அமலாக்கத்துறைக்கு விழுந்த அடி.. டாஸ்மாக் வழக்கில் சுப்ரீம் கோர்ட் உத்தரவு பற்றி NR இளங்கோ விளக்கம்!
சென்னை: "அரசியல்வாதிகள் போல டாஸ்மாக்கில் ரூ.1,000 கோடிக்கு ஊழல் நடந்திருப்பதாக அமலாக்கத்துறை அறிக்கை கொடுத்தது சட்டவிரோதமானது. அதைத்தான் நாங்கள் தொடர்ந்து சொன்னோம். உச்சநீதிமன்றம் அதை ஏற்றுக்கொண்டு தடை விதித்துள்ளது" என்று திமுக எம்.பியும், மூத்த வழக்கறிஞருமான என்.ஆர்.இளங்கோ தெரிவித்துள்ளார்.
டாஸ்மாக் நிறுவனத்தில் சுமார் 1000 கோடி ரூபாய் அளவுக்கு முறைகேடு நடந்துள்ளதாக எழுந்த புகார்களின் அடிப்படையில் டாஸ்மாக் நிறுவனத்திற்கு எதிராக அமலாக்கத்துறையினர் சட்டவிரோத பணபரிவர்த்தனை தடை சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்தனர். இதையடுத்து, டாஸ்மாக் நிறுவனத்தின் தலைமை அலுவலகத்தில் அமலாக்கத்துறையினர் கடந்த மார்ச் 6 முதல் 8 ஆம் தேதி வரை அதிரடி சோதனை நடத்தினர்.

உச்சநீதிமன்றத்தில்
அமலாக்கத்துறையின் நடவடிக்கைகளுக்கு எதிராக தமிழக அரசு சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தது. அந்த மனுவை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம், அமலாக்கத்துறையின் நடவடிக்கைகளுக்கு தடை விதிக்க மறுப்பு தெரிவித்தது. இதையடுத்து, கடந்த ஏப்ரல் 23 ஆம் தேதி தமிழ்நாடு அரசு மற்றும் டாஸ்மாக் நிர்வாகம் சார்பில் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது.
டாஸ்மாக் அமலாக்கத்துறை சோதனை விவகாரம் தொடர்பாக தமிழக அரசு மற்றும் டாஸ்மாக் நிர்வாகத்தின் மேல்முறையீட்டு மனுக்கள் உச்ச நீதிமன்றத்தில் தலைமை நீதிபதி பி.ஆர்.கவாய் மற்றும் நீதிபதி அகஸ்டின் ஜார்ஜ் மாசிஹ் ஆகியோர் அடங்கிய அமர்வில் இன்று காலை விசாரணைக்கு வந்தது.
அமலாக்கத்துறைக்கு சுப்ரீம் கோர்ட் கண்டனம்
இந்த வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்ற நீதிபதிகள், தனி நபர்கள் செய்த விதி மீறலுக்காக ஒட்டுமொத்தமாக ஒரு நிர்வாகத்தின் மீது நடவடிக்கை எடுப்பதா? என கேள்வி எழுப்பினர். அமலாக்கத்துறை வரம்பு மீறி நடக்கிறது என கண்டனம் தெரிவித்தனர். மேலும், அமலாக்கத்துறையா அனைத்து எல்லையையும் தாண்டி செயல்பட்டு கூட்டாட்சி அமைப்பை சிதைத்துள்ளது என நீதிபதிகள் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
டாஸ்மாக் முறைகேடு தொடர்பான விவகாரத்தில், அமலாக்கத்துறையினர் மேற்கொண்டு விசாரணை நடத்த தடை விதித்த உச்ச நீதிமன்ற நீதிபதிகள், தமிழ்நாடு அரசு மற்றும் டாஸ்மாக் நிர்வாகத்தின் மேல்முறையீட்டு மனுவுக்கு பதிலளிக்க அமலாக்கத்துறைக்கு உத்தரவிட்டனர்.
என்.ஆர்.இளங்கோ பேட்டி
இந்த நிலையில், டாஸ்மாக் வழக்கில் உச்ச நீதிமன்றத்தின் உத்தரவு தொடர்பாக திமுக சட்டத்துறை செயலாளர் வழக்கறிஞர் என்.ஆர்.இளங்கோ எம்.பி இன்று சென்னை அண்ணா அறிவாலயத்தில்ல் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது, டாஸ்மாக் வழக்கில் அமலாக்கத்துறை அரசியலமைப்பை மீறியுள்ளது என தெரிவித்துள்ளார்.
என்.ஆர்.இளங்கோ பேசுகையில், "2014-ஆம் ஆண்டிலிருந்து இப்போது வரை டாஸ்மாக் கடைகளில் தமிழக லஞ்ச ஒழிப்புத்துறை ரெய்டு நடத்தி கணக்கில் வராமல் பணம் வைத்திருந்தால் பணத்தை கைப்பற்றி வழக்குப்பதிவு செய்வார்கள். பின்னர் புலன் விசாரணை நடத்துவார்கள். கைப்பற்றப்பட்ட பணத்திற்கு ஊழியர்கள் தகுந்த விளக்கம் கொடுத்தால், வழக்குகள் முடித்து வைக்கப்படும். தகுந்த விளக்கம் கொடுக்காவிட்டால், லஞ்ச ஒழிப்புத்துறை மேற்கொண்டு நடவடிக்கையை தொடரும்.
முதல் முறையாக
டாஸ்மாக் ஊழியர்கள் மீது பதிவு செய்யப்பட்ட 47 வழக்குகளில் பெரும்பாலான வழக்குகள், சம்பந்தப்பட்ட ஊழியர்கள் தகுந்த விளக்கத்தை கொடுத்து வழக்குகள் முடித்து வைக்கப்பட்டு விட்டன. சில வழக்குகள் விடுதலையும் ஆகி இருக்கின்றன. இதையெல்லாம் வைத்துக்கொண்டு டாஸ்மாக் நிறுவனத்திற்கு உள்ளேயே சென்று அமலாக்கத்துறை சோதனை செய்வது முறையற்றது.
அரசியலமைப்பு சட்டத்தை மீறி இருக்கிறார்கள், கூட்டாட்சி என்ற அரசியலமைப்பு சட்டத்தின் அடிப்படை தத்துவத்தையே மீறி இருக்கிறார்கள். அரசியல் காரணங்களுக்காக இந்தச் சட்டத்தை மீறி செயல்பட்டிருக்கிறார்கள். எனவேதான் உச்ச நீதிமன்றம், நீங்கள் எல்லை மீறிச் சென்று கொண்டிருக்கின்றீர்கள் என்று சொல்லி இருக்கிறது. அமலாக்கத்துறையிடம் "நீங்கள் மாநில சுயாட்சிக்கு எதிராக நடக்கிறீர்கள்" என்ற கருத்தை முதல் முறையாக உச்சநீதிமன்றம் முன் வைத்திருக்கிறது.
அரசியல்வாதிகளைப் போல
அரசியல்வாதிகளைப் போல் அமலாக்கத்துறை செயல்பட்டது. வழக்கில் தொடர்புடைய ஊழியர்களை விசாரிக்காமல் டாஸ்மாக் அலுவலகத்தில் சோதனை நடத்தியதை கண்டிக்கிறோம். உச்ச நீதிமன்றத்தின் இந்த உத்தரவு எல்லா மாநிலங்களுக்குமானது. குறிப்பாக எதிர்க்கட்சிகள் ஆளும் அனைத்து மாநிலங்களுக்கும் உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பு பொருந்தும்.
பாஜக ஆட்சி செய்யாத மாநிலங்களில் அமலாக்கத்துறை நடவடிக்கை எடுத்துள்ளதா? டெல்லி, தமிழ்நாடு, மேற்கு வங்காளத்தில் தேர்தல் நேரத்தில் இதுபோன்ற அமலாக்கத்துறை சோதனை நடைபெறுகிறது. அரசியல்வாதிகள் போல டாஸ்மாக்கில் ரூ.1,000 கோடிக்கு ஊழல் நடந்திருப்பதாக அமலாக்கத்துறை அறிக்கை கொடுத்திருப்பது சட்டத்திற்கு விரோதமானது. அதைத்தான் திமுகவும், தமிழக அரசும் தொடர்ந்து சொல்லிக்கொண்டு வந்தோம். உச்ச நீதிமன்றம் அரசியல் ரீதியாக அமலாக்கத்துறை செயல்படுகிறது என்பதை முதல் முறையாக கருத்து தெரிவித்துள்ளது" எனத் தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications