கண்ணகி முருகேசன் ஆணவக்கொலை வழக்கு: கொலையாளிகளின் ஆயுள் தண்டனையை உறுதி செய்தது உச்சநீதிமன்றம்!
டெல்லி: கண்ணகி முருகேசன் ஆணவக் கொலை வழக்கில் குற்றவாளிகளுக்கு உயர்நீதிமன்றம் வழங்கிய ஆயுள் தண்டனையை உறுதி செய்தது உச்சநீதிமன்றம். தண்டனை பெற்றவர்களில் கந்தவேல், ஜோதி, மணி ஆகியோர் தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுவை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.
22 ஆண்டுகளுக்கு முன்பு 2003ல் கடலூர் விருத்தாசலம் அருகே சாதி எதிர்ப்பு திருமணம் செய்த கண்ணகி - முருகேசன் ஆணவக் கொலை வழக்கில் குற்றவாளிகளுக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்ட தண்டனை உச்சநீதிமன்றத்தால் உறுதி செய்யப்பட்டுள்ளது.

கடலூர் மாவட்டம் விருத்தாசலம் அருகில் உள்ள புதுக்கூரைப்பேட்டையைச் சேர்ந்த மாற்று சமூகங்களைச் சேர்ந்த முருகேசன் மற்றும் கண்ணகி கடந்த 2003 ஆம் ஆண்டு காதல் திருமணம் செய்து கொண்டனர். இந்தத் திருமணத்துக்கு எதிர்ப்பு தெரிவித்த கண்ணகியின் பெற்றோர் மற்றும் உறவினர்கள், கண்ணகி மற்றும் முருகேசனுக்கு விஷம் கொடுத்துக் கொன்று, எரித்துக் கொலை செய்துள்ளனர். இந்தச் சம்பவம் குறித்து விருத்தாசலம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.
கொலை செய்யப்பட்ட முருகேசனின் தந்தை சாமிக்கண்ணு சென்னை உயர் நீதிமன்றத்தில், கடந்த 2004 ஆம் ஆண்டு வழக்குத் தொடர்ந்தார். வழக்கை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம் சிபிஐ விசாரணைக்கு மாற்றி உத்தரவிட்டது. இதையடுத்து, கண்ணகியின் தந்தை துரைசாமி, சகோதரர் மருதுபாண்டியன், உறவினர்கள் உள்பட 15 பேர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது.
இந்த வழக்கை விசாரித்த கடலூர் சிறப்பு நீதிமன்றம், கடந்த 2021 ஆம் ஆண்டு குற்றம் சாட்டப்பட்ட கண்ணகியின் சகோதரர் மருதுபாண்டியனுக்கு தூக்கு தண்டனை விதித்து தீர்ப்பளித்தது. மேலும், கண்ணகியின் தந்தை துரைசாமி மற்றும் உறவினர்கள் ரங்கசாமி, கந்தவேலு, ஜோதி, வெங்கடேசன், மணி, தனவேல், அஞ்சாபுலி, ராமதாஸ், சின்னதுரை, உதவி ஆய்வாளர் தமிழ்மாறன், காவல் ஆய்வாளர் செல்லமுத்து ஆகிய 12 பேருக்கு ஆயுள் தண்டணையும் விதித்து தீர்ப்பளித்தது. இந்த வழக்கிலிருந்து இருவரை விடுதலை செய்தது.
இந்நிலையில், மரண தண்டனையை உறுதிப்படுத்த, வழக்கை கடலூர் நீதிமன்றம், உயர் நீதிமன்றத்திற்கு அனுப்பியது. தண்டனையை ரத்து செய்ய கோரி 13 பேர் தரப்பிலும் சென்னை உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனுக்களும் தாக்கல் செய்யப்பட்டன.
இந்த மேல்முறையீடு மனுக்களை விசாரித்து வந்த, நீதிபதிகள் பி.என் பிரகாஷ், ஏ.ஏ.நக்கீரன் ஆகியோர் அடங்கிய அமர்வு இன்று பிறப்பித்த தீர்ப்பில், கண்ணகியின் சகோதரர் மருதுபாண்டியனுக்கு விதிக்கப்பட்ட மரண தண்டனையை ஆயுள் தண்டனையாக குறைத்தது உத்தரவிட்டனர்.
கண்ணகியின் தந்தை துரைசாமி, மற்றும் கந்தவேல், ஜோதி, வெங்கடேசன், மணி, தனவேல், அஞ்சாபுலி, ராமதாஸ், அப்போதைய காவல் ஆய்வாளர் செல்லமுத்து ஆகிய 9 பேருக்கு விதிக்கப்பட்ட ஆயுள் தண்டனையை உறுதி செய்து, அவர்களின் மேல் முறையீட்டு மனுக்களை தள்ளுபடி செய்தனர்.
மேலும், அப்போதைய உதவி ஆய்வாளர் தமிழ்மாறன் மீதான ஆயுள் தண்டனையை ரத்து செய்த நீதிபதிகள், வேறு ஒரு பிரிவில் 2 ஆண்டுகள் சிறை தண்டனையையும், வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் ஓராண்டு சிறை தண்டனையையும் உறுதி செய்தும் உத்தரவிட்டனர். துரைசாமியின் உறவினர்கள் ரங்கசாமி மற்றும் சின்னதுரை ஆகிய இருவரை விடுதலை செய்து நீதிபதிகள் தீர்ப்பளித்தனர்.
இதையடுத்து, கந்தவேல், ஜோதி, வெங்கடேசன், மணி ஆகியோர் தங்களுக்கு விதிக்கப்பட்ட ஆயுள் தண்டனையை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்தனர். தமிழகத்தையே உலுக்கிய முருகேசன்-கண்ணகி ஆணவக் கொலை வழக்கில் இன்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பு அளித்துள்ளது.
கொலையாளிகளுக்கான ஆயுள் தண்டனைனையை உறுதி செய்தது உச்சநீதிமன்றம்
உயர்நீதிமன்றம் அளித்த தீர்ப்பை உறுதி செய்தது உச்சநீதிமன்றம். குற்றவாளிகளான கந்தவேல், ஜோதி, மணி ஆகியோரின் மேல்முறையீட்டு மனுவை தள்ளுபடி செய்து தீர்ப்பு அளித்துள்ளது உச்ச நீதிமன்றம்.












Click it and Unblock the Notifications