ஸ்டாலின் இதய துடிப்பில் வேறுபாடு.. இன்று நடந்த முக்கிய சிகிச்சை.. அப்பல்லோ மருத்துவமனை விளக்கம்!
சென்னை: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திடீர் மயக்கம் காரணமாக கிரீம்ஸ் சாலையில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இந்நிலையில் அவருக்கு வழங்கப்பட்ட சிகிச்சை என்ன? எப்போது டிஸ்சார்ஜ் செய்யப்படுவார் என்பது குறித்து மருத்துவமனை தரப்பில் விளக்கமளிக்கப்பட்டிருக்கிறது.
அதில், "தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் அவர்களுக்கு ஏற்பட்ட மயக்கம் தொடர்பான அறிகுறிகளுக்காக, கிரீம்ஸ் சாலையில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் பல்வேறு பரிசோதனைகள் செய்யப்பட்டன. இந்தப் பரிசோதனைகளில், முதல்வருக்கு ஏற்பட்ட மயக்க அறிகுறிகள் இதயத்துடிப்பில் ஏற்பட்ட மாறுபாடுகள் காரணமாகவே நிகழ்ந்தது கண்டறியப்பட்டது.

இதய சிகிச்சை நிபுணர் டாக்டர் ஜி. செங்கோட்டுவேலு தலைமையிலான மருத்துவ நிபுணர் குழுவின் பரிந்துரையின் பேரில், இன்று காலை இந்த இதயத் துடிப்பு மாறுபாடுகளை சரி செய்வதற்கான சிகிச்சை நடைமுறை முதல்வருக்கு மேற்கொள்ளப்பட்டது. இன்று மேற்கொள்ளப்பட்ட ஆஞ்சியோகிராம் பரிசோதனை சீராக (normal) இருந்தது தெரியவந்துள்ளது.
முதல்வர் தற்போது ஆரோக்கியமாக இருக்கிறார். அடுத்த இரண்டு நாட்களில் தனது வழக்கமான பணிகளை மீண்டும் தொடங்குவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது" என தெரிவிக்கப்பட்டிருக்கிறது.
கடந்த 21ம் தேதி காலை முதலமைச்சர் வழக்கம்போல நடைபயிற்சி மேற்கொண்டிருந்தார். அப்போது அவருக்கு லேசனா தலை சுற்றல் ஏற்பட்டிருந்தது. இதனையடுத்து உடனடியாக அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இதனையடுத்து அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. தமிழக சட்டமன்ற தேர்தலுக்கு இன்னும் சில மாதங்கள் மட்டுமே இருக்கும் நிலையில் முதல்வர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தது பேசு பொருளாகியிருந்தது.
இருப்பினும் லேசான தலைசுற்றல்தான், அச்சப்படும் அளவுக்கு எதுவும் இல்லை என்று மருத்துவமனை விளக்கமளித்தது. மட்டுமல்லாது மருத்துவமனையிலிருந்தவாறு, அலுவலக பணிகளை மேற்கொள்ளலாம் என்றும் மருத்துவர்கள் கூறியிருந்தனர். இதனையடுத்து தலைமை செயலாளர் உள்ளிட்ட அதிகாரிகளுடன் முதலமைச்சர் கடந்த 22ம் தேதியன்று ஆலோசனை நடத்தியிருந்தார்.
அன்றைய தினம் மாவட்ட ஆட்சியர்களிடம் வீடியோ கான்பிரன்ஸ் வாயிலாக கலந்துரையாடியிருந்தார். இது குறித்து தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டிருந்த அவர், "'உங்களுடன் ஸ்டாலின்' திட்டம் குறித்து அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினேன். முகாம்கள் திட்டமிட்டபடி நடைபெறுகிறதா? அவற்றில் பெறப்பட்ட மனுக்கள் எத்தனை? தீர்வு காணப்பட்டவை எத்தனை? உள்ளிட்ட விவரங்களை தலைமைச் செயலாளரிடம் கேட்டறிந்தேன். மக்களின் மனுக்கள் மீது தீர்வு காண்பதில் எந்தவிதமான தொய்வும் ஏற்பட்டுவிடக் கூடாது என்று ஆலோசனையில் அறிவுறுத்தியுள்ளேன்" என்று தெரிவித்திருந்தார்.
நேற்றைய தினமும் முதலமைச்சர், மருத்துவமனையில் இருந்தவாறு அலுவலக பணிகளை மேற்கொண்டிருந்தார். கன்னியாகுமரி மாவட்ட ஆட்சித் தலைவர் ஆர்.அழகு மீனா, காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சித் தலைவர் கலைச்செல்வி மோகன், கோயம்புத்தூர் மாவட்ட ஆட்சித் தலைவர் பவன்குமார் ஜி. கிரியப்பனவர், ஆகியோருடன் ஆய்வு மேற்கொண்டார். இன்றும் ஆய்வுகள் தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
தேர்தல் பிரசாரத்திற்கு திமுக முழு வேகத்தில் தயாராகி வருகிறது. மாநிலம் முழுவதும் சுற்றி தீவிர பிரசாரத்தை முதலமைச்சர் மேற்கொள்ள இருக்கிறார். இதற்காக உடல்நலம் தயார் நிலையில் இருக்க வேண்டும். எனவே மருத்துவமனை நிர்வாகம் முதலமைச்சரின் உடல்நிலையை தொடர்ந்து கண்காணித்து வருகிறது. இரண்டு நாட்களில் தனது வழக்கமான பணிகளை மீண்டும் தொடங்குவார் என்று மருத்துவமனை நிர்வாகம் கூறியிருக்கிறது. எனவே முதலமைச்சர் இரண்டு நாட்களில் டிஸ்சார்ஜ் ஆவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.












Click it and Unblock the Notifications