தேதி குறித்த சுப்ரீம் கோர்ட்.. அமைச்சர் பதவியை துறக்கும் செந்தில் பாலாஜி? பரபர சட்ட ஆலோசனை!
சென்னை: உச்ச நீதிமன்ற உத்தரவை அடுத்து, செந்தில் பாலாஜி அமைச்சர் பதவியில் இருந்து விலகும் முடிவை எடுப்பாரா என எதிர்பார்ப்புகள் எழுந்துள்ளன. இன்னும் 4 நாட்களில் முடிவை உச்ச நீதிமன்றத்தில் சொல்ல வேண்டும் என்பதால் இதுதொடர்பாக திமுக தரப்பில் தீவிர சட்ட ஆலோசனை நடைபெற்று வருவதாக கூறப்படுகிறது.
ஜெயலலிதா ஆட்சிக் காலத்தில் செந்தில் பாலாஜி போக்குவரத்து துறை அமைச்சராக இருந்தபோது போக்குவரத்து துறையில் வேலை வாங்கி தருவதாக கூறி பலரிடம் பணம் மோசடி செய்ததாக மத்திய குற்றப்பிரிவு போலீசார் 3 குற்ற வழக்குகள் பதிவு செய்தனர். அந்த வழக்குகள் மீதான விசாரணை சென்னை எம்.பி, எம்.எல்.ஏக்கள் மீதான வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்தில் நிலுவையில் இருந்து வருகிறது.

செந்தில் பாலாஜி - அமலாக்கத்துறை
இந்த வழக்குகளின் அடிப்படையில் செந்தில் பாலாஜி சட்டவிரோத பணப் பரிவர்த்தனையில் ஈடுபட்டதாக அமலாக்கத்துறை வழக்குப்பதிவு செய்தது. பின்னர் சோதனையைத் தொடர்ந்து கடந்த 2023 ஜூன் மாதம் 14 ஆம் தேதி நள்ளிரவு செந்தில் பாலாஜி கைது செய்யப்பட்டார். அடுத்தடுத்து நீதிமன்றங்கள் ஜாமீன் மறுத்ததை அடுத்து அமைச்சர் பதவியை ராஜினாமா செய்தார்.
இந்த வழக்கில் 471 நாட்களுக்கு பிறகு கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் உச்சநீதிமன்றம் செந்தில் பாலாஜி நிபந்தனை ஜாமீன் வழங்கியது. பின்னர் அடுத்த சில நாட்களிலேயே அமைச்சராக பொறுப்பேற்றுக்கொண்டார் செந்தில் பாலாஜி. இந்நிலையில், செந்தில் பாலாஜி அமைச்சராக பதவியேற்றதால் அவருக்கு வழங்கப்பட்டுள்ள ஜாமீனை ரத்து செய்ய வேண்டும் என்று வித்யா குமார் என்பவர் மனு தாக்கல் செய்தார். அதேபோல் செந்தில் பாலாஜிக்கு வழங்கப்பட்ட ஜாமீனை ரத்து செய்யக்கோரி அமலாக்கத்துறையும் தனியாக மனு தாக்கல் செய்தது.
ஜாமீன் - அமைச்சர் பதவி
இந்த மனுக்கள் உச்ச நீதிமன்றத்தில் நீதிபதி அபயா எஸ் ஓகா மற்றும் ஏஜி மாசி தலைமையிலான அமர்வில் விசாரணை நடைபெற்றது. அப்போது நீதிபதி அபய் ஓகா அமர்வு நீங்கள் அமைச்சர் பதவி அல்லது ஜாமீன் இரண்டில் ஒன்றை தேர்வு செய்ய வேண்டும். நீங்கள் எதைத் தேர்வு செய்ய விரும்புகிறீர்கள்? எனக் கேள்வி எழுப்பினார்.
மேலும், செந்தில் பாலாஜிக்கு வழங்கப்பட்ட ஜாமீன் மெரிட் அடிப்படையில் அல்ல. பிரிவு 21ஐ மீறியதன் அடிப்படையில்தான் வழங்கப்பட்டது. விசாரணையில் ஏற்பட்ட தாமதம் மற்றும் நீண்ட சிறைவாசம் ஆகியவற்றின் அடிப்படையில் மட்டுமே செந்தில் பாலாஜிக்கு ஜாமீன் வழங்கப்பட்டது.
ஜாமீன் வழங்கப்பட்ட இரண்டு நாட்களுக்குள் அவர் அமைச்சராகப் பதவியேற்றதை ஏற்க முடியாது. அமைச்சராக இல்லை என்பதால்தான் அவருக்கு ஜாமீன் வழங்கப்பட்டது. அவருக்கு ஜாமீன் வேண்டுமா அல்லது அமைச்சர் பதவி வேண்டுமா என்பதை அவரே முடிவு செய்துகொள்ளட்டும். என்றும் தெரிவித்தார்.
ஆயிரக்கணக்கான சாட்சிகள்
அப்போது செந்தில் பாலாஜி தரப்பு வழக்கறிஞர் கபில் சிபல், செந்தில் பாலாஜியின் அதிகாரம், விசாரணையில் தாக்கத்தை ஏற்படுத்தும் என்று அச்சம் இருந்தால் விசாரணையை மாநிலத்திற்கு மாற்றலாம் என கூறினார். அதற்கு நீதிபதி அபய் எஸ் ஓகா, உங்கள் நிலைப்பாட்டைத் தெரிவிக்க மூன்று முறை வாய்ப்புகள் வழங்கி இருந்தோம் ஆனால் அதை நீங்கள் பயன்படுத்தவில்லை இந்த வழக்கை வேறு மாநிலத்துக்கு மாற்றுவது என்பது இயலாத காரியம். ஏனென்றால் ஆயிரக்கணக்கான சாட்சிகள் விசாரிக்கப்பட வேண்டி இருக்கிறது. அது பெரும் சிரமத்தையும் ஏற்படுத்தும் என்றார்.
திங்கட்கிழமைக்குள்
இதையடுத்து செந்தில் பாலாஜி தரப்பில் பதிலளிக்க அவகாசம் வேண்டும் என்று கோரியபோது, நீதிபதிகள் அவகாசம் அளிக்க மறுத்துவிட்டனர். வரும் திங்கள் கிழமைக்குள் (ஏப்ரல் 28) ஜாமீனா? அமைச்சர் பதவியா? என்பதை செந்தில்பாலாஜி தெரிவிக்க வேண்டும் என உச்சநீதிமன்ற நீதிபதிகள் உத்தரவிட்டு வழக்கை ஒத்திவைத்தனர்.
வரும் திங்கட்கிழமைக்குள் ஜாமீனா? அமைச்சர் பதவியா? என்பதை செந்தில்பாலாஜி தெரிவிக்க வேண்டும் என உச்சநீதிமன்ற நீதிபதிகள் உத்தரவிட்டு வழக்கை ஒத்திவைத்தனர். உச்ச நீதிமன்றம் கடுமை காட்டியுள்ள நிலையில், விரைவில் தனது அமைச்சர் பதவியை செந்தில் பாலாஜி ராஜினாமா செய்யக்கூடும் எனத் தெரிகிறது.
சட்ட ஆலோசனை
இதுதொடர்பாக சட்ட நிபுணர்களுடன் திமுக தலைமை ஆலோசனை நடத்தி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. செந்தில் பாலாஜி அமைச்சராக நீடிப்பது, அவருக்கு எதிரான வழக்கில் சாட்சியங்களை தடுக்கக்கூடும் என உச்ச நீதிமன்றம் சுட்டிக்காட்டி ஜாமீனா? அமைச்சர் பதவியா? என இரண்டு விரல்களை நீட்டி இருப்பதால், செந்தில் பாலாஜிக்கு பெரிய நெருக்கடி ஏற்பட்டுள்ளது.
அமைச்சர் பதவியில் தொடரும் நிலைப்பாட்டை எடுத்தால், உச்ச நீதிமன்றத்தின் கண்டனத்துக்கு ஆளாக நேரிடுவதோடு, ஜாமீன் ரத்து செய்யப்படும் வாய்ப்பு உள்ளது. எனவே, செந்தில் பாலாஜி தரப்பு என்ன நிலைப்பாட்டை சுப்ரீம் கோர்ட்டில் தெரிவிக்கப்போகிறது என பெரிய எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.












Click it and Unblock the Notifications