வசூல்ராஜா மோடி.. வாயைத் திறந்தாலே மதம், சாதி என பிரிவினை பேச்சுதான்.. சரமாரியாக விளாசிய ஸ்டாலின்!

Subscribe to Oneindia Tamil

சென்னை: திமுக கூட்டணி வேட்பாளர்களுக்கு ஆதரவாக பிரச்சாரம் மேற்கொண்ட திமுக தலைவர் ஸ்டாலின், பிரதமர் மோடியை கடுமையாக விமர்சித்துள்ளார்.

திருவள்ளூர் மாவட்டம், மஞ்சம்பாக்கத்தில் நடைபெற்ற இந்தியா கூட்டணியின் தேர்தல் பரப்புரைப் பொதுக் கூட்டத்தில் முதலமைச்சரும், திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் கலந்துகொண்டார். திருவள்ளூர் தொகுதி வேட்பாளர் சசிகாந்த் செந்தில், வட சென்னை தொகுதி வேட்பாளர் டாக்டர் கலாநிதி வீராசாமி ஆகியோருக்கு ஆதரவாக வாக்கு சேகரித்தார் ஸ்டாலின்.

Stalin hits PM Narendra modi at election campaign meeting Thiruvallur

ஸ்டாலின் பேசுகையில், "தி.மு.க - காங்கிரஸ் வெளியிட்டிருக்கும் தேர்தல் அறிக்கைகள் இந்தத் தேர்தலின் "ஹீரோ" என்றால், பா.ஜ.க வெளியிட்டிருக்கும் தேர்தல் அறிக்கை இந்த நாட்டிற்கும் நாட்டு மக்களுக்கும் 'வில்லன். பா.ஜ.க.வின் தேர்தல் அறிக்கையை வில்லன் என்று ஏன் சொல்கிறோம் என்றால், மத அடிப்படையில் இந்த நாட்டு மக்களை பிளவுபடுத்தும் பொது சிவில் சட்டம் கொண்டுவரப்படும் என்று அறிவிக்கிறார்கள்.

மிகப்பெரிய ஆபத்துக்கு டிரெய்லர்: நாட்டிற்கு வரப்போகும் மிகப்பெரிய ஆபத்துக்கான டிரெய்லர்தான், பொது சிவில் சட்டம். மக்களைப் பிளவுபடுத்துவது மட்டுமல்ல, ஏமாற்றும் தேர்தல் அறிக்கையாகவும் பா.ஜ.க தேர்தல் அறிக்கை இருக்கிறது. "ஒரு ரூபாயில் சானிட்டரி நாப்கின் வழங்கப் போகிறோம்" என்று 2019 தேர்தல் அறிக்கையில் கூறியதை, மறுபடியும் காப்பி - பேஸ்ட் செய்திருக்கிறார்கள். ஆனால், உண்மையில், நாப்கினுக்கு ஜி.எஸ்.டி போட்டதுதான் பா.ஜ.க ஆட்சி! அந்த வரியை நீக்க நாடாளுமன்றத்தில் நம்முடைய எம்.பி.க்கள்தான் குரல் கொடுத்தார்கள்! போராடினார்கள்!

அதுமட்டுமல்ல, இன்றைக்கும் விவசாயிகள் தலைநகர் டெல்லியில் போராடிக்கொண்டு இருக்கிறார்களே! அவர்களுக்கு ஏதாவது வாக்குறுதி அறிவித்திருக்கிறார்களா? இல்லையே! விவசாயிகளின் வருமானத்தை இரண்டு மடங்கு ஆக்குவோம் என்று கூறினார்கள்! அதை முதலில் செய்தார்களா? இல்லை! பா.ஜ.கவிடம் பத்தாண்டுகள் சாதனை என்ற சொல்லவும் எதுவும் இல்லை! அடுத்து செய்யப்போகிறோம் என்று சொல்ல சரியான வாக்குறுதியும் இல்லை!

இந்த இந்தியத் துணைக் கண்டத்தில், மரியாதைக்குரிய நேரு தொடங்கி மோடி வரைக்கும், 14 பேர் பிரதமராக இருந்திருக்கிறார்கள். ஆனால், இப்போது இருக்கும் பிரதமர் மோடி போன்று, E.D - I.T - C.B.I வைத்து மிரட்டிக் கட்சியை உடைக்கிறது, எம்.எல்.ஏ, எம்.பி.க்களை வாங்குவது, முதலமைச்சர்களைக் கைது செய்வது, தொழிலதிபர்களை மிரட்டித் தேர்தல் பத்திரம் வாங்குவது., பி.எம். கேர்ஸ் என்று தனியார் அறக்கட்டளை வைத்து நிதி வாங்குவது என்று, வசூல் செய்த ஒரே 'வசூல்ராஜா' மோடி ஒருவர்தான்!

மோடி வாயை திறந்தாலே: வாயைத் திறந்தாலே சாதி, மதம் என்று மக்களைப் பிளவுபடுத்தித்தான் பேசுகிறார்! காங்கிரஸ் தேர்தல் அறிக்கையைப் பார்த்து பொறுத்துக்கொள்ள முடியாமல், முஸ்லீம் லீக்கின் அறிக்கை என்று விமர்சித்து, பிரிவினைவாதம் பேசினார்! இப்போது, இன்னும் கீழே இறங்கிச் சென்று, மற்றவர்கள் உண்ணும் உணவை விமர்சிக்கிறார்! பதவியில் தொடர முடியாது என்ற வெறியில், பிரிவினைப் பேச்சில் ஈடுபட்டிருக்கிறார்! உணவு என்பது தனிநபர்களின் விருப்பம்! அடுத்த மனிதர் என்ன சாப்பிடவேண்டும் என்று முடிவு செய்ய மோடிக்கு மட்டுமல்ல, யாருக்குமே உரிமையில்லை!

இப்படியெல்லாம், ஒரு பிரதமர் பேசுவாரா? வாக்குக்காக இப்படி மலிவான அரசியல் செய்யும் மனிதரை இந்திய வரலாறு இதுவரை பார்க்கவில்லை! அதனால்தான் கூறினேன். பா.ஜ.க இந்த நாட்டுக்கு வில்லன்! நாட்டில் இருக்கும் எந்தப் பிரச்சினையையும் தீர்க்காமல் சுய விளம்பரத்திற்கு மட்டும்தான், பிரதமர் மோடி முக்கியத்துவம் அளித்தார்!

ஆண்டுக்கு 2 கோடி வேலைவாய்ப்பு என்ற வாக்குறுதி கொடுத்தாரே, ஆனால், இன்றைக்கு என்ன நிலைமை? வேலைவாய்ப்பு இல்லாமல் தவிப்பவர்களில் 83 விழுக்காடு பேர் இளைஞர்கள் என்று புள்ளிவிவரம் சொல்கிறது! நாட்டின் பொருளாதாரத்தைத் தூக்கி நிறுத்திய M.S.M.E-க்கள் ஜி.எஸ்.டி-யால் நலிவடைந்துவிட்டதே! அதைச் சரி செய்ய வேலை செய்தாரா? இலங்கை கடற்படையால் தமிழ்நாட்டு மீனவர்கள் கைது செய்யப்படுவது - தாக்கப்படுவது - அதிகமானதே! அதைத் தடுக்காமல், விஷ்வகுரு என்று சொல்லிக்கொள்ளும் பிரதமர் மோடி ஏன் மவுனகுருவாக இருந்தார்!

ஓட்டு கேட்க வரணுமேனு கூட நினைக்கல: தேர்தலுக்காகத் தமிழ்நாட்டுப் பக்கம் தலையைக் காண்பிக்க வேண்டுமே! தமிழ்நாட்டிற்கு சொல்வதற்கு என்று ஒரு சிறப்புத் திட்டமாவது செய்திருக்கிறாரா! ஒரு செங்கல்லைக் காட்டி கேள்வியாகக் கேட்கிறார்களே! அந்த எய்ம்ஸ் மருத்துவமனையையாவது தேர்தலுக்கு முன்னால் கட்டிமுடித்துவிடுவோம் என்று எண்ணம் வந்ததா?

சரி அட்லீஸ்ட், என்னடா தமிழ்நாட்டு மக்கள் பெருவெள்ளத்தில் தவிக்கிறார்களே! உயிரையும் - உடைமைகளையும் - வீடுகளையும் இழந்து அவஸ்தைப்படுகிறார்களே! பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவவேண்டும் என்று மாநில அரசு நிதி கேட்கிறார்களே! மாநில முதலமைச்சரே நேரில் வந்து, கோரிக்கை வைத்துவிட்டுச் சென்றரே! என்று நிதியாவது கொடுத்தாரா? இல்லை! இப்படி எதையும் செய்யாமல் நம்முடைய திராவிட மாடல் அரசு வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்குக் கொடுத்த 6000 ரூபாயும், ஏராளமான நலத்திட்ட உதவிகளையும் பிச்சை என்று சொல்ல வைக்கிறார்!

இந்த லட்சணத்தில், சென்னைக்கு ஏதோ 'ஷோ' என்று வந்தார்! என்ன ஷோ அது? ரோடுஷோ இப்படி ஷோ காட்டிவிட்டுப் போக வெட்கப்பட வேண்டாமா? அண்டப்புளுகு ஆகாசப் புளுகு என்ற சொல்லுவார்களே! அப்படி, நேற்று ஒன்று சொன்னார்கள்! கடந்த பத்தாண்டுகளில் தமிழ்நாட்டிற்குப் பத்து லட்சம் கோடி ரூபாய் கொடுத்திருப்பதாக பச்சைப் பொய் சொல்கிறார்கள்! நம்மிடம் ஒரு ரூபாயை வரியாக வாங்கினால், 29 பைசா மட்டும் திருப்பித் தந்துவிட்டு, நேற்று ஒரு கணக்கு காட்டியிருக்கிறார்கள்! எல்லாம் பொய்க் கணக்கு!

பொய் கணக்கு: உதாரணத்திற்குச் சொல்கிறேன். நான் பலமுறை கோரிக்கை வைத்தும் ஒரு ரூபாய் கூட கொடுக்கப்படாத சென்னை மெட்ரோ ரயில் இரண்டாம் கட்ட பணிகளுக்கு 63 ஆயிரத்து 246 கோடி ரூபாய் கொடுத்ததாகச் சொல்லியிருக்கிறார்கள். சென்னை முழுவதும் மெட்ரோ பணிக்காகச் சாலைகள் தோண்டப்பட்டு, பணிகள் மெதுவாக நடக்கிறதே அதற்கு என்ன காரணம்? ஒன்றிய பா.ஜ.க அரசு ஒரு பைசா கூட பணம் தராததுதான்!

அப்படியும் பணிகளை முடித்தாக வேண்டுமே! திட்டத்தைச் செயல்பாட்டிற்குக் கொண்டுவர வேண்டுமே என்று மாநில அரசே நிதிச்சுமையை ஏற்றுக்கொண்டு பணிகளைச் செய்து கொண்டு இருக்கிறோம். இதனால், நம் அரசுக்கு ஆண்டுக்கு 12 ஆயிரம் கோடி ரூபாய் கூடுதலாகச் செலவாகிறது!

இப்படி நிதி நெருக்கடியை உருவாக்கிவிட்டு, சர்வ சாதாரணமாகப் பொய் சொல்லிக்கொண்டு இருக்கிறார்கள்! இங்கே மீனவர்கள் பலர் வந்திருக்கிறீர்கள்! சாகர்மாலா திட்டத்திற்கு 2 லட்சம் கோடி ரூபாய் கொடுத்திருக்கிறோம் என்று சொல்லியிருக்கிறார்கள். அந்தப் பணிகள் எங்கேயாவது நடந்து பார்த்திருக்கிறீர்களா?

எந்த முகத்தை வைத்துக்கொண்டு?: அதுமட்டுமல்ல, ஒற்றைச் செங்கல்லோடு நிற்கும் எய்ம்ஸ்க்கு 1,960 கோடியாம்! அதற்குத்தான் கேட்டேன். நீங்கள் பேசும் எத்தனை பொய்களைத்தான் எங்கள் காதுகள் தாங்கும்? எங்கள் காது பாவமில்லையா! தன்னுடைய பத்தாண்டுகால ஆட்சிக்கு ரிப்போர்ட்கார்டு கொடுக்கமுடியாத பிரதமர் மோடி, எந்த முகத்தோடு வாக்கு கேட்டு வருகிறார்!

அவரிடம், சொல்லச் சாதனைகள் இல்லை! ஒன்றியத்தில் தி.மு.க, காங்கிரஸ் கூட்டணி அரசில், தமிழ்நாட்டிற்கு என்னென்ன சாதனைகளைச் செய்திருக்கிறோம் என்று நானும் பல கூட்டங்களில் சொல்லியிருக்கிறேன். குறிப்பாக, இங்கு சென்னைக்கு மட்டும் சொல்ல வேண்டும் என்றால், சென்னைக்கு மெட்ரோ ரயில் திட்டம்! மதுரவாயல் - துறைமுகம் இடையே பறக்கும் சாலைத் திட்டம்! சென்னை துறைமுகத்தையும் - எண்ணூர் துறைமுகத்தையும் இணைக்கும் சாலையை அகலப்படுத்தும் திட்டம்! கத்திப்பாரா, பாடி என்று பல்வேறு மேம்பாலங்கள்! நெம்மேலி கடல்நீரைக் குடிநீராக்கும் திட்டம்! இப்படி நிறைய இருக்கிறது. மீண்டும் தமிழ்நாட்டிற்கு இதுபோன்ற திட்டங்களைத் தரும் பிரதமர்தான் நமக்கு வேண்டும்! அதற்கு நீங்கள் இந்தியா கூட்டணிக்கு ஆதரவு தர வேண்டும்." எனப் பேசியுள்ளார் ஸ்டாலின்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+