இலங்கை கடற்படை அட்டூழியம்; தமிழக மீனவர்கள் கைது! மத்திய அமைச்சர் ஜெய்சங்கருக்கு முதலமைச்சர் கடிதம்!
சென்னை: இலங்கைக் கடற்படையால் கைது செய்யப்பட்டுள்ள 45 மீனவர்கள் மற்றும் 138 மீன்பிடிப் படகுகளை விடுவித்திட தூதரக நடவடிக்கைகள் மேற்கொள்ள வலியுறுத்தி மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கருக்கு முதலமைச்சர் ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.
அக்கடிதத்தில், புதுக்கோட்டை மாவட்டம், ஜெகதாப்பட்டினம் மீன் பிடித் துறைமுகத்தைச் சேர்ந்த 6 மீனவர்கள், IND-TN-08-MM-26 என்ற பதிவு எண் கொண்ட இயந்திரப் படகில் மீன்பிடிக்கச் சென்றிருந்த நிலையில், அவர்களது மீன்பிடிப் படகுடன் இலங்கைக் கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளதாகக் குறிப்பிட்டுள்ள முதலமைச்சர் ஸ்டாலின், கடந்த ஒரு வாரத்தில் இலங்கைக் கடற்படையினரால் மீனவர்கள் கைது செய்யப்படுவது இது மூன்றாவது சம்பவம் என கவலைபடத் தெரிவித்துள்ளார்.

இலங்கைக் கடற்படையினர் தொடர்ந்து தமிழக மீனவர்களின் பாரம்பரிய உரிமைகளை மீறும் வகையில் இது போன்று கைது நடவடிக்கையில் ஈடுபடுவதால், மீனவர்களின் வாழ்வாதாரம் பெருமளவில் பாதிக்கப்படுவதுடன், மீனவர்களின் வாழ்வில் பெருத்த அச்சத்தையும், பீதியையும் ஏற்படுத்துவதாகத் தெரிவித்துள்ள முதலமைச்சர் ஸ்டாலின், இந்த ஆறு மீனவர்கள் தவிர்த்து, ஏற்கெனவே 39 மீனவர்களும், 137 படகுகளும் இலங்கைவசம் காவலில் உள்ளதாக தனது கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.
எனவே, மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர் இதில் உடனடியாகத் தலையிட்டு, இலங்கை வசமுள்ள 45 மீனவர்கள் மற்றும் 138 மீன்பிடிப் படகுகளை உடனடியாக விடுவித்திடத் தேவையான தூதரக நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு முதலமைச்சர் ஸ்டாலின் தனது கடிதத்தில் கேட்டுக் கொண்டுள்ளார்.
இதனிடையே மீனவர் பிரச்சனைக்கு நிரந்தரத் தீர்வு காண நடவடிக்கை எடுப்பதற்கு பதிலாக மத்திய அரசுக்கு தமிழக முதலமைச்சர் கடிதங்களை மட்டும் எழுதிக் கொண்டிருப்பது போதாது என அன்புமணி விமர்சித்துள்ளார்.












Click it and Unblock the Notifications