கருணாநிதி நாணய வெளியீட்டு விழாவை நடத்தியது எந்த அரசு? முதல்வர் மு.க.ஸ்டாலின் சுளீர் விளக்கம்!
சென்னை: தமிழ்நாடு முன்னாள் முதல்வர் கருணாநிதியின் நூற்றாண்டு நினைவு நாணய வெளியீட்டு விழாவை நடத்தியது மத்திய அரசா? மாநில அரசா? என்ற சர்ச்சைக்கு தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று விளக்கம் அளித்துள்ளார். தமிழ்நாடு அரசு நடத்திய விழாவில் கலந்து கொண்டதாக மத்திய அமைச்சர்கள் ராஜ்நாத் சிங், எல்.முருகன் தெரிவித்திருந்தனர். தமிழ்நாடு அரசு நடத்திய விழாவில் ஏன் காங்கிரஸ் தலைவர்கள் அழைக்கப்படவில்லை என அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கேள்வி எழுப்பி இருந்தார்.
சென்னையில் அண்மையில் கருணாநிதி நூற்றாண்டு நாணய வெளியீட்டு விழா நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் மத்திய அமைச்சர்கள் ராஜ்நாத் சிங், எல்.முருகன் மற்றும் தமிழ்நாட்டு பாஜக தலைவர் என பலரும் பங்கேற்றனர். மத்திய அமைச்சர்கள், பாஜக தலைவர்களை அழைத்து தமிழ்நாட்டில் ஆளும் திமுக அரசு கருணாநிதி நாணய வெளியீட்டு விழாவை நடத்தியது சர்ச்சையானது.

இது தொடர்பாக அண்ணா திமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டிருந்த அறிக்கையில், தமிழ்நாட்டில் ஆளும் திமுக அரசு நடத்திய விழாவில் ஏன் கூட்டணிக் கட்சித் தலைவர்கள் அழைக்கப்படவில்லை? ராகுல் காந்தி அழைக்கப்படவில்லை என சரமாரியாக கேள்வி எழுப்பி இருந்தார். மேலும் பா.ஜ.க-வுடன் கள்ள உறவு என எங்களைப் பார்த்து, மீண்டும் மீண்டும் முதலமைச்சர் சொன்ன போது அவருக்கு இனித்தது. இப்போது, அவர்களைப் பார்த்து மீண்டும் மீண்டும் அல்ல, ஒரு முறை சொன்னதற்கே மூளை இருக்கிறதா எனக் கேட்கிறார். அப்படி என்றால், நாங்கள் எத்தனை முறை தி.மு.க. முதலமைச்சருக்கு மூளை இருக்கிறதா? என்று கேட்க வேண்டும். டெல்லிக்கு காவடி எடுத்து தப்பிவிடலாம் என்று நினைத்தால் புத்திசாலிகளான தமிழக மக்கள் தக்க பாடம் புகட்டுவார்கள் என்று எச்சரிக்கிறேன் எனவும் கூறினார்.
இதற்கு திமுக தரப்பில், மத்திய அரசுதான் இந்த விழாவை நடத்தியதாக விளக்கம் தரப்பட்டது. ஆனால் மத்திய அமைச்சர்கள் ராஜ்நாத் சிங், எல்.முருகன் உள்ளிட்டோர் தமிழ்நாடு அரசு அழைத்ததால் நிகழ்ச்சியில் பங்கேற்றதாக தெரிவித்திருந்தனர். இதனால் சர்ச்சை தொடர்ந்து நீடித்து வந்தது.
இந்த நிலையில் சென்னையில் இன்று செய்தியாளர்களைச் சந்தித்த தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலினிடம் இது குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. இதற்கு பதிலளித்த முதல்வர் ஸ்டாலின், மத்திய அரசின் கட்டுப்பாட்டில் உள்ள நிகழ்ச்சியை தமிழ்நாடு அரசு நடத்தியது என விளக்கம் அளித்தார்.


Click it and Unblock the Notifications
