தமிழக பாஜகவில் மாற்றம்? எச்.ராஜாவுக்கு அடித்த லக்! முக்கிய பொறுப்பை கொடுத்த மேலிடம்..அப்போ தமிழிசை?
சென்னை: தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை அரசியல் படிப்புக்காக லண்டன் சென்று இருக்கும் நிலையில் பாஜக தலைமை ஒரு முக்கிய அறிவிப்பை வெளியிட்டு இருக்கிறது. தமிழகத்தில் பாஜக நடவடிக்கைகள் மற்றும் செயல்பாடுகளை கண்காணிக்க பாஜக மூத்த தலைவர் எச். ராஜா தலைமையில் குழு அமைத்து உத்தரவிட்டிருக்கிறார் கட்சியின் தேசிய தலைவர் ஆன ஜேபி நாட்டா.
நடந்து முடிந்த மக்களவை தேர்தலில், தமிழக அதிமுக-பாஜக கூட்டணி முறிந்ததால் தான் இரு கட்சிகளும் படுதோல்வியை சந்தித்தது. இதற்கு காரணம் அண்ணாமலை தான் என சமூக வலைதளங்களில் பாஜகவினர் விமர்சித்து வருகின்றனர்.

அதிமுக பாஜக பாமக தேமுதிக உள்ளிட்ட கட்சிகள் அடங்கிய கூட்டணி உருவாகி இருந்தால் பெரிய அளவிலான வெற்றி கிடைத்திருக்கும் குறைந்தது 5 நாடாளுமன்ற உறுப்பினர்களையாவது பெற்றிருக்கலாம் என பேசப்பட்டு வருகிறது.
மேலும் கூட்டணி தொடர்பாக பேசிய அதிமுக முன்னாள் அமைச்சர் எஸ்பி வேலுமணி அண்ணாமலையின் பேச்சு காரணமாக கூட்டணி அமையாமல் போனது.. இதனால் தான் பாஜக கடும் தோல்வியை சந்தித்தது என கூறியிருந்தார். அவரது கருத்தை தமிழிசை சௌந்தரராஜன் வரவேற்று பேசியிருந்தார். குறிப்பாக கட்சியில் ரவுடிகள் இருப்பதாக தமிழிசை பேசியது கட்சிக்குள் மிகப் பெரிய சலசலப்பை ஏற்படுத்தியது. இதனால் அண்ணாமலை ஆதரவாளர்கள் அவரை மிகக் கடுமையாக விமர்சித்தனர்.
தற்போது தமிழக பாஜக தலைவராக இருக்கும் அண்ணாமலை அரசியல் தொடர்பான படிப்புக்காக லண்டன் சென்றிருக்கிறார். இதன் காரணமாக அவர் ஆறு மாதம் லண்டனில் தங்கி படிக்கவிருக்கிறார். அவர் வெளிநாட்டில் இருக்கும் போது கட்சி பணிகளை தமிழக பாஜக அமைப்புச் செயலாளராக இருக்கும் கேசவ விநாயகம் மேற்கொள்வார் எனவும், அண்ணாமலையே கட்சிப் பணிகளை கவனித்துக் கொள்வார் எனவும் தகவல்கள் உலாவின.

மேலும் தான் அமெரிக்கா சென்றாலும் தமிழக அரசியலை உற்று கவனிப்பேன், அறிக்கை மூலமாக ஆளும் கட்சியை தட்டிக் கேட்பேன் என அண்ணாமலை பேசியிருக்கிறார். இதன் காரணமாக அண்ணாமலை நேரடியாக கட்சியை தனது கட்டுப்பாட்டில் வைத்திருப்பார் என அவரது ஆதரவாளர்கள் கூறி வந்தனர். இந்த நிலையில் தமிழக பாஜக மட்டுமல்லாது அனைத்து தமிழக அரசியல் கட்சிகளையும் உற்று நோக்க வைக்கும் ஒரு நிகழ்வு நடந்திருக்கிறது. தமிழக பாஜகவுக்கு ஒருங்கிணைப்பு குழுவை அமைத்து உத்தரவிட்டிருக்கிறார் பாஜக தேசிய தலைவரான நட்டா.
பாஜக மாநில தலைவர் அண்ணாமலை இங்கிலாந்தில் செப்டம்பர், அக்டோபர், நவம்பர் ஆகிய மூன்று மாதங்கள் தங்கி இருக்கும் நிலையில் கட்சிப் பணிகளை கண்காணிக்கவும் செயல்பாடுகளை கட்டுப்படுத்தவும் ஒருங்கிணைப்பு குழு நியமிக்கப்பட்டு இருக்கிறது. இந்த குழுவில் ஒருங்கிணைப்பாளராக தமிழக பாஜகவின் மூத்த தலைவரும் தேசிய செயற்குழு உறுப்பினருமான எச். ராஜா நியமிக்கப்பட்டு இருக்கிறார்.
உறுப்பினர்களாக பாஜக துணை தலைவர் சக்கரவர்த்தி, துணைத் தலைவர் கனக சபாபதி, மாநில பொதுச் செயலாளர் முருகானந்தம், பொதுச்செயலாளர் ராம சீனிவாசன், மாநில பொருளாளர் எஸ்.ஆர்.சேகர் ஆகியோர் நியமிக்கப்பட்டிருக்கின்னர். இவர்கள் கட்சியின் செயல்பாடுகளை நிர்வாக ரீதியாக கவனிப்பார்கள் ஆனால் பெரிய அளவில் மாற்றம் ஏதும் செய்யப் போவதில்லை என கூறப்படுகிறது.
இந்த நிலையில் இது தொடர்பாக பேசிய ராம.சீனிவாசன்,"தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை, லண்டனுக்கு மேற்படிப்புக்காக சென்றிருக்கும் நிலையில் கட்சியின் செயல்பாடுகளை ஒருங்கிணைக்கவே இந்த குழு என்றும், பெரிய அளவில் மாற்றங்கள் எதுவும் இந்த குழு செய்யாது எனக் கூறியிருக்கிறார், மேலும் அண்ணாமலை வரும் வரை தான் இந்த குழு செயல்படும் எனவும் அவர் தெரிவித்திருக்கிறார்.
இந்நிலையில் ஏற்கனவே தமிழக பாஜக தலைவராக இருந்தவரும், தெலுங்கானா மாநில ஆளுநர் பதவியை ராஜினாமா செய்துவிட்டு, மக்களவை தேர்தலில் களம் இறங்கிய தமிழிசை சவுந்திரராஜனுக்கு இந்த குழுவில் இடம் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications