"எடப்பாடியை வணங்கி.." சட்டசபையில் திடீரென புகழ்ந்து தள்ளிய செங்கோட்டையன்.. திடீர் மாற்றம் ஏன்!
சென்னை: அதிமுகவில் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கும் மூத்த தலைவர் செங்கோட்டையனுக்கும் இடையே மோதல் போக்கு நிலவி வருவதாகச் சொல்லப்பட்டது. அதற்கேற்றார் போல எடப்பாடி பழனிசாமி நேற்று அதிமுக எம்எல்ஏக்களுக்கு விருந்து அளித்த நிலையில், அதிலும் செங்கோட்டையன் பங்கேற்கவில்லை. இதற்கிடையே இன்று சட்டசபையில் பேசிய செங்கோட்டையன் திடீரென எடப்பாடி பழனிசாமியை புகழ்ந்து பேசியது கவனத்தை ஏற்படுத்துவதாக உள்ளது.
அதிமுகவில் உட்கட்சியில் நடக்கும் மோதல்கள் இன்னும் முடிந்த பாடில்லை.. அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கும் அதிமுகவின் மூத்த தலைவரான செங்கோட்டையனுக்கும் இடையே கடந்த சில காலமாகவே மோதல் போக்கு இருந்து வருகிறது. சில மாதங்களாகவே இருவருக்கும் இடையேயான பனிப்போர் தொடர்ந்தே வருகிறது.

எடப்பாடி பழனிசாமி- செங்கோட்டையன்
எடப்பாடி பழனிசாமி கூட்டும் எந்தவொரு கூட்டத்திலும் செங்கோட்டையன் பங்கேற்காமல் தவிர்த்தே வந்தார். மேலும், பொது நிகழ்ச்சிகள் சட்டசபையில் பேசும்போது கூட எடப்பாடி பழனிசாமி பெயரைக் குறிப்பிடுவதை செங்கோட்டையன் தவிர்த்தே வந்தார். எதிர்க்கட்சித் தலைவர் என்ற முறையில் சட்டசபையில் எடப்பாடி பழனிசாமி அலுவலகத்தில் ஆலோசனைக் கூட்டங்கள் நடக்கும்.. அதிலும் கூட செங்கோட்டையன் பங்கேற்காமலேயே இருந்தார்.
நேற்றிரவு கூட எடப்பாடி பழனிசாமி அனைத்து அதிமுக எம்எல்ஏக்களையும் அழைத்து தனது இல்லத்தில் விருந்து வைத்திருந்தார். ஆனால், அதிலும் கூட செங்கோட்டையன் பங்கேற்காமல் புறக்கணித்திருந்தார். இதனால் இரு தரப்பிற்கும் இடையே மோதல் இருப்பது உறுதி என்றே பலரும் குறிப்பிட்டனர். இதற்கிடையே இன்று சட்டசபையில் யாரும் எதிர்பார்க்காத விஷயம் நடந்துள்ளது.
எடப்பாடியை வணங்கி
அதாவது சட்டசபையில் இப்போது மானியக் கோரிக்கை தொடர்பான விவாதம் நடந்து வருகிறது. இன்று பள்ளிக்கல்வி மற்றும் உயர் கல்வி தொடர்பான மானியக் கோரிக்கை குறித்த விவாதம் நடந்தது. அப்போது பேசிய செங்கோட்டையன் எடப்பாடி பழனிசாமியை புகழ்ந்து தள்ளிவிட்டார். எடப்பாடியாரை வணங்கி உரையை ஆரம்பிப்பதாக செங்கோட்டையன் குறிப்பிட்டார். மேலும், எம்ஜிஆர், ஜெயலலிதா வழியில் நல்லாட்சி வழங்கியவர் எடப்பாடி பழனிசாமி என்றும் தெரிவித்தார்.
எடப்பாடி பழனிசாமி
இத்தனை காலம் எடப்பாடி பெயரையே குறிப்பிடுவதைத் தவிர்த்த செங்கோட்டையன் இன்று திடீரென எடப்பாடியை வணங்கி உரையை ஆரம்பிப்பதாகப் பேசியது பலரது கவனத்தையும் ஈர்த்துள்ளது. அதேநேரம், இங்கு நாம் மற்றொரு விஷயத்தையும் கவனிக்க வேண்டும். அதாவது மானியக் கோரிக்கை விவாதத்தில் ஒருவர் பேச வேண்டும் என்றால் அதற்குக் கட்சியின் கொறடா அனுமதி தர வேண்டும்.
அதாவது கட்சித் தலைமை யாரை விரும்புகிறதோ.. அவருக்கே பேச வாய்ப்பு தரப்படும். எனவே, செங்கோட்டையன் பேச எடப்பாடி பழனிசாமி சொல்லியே கொறடா வேலுமணி அனுமதி அளித்திருப்பார். இதன் மூலம் இரு தரப்பிற்கும் இடையே நிலவி வந்த பனிப்போர் முடிவுக்கு வந்துவிட்டதாகவே பலரும் குறிப்பிடுகிறார்கள்.
செங்கோட்டையன்
முன்னதாக செங்கோட்டையன் செயல்பாடுகள் குறித்து அதிமுக தலைவர்கள், குறிப்பாக எடப்பாடி ஆதரவாளர்களான வைகைச்செல்வன் உள்ளிட்டோர் விமர்சித்து வந்தனர். அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூட கூறியிருந்தனர். இந்தச் சூழலில் தான் சட்டசபையில் இந்த திடீர் மாற்றம் நடந்துள்ளது. அதேநேரம் சட்டசபை நாகரிகம் கருதியும் கூட செங்கோட்டையன் இதுபோல பேசியிருக்கலாம் என்றும் மோதல் போக்கு முடிவுக்கு வந்திருக்க வாய்ப்பில்லை என்றும் சிலர் தெரிவிக்கிறார்கள்.












Click it and Unblock the Notifications