வெதர்மேன் சொன்ன மாதிரியே.. சென்னையே குளிர்ந்து போச்சே.. சடசடவென அடித்து பெய்த அடைமழை.. ஜில்லென்ற மாலை
சென்னை: அக்னி நட்சத்திரம் முடிந்த பின்னரும் தமிழ்நாட்டில் பல்வேறு பகுதிகளில் வெளியில் அதிகமாக பதிவாகி வந்த நிலையில், சென்னையில் திடீரென பெய்த கனமழை மண்ணை மட்டுமல்லாது மக்களின் மனங்களையும் குளிர்வித்துள்ளது. ஏற்கனவே தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் இது குறித்து கூறியிருந்த நிலையில் தற்போது மழை பெய்து வருகிறது.
தமிழ்நாட்டில் கடந்த மே மாதம் 4ம் தேதி அக்னி வெயில் தொடங்கியது. ஆனால் இந்த வெயில் தொடங்குவதற்கு முன்னரே மாநிலம் முழுவதும் கடுமையான வெயில் வாட்டி எடுக்க தொடங்கிவிட்டது. பல மாவட்டங்களில் வெயில் சதமடிக்க தொடங்கிவிட்டது. இதனையடுத்து, அக்னி நட்சத்திரம் தொடங்கியது. வழக்கம்போல வெயிலும் வாட்டியது. அன்றாடம், பணிக்கு செல்வோர், கூலி தொழிலாளிகள், தள்ளு வண்டி வியாபாரிகள் என அனைத்து தரப்பு மக்களும் இந்த வெயிலால் கடுமையாக பாதிக்கப்பட்டனர்.

இந்நிலையில் அக்னி கடந்த 26ம் தேதி முடிவடைந்தது. இருப்பினும் வேலூர் மட்டுமல்லாது சென்னை, மதுரை உள்ளிட்ட 16 மாவட்டங்களில் வெயில் 100 டிகிரியை கடந்து பதிவாகி வருகிறது. கடந்த சில நாட்களாக சென்னையில் வெயில் 104 டிகிரி எனும் அளவுக்கு வீசி வருகிறது. எனவே இன்று திறக்கப்பட இருந்த பள்ளிகள் 14ம் தேதி திறக்கப்படும் என பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் அறிவித்திருக்கிறார். அதேபோல, மாணவர்கள் வெயிலில் அலைய வேண்டாம் என்றும் பள்ளி கல்வித்துறை அறிவுறுத்தியுள்ளது.
இது குறித்து இந்திய வானிலை ஆய்வு மையத்தின் தென்மண்டல தலைவர் பாலச்சந்திரன் கூறுகையில், "தற்போதைய இந்த அதீத வெப்ப நிலைக்கு வறண்ட மேற்கு திசை காற்றுதான் காரணம். பொதுவாக மே மாதம் முடிந்துவிட்டால் வெப்பம் குறைந்துவிடும் என பலரும் நினைத்துக்கொண்டிருக்கிறார்கள். ஆனால், இது ஜூன் மாதம் வரை நீடிக்கும். கடந்த ஆண்டுகளில் இதுபோன்று அதீத வெப்பம் இதே மாதத்தில் பதிவு செய்யப்பட்டிருக்கிறது.
குறிப்பாக கடந்த 2019ம் ஆண்டு, ஜூன் மாதத்தின் 14 நாட்கள் தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் வெப்பநிலை 104 டிகிரியை தொட்டிருந்தது. எனவே இந்த வெப்பநிலை குறித்து கவலையடையாமல் இதிலிருந்து தற்காக்கும் வழிகளை பின்பற்ற வேண்டும். இன்றும் இரண்டு நாட்களுக்கு இதே அளவு வெயில் நீடிக்கும். பின்னர் காற்றின் திசை மாறுபாடு காரணமாக வெப்பநிலை குறைய வாய்ப்பு இருக்கிறது" என்று கூறியிருந்தார்.
இந்நிலையில், இன்று மாலை திடீரென சென்னையின் சுற்றுவட்டார பகுதிகளில் திடீரென கனமழை பெய்யத் தொடங்கியது. அண்ணாநகர், வில்லிவாக்கம், அயனாவரம், கொரட்டூர், பாடி உள்ளிட்ட பகுதிகளில் கனமழை பெய்தது. குறைந்த நேரத்தில் அடை மழையாக பெய்ததில் வில்லிவாக்கம் மற்றும் அயனாவரம் ஏரியாக்களில் தாழ்வான பகுதிகளில் மழை நீர் தேங்கியுள்ளது. இது குறித்து ஏற்கனவே வெதர்மேன் பிரதீப் ஜான் கூறியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications