தமிழக சட்டசபையில் பரபரப்பு.. உரையை முழுவதும் புறக்கணித்த ஆளுநர் ஆர்.என்.ரவி!
சென்னை: 2024ஆம் ஆண்டுக்கான தமிழ்நாடு சட்டசபை கூட்டத்தொடர் ஆளுநர் ஆர்.என்.ரவி உரையுடன் தொடங்கியது. சில நிமிடங்களில் ஆளுநர் தனது உரையை முழுவதும் வாசிக்காமல் புறக்கணித்தார். தமிழக அரசின் சாதனை திட்டங்கள் குறித்த அறிவிப்புகள் ஆளுநர் உரையில் இடம் பெற்றுள்ளன. எதையுமே ஆளுநர் வாசிக்காத நிலையில் சபாநாயகர் அப்பாவு முழு உரையை வாசித்து நிறைவு செய்தார்.
தமிழக சட்டசபை கூட்டத் தொடர் கடந்த 2023ஆம் ஆண்டு ஜனவரி 9ஆம் தேதி ஆளுநர் உரையுடன் தொடங்கியது. அதன் பின்னர் பல்வேறு கூட்டத் தொடர்கள் நடைபெற்றன. கடந்த ஆண்டு நவம்பர் 18ஆம் தேதியன்று சட்டசபை சிறப்புக் கூட்டம் நடைபெற்றது. ஆளுநர் அனுமதிக்காமல் திருப்பி அனுப்பிய 10 சட்ட மசோதாக்களை மீண்டும் ஆய்வு செய்து நிறைவேற்றுவதற்காக சிறப்பு கூட்டம் கூட்டப்பட்டது.

கடந்த ஆண்டு சட்டப்பேரவை முதல் கூட்டத்தில் ஆளுநர் ஆர்.என்.ரவி உரையாற்றியபோது, தமிழக அரசு தயாரித்து அளித்த உரையில் சிலவற்றை தவிர்த்தும், சிலவற்றை சேர்த்தும் வாசித்தார். இதனால், ஆளுநர் இருக்கும்போதே, அவருக்கு எதிராக சட்டப்பேரவையில் தீர்மானம் முன்மொழியப்பட்டது. அப்போது, ஆளுநர் அவையில் இருந்து வெளியேறிய நிகழ்வு பரபரப்பை ஏற்படுத்தியது.
ஏற்கெனவே, பல்வேறு நிகழ்ச்சிகளில் ஆளுநர் தெரிவித்த கருத்துகளால், அரசுக்கும், ஆளுநருக்கும் இடையே நிலவிய பனிப்போர் மேலும் தீவிரமடைந்த நிலையில், கடந்த ஆண்டு சட்டப்பேரவை கூட்டத்தையும் ஆளுநர் முடித்து வைக்காமல் இருந்தார். இந்த காரணங்களால் இந்த ஆண்டு முதல் கூட்டத்தில் ஆளுநர் பங்கேற்பாரா என்பது சந்தேகமாக இருந்தது.
ஆனால், மசோதாக்கள் விவகாரத்தில் உச்ச நீதிமன்றத்தின் கருத்தை ஏற்று, ஆளுநர் ரவியை, முதல்வர் ஸ்டாலின் சந்தித்து பேசினார். இந்த சூழலில், கடந்த மாதம் சட்டப்பேரவை கூட்டத் தொடரை முடித்து வைக்க ஆளுநர் அனுமதி அளித்தார். இதையடுத்து, இந்த ஆண்டுக்கான முதல் சட்டப்பேரவை கூட்டத்தில் ஆளுநர் உரை இடம்பெறுவது உறுதியானது.
கடந்த 1ஆம் தேதி செய்தியாளர்களை சந்தித்த சட்டசபை சபாநாயகர் அப்பாவு, சட்டசபை பிப்ரவரி 12ஆம் தேதி காலை 10 மணிக்கு கூடும். அன்றைய தினம்ஆளுநர் ஆர்.என்.ரவி உரையாற்றுவார்'' என்று அறிவித்தார். இதைத் தொடர்ந்து, கடந்த சில நாட்களுக்கு முன்பு, ஆளுநர் ஆர்.என்.ரவியை சந்தித்த சபாநாயகர் அப்பாவு, சட்டப்பேரவை நிகழ்வுகளில் பங்கேற்க வருமாறு முறைப்படி அழைப்பு விடுத்தார்.
இந்த நிலையில் 2024ஆம் ஆண்டுக்கான முதல் கூட்டத் தொடர் இன்று ஆளுநர் ஆர்.என்.ரவி உரையுடன் தொடங்கியுள்ளது காலை 9.57 மணிக்கு தலைமைச்செயலகத்திற்கு வந்த ஆளுநர் ஆர்.என்.ரவியை பேரவை தலைவர் அப்பாவு, துணை தலைவர் பிச்சாண்டி மற்றும் பேரவை செயலர் சீனிவாசன் ஆகியோர் பூங்கொத்து கொடுத்து வரவேற்றனர்.
பின்னர் காவல்துறையினரின் மரியாதை ஆளுநருக்கு அளிக்கப்பட்டு பேரவைக்கு சிவப்பு கம்பள மரியாதையுடன் அழைத்து செல்லப்பட்டார். இதன் பிறகு, தமிழ்த்தாய் வாழ்த்து இசைக்கப்படும். பின்னர், இந்தாண்டுக்கான முதல் கூட்டத்தொடரை தொடங்கி வைக்கும் விதமாக ஆளுநர் ஆர்.என்.ரவி தமிழ்நாடு அரசு தயாரித்து கொடுத்தொடங்கினார்
அவரது உரையின் தமிழாக்கத்தை சட்டசபை தலைவர் அப்பாவு வாசிக்கிறார். இறுதியாக தேசிய கீதம் பாடப்பட்டு, ஆளுநருக்கு அளிக்கப்படும் மரபுபடி அவரை வழியனுப்பி வைத்து நன்றி தெரிவிக்கப்படும். அதனை தொடர்ந்து, பேரவை தலைவர் தலைமையில் அலுவல் ஆய்வு குழு கூடி சபையை எத்தனை நாட்களுக்கு நடத்தலாம் என தீர்மானிக்கப்படும்.
அதன்பின் ஆளுநர் உரை மீதான நன்றி தெரிவிக்கும் தீர்மானம் முன்மொழியப்பட்டு விவாதம் நடத்தப்பட உள்ளது. இதனை தொடர்ந்து, வரும் 19ஆம் தேதி 2024-25ம் ஆண்டிற்கான நிதிநிலை அறிக்கையை நிதியமைச்சர் தங்கம் தென்னரசு தாக்கல் செய்வார். 20ஆம் வேளாண் நிதி நிலை அறிக்கையை வேளாண்மைத் துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் தாக்கல் செய்வார். இன்றைய ஆளுநரின் உரையில் முக்கிய அறிவிப்புகள் இருக்க வாய்ப்புகள் இருப்பதாக தலைமைச்செயலக வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
கடந்தாண்டு நடந்த ஆளுநர் உரையின்போது அரசு தயாரித்த உரையை தவிர்த்து சில பத்திகளை வாசிக்காமல், சில வரிகளை அவரே சேர்த்தும் வாசித்தார். இதனால், சட்டசபையில் இருந்த உறுப்பினர்கள் ஆளுநரின் இந்த செயலை கடுமையாக சாடினர். உடனடியாக ஆளுநர் தானாக சேர்த்து படித்த பகுதி அவை குறிப்பில் இடம் பெற கூடாது என்றும், அரசின் சார்பில் தயாரித்து சபைக்கு அளிக்கப்பட்ட உரையே இடம் பெற வேண்டும் என்றும் முதல்வர் மு.க.ஸ்டாலின் கொண்டு வந்த தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
ஆண்டின் முதல் கூட்டத்தொடர் என்பதால் சட்டசபை புதுப்பொலிவுடன் தயாராகி உள்ளது. தமிழக அரசின் சாதனைத் திட்டங்கள் ஆளுநர் உரையில் இடம் பெற்றுள்ளன. உரை வாசிக்கத் தொடங்கிய உடனேயே தேசிய கீதம் புறக்கணிக்கப்பட்டதாக ஆளுநர் ரவி. குற்றம் சாட்டினார். தமிழக அரசின் சாதனைகள் எதையுமே வாசிக்காமல் நன்றி வணக்கம் கூறி சில நிமிடங்களிலேயே அமர்ந்தார் ஆளுநர் ரவி. இதனையடுத்து முழு உரையையும் வாசித்து முடித்தார் சபாநாயகர் அப்பாவு.












Click it and Unblock the Notifications