் பட்டம் வென்றவர் அவர்.

அல்ஜீரியா வீரர்
"செஸ் போட்டியில் முதல் முறையாகக் கலந்து கொள்கிறேன். இப்போட்டியில் கலந்து கொண்டது மகிழ்ச்சி அளிக்கிறது. வீரர்கள் தங்குவதற்கு செய்த ஏற்பாடுகளான விடுதி, உணவு என அனைத்தும் மிகச் சிறப்பாக இருந்தது. என்ன சொல்வது என்றே தெரியவில்லை" என்று அல்ஜீரியா வீரர் மாங்கின்ஸ் சொல்லி இருக்கிறார்.

வலிமை மிக்க
"இந்தியாவில் நடந்த இந்த செஸ் ஒலிம்பியாட் தான் வரலாற்றில் மிகச் சிறந்த செஸ் ஒலிம்பியாட்" என்று அனைத்திந்திய சதுரங்கக் கூட் டமைப்பின் தலைவர் டாக்டர் சஞ்சய் கபூர் சொல்லி இருக்கிறார். "சில பெருமை மிக்க, வலிமை மிக்க மனிதர்கள் இருந்ததால் மட்டுமே நான்கு மாதங்களில் இத்தனை முயற்சியும் வெற்றி பெற்றுள்ளது" என்று முதலமைச்சரின் திறமையை வியந்து பாராட்டி இருக்கிறார். இவ்வாறு தமிழக அரசுக்கும் முதலமைச்சருக்கும் கிடைத்த பாராட்டுகளை பட்டியலிட்டுள்ள முரசொலி நாளிதழ், யார் இந்த ஸ்டாலின் என உலகமே வியந்து பார்த்துக் கொண்டிருப்பதாகவும் தெரிவித்திருக்கிறது.












Click it and Unblock the Notifications