கருப்பு மை டப்பாவுடன் கழக கண்மணிகள்.. கடிதம் எழுதிய ஸ்டாலின்! ’இதற்கு’ பதில் எங்கே? விடாத அண்ணாமலை.!
சென்னை: தேசிய கல்விக் கொள்கையில் முன்மொழிக் கொள்கையை தமிழ்நாடு அரசு கடுமையாக எதிர்த்து வரும் நிலையில் தமிழகத்தில் மீண்டும் ஒரு மொழிப் போரை எதிர்கொள்ள தயார் என திமுக தொண்டர்களுக்கு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியிருந்தார். இந்த நிலையில் திமுகவின் போலி நாடகங்களை மக்கள் நம்ப மாட்டார்கள் என பதிலடி கொடுத்துள்ளார் தமிழக பாஜக தலைவரான அண்ணாமலை.
மத்திய அரசு தேசிய கல்விக் கொள்கையை அறிமுகப்படுத்தியுள்ள நிலையில் அதில் மும்மொழிக் கொள்கை இருப்பதாக தமிழ்நாடு அரசு எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. தமிழக அரசுக்கு தரவேண்டிய நிதியை மத்திய கல்வித்துறை விடுவிக்கவில்லை.

இதை தொடர்ந்து செய்தியாளர்கள் கேள்விக்கு பதில் அளித்த மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான், தேசிய கல்விக் கொள்கையை ஏற்றுக் கொண்டால்தான் நிதி வழங்குவோம் எனக் கூறியிருந்தார். அவரது பேச்சு கடும் அதிர்வலைகளை ஏற்படுத்திய நிலையில் திமுக உள்ளிட்ட கட்சிகள் கண்டனம் தெரிவித்துள்ளன.
தொடர்ந்து மத்திய அரசு இந்தியை திணிப்பதாக கூறி போராட்டம் வெடித்துள்ளது. தமிழகத்தில் பல்வேறு பகுதிகளில் திமுகவினர் கருப்பு மை கொண்டு மத்திய அரசு அலுவலகங்களில் எழுதப்பட்டுள்ள இந்தி எழுத்துக்களை அழித்து வருகின்றனர். இதற்கிடையே இது தொடர்பாக கடிதம் எழுதி இருந்தார் தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின். அதில்," நாம் எந்த மொழிக்கும் எதிரியில்லை. யார் எந்த மொழியைக் கற்பதற்கும் தடையாக நிற்பதில்லை. அதே நேரத்தில், தாய்மொழியாம் தமிழை அழிக்க நினைக்கும் ஆதிக்க மொழி எதுவாக இருந்தாலும் அதை அனுமதிப்பதில்லை என்பதால்தான் இருமொழிக் கொள்கையைக் கடைப்பிடிக்கிறோம்.
தமிழ்நாட்டை வஞ்சிப்பதையே பா.ஜ.க. தன் கொள்கையாகக் கொண்டுள்ளது. தமிழ்நாட்டில் உள்ள பா.ஜ.க. நிர்வாகிகளோ தமிழுக்குத் துரோகம் செய்யும் இந்தி- சமஸ்கிருதச் சேவகர்களாக இருக்கிறார்கள். தமிழ்நாட்டு மக்களிடமிருந்து வரியைப் பெற்றுக்கொண்டு, தமிழ்நாட்டு மாணவர்களின் கல்விக்கான நிதியை ஒதுக்காமல் ஒன்றிய பா.ஜ.க அரசு வஞ்சித்து வரும் போக்கை தமிழ்நாட்டின் பள்ளி மாணவர்களும்கூட தெளிவாக உணர்ந்திருக்கிறார்கள்.
இளம் வயதினர் முதல் மூத்த குடிமக்கள் வரை தமிழ் மண்ணில் வாழ்கின்றவர்களின் தாய்மொழிப் பற்றும் இன உணர்வும் ஆதிக்க மொழியிடமிருந்து அன்னைத் தமிழைக் காக்கும் என்ற உறுதியான நம்பிக்கை எனக்கு இருக்கிறது. அந்த நம்பிக்கையுடன்தான் இன்னொரு மொழிப் போர்க்களத்தை நாம் எதிர்கொள்ளத் தயாராக இருக்கிறோம்" என கூறியிருந்தார்.
இந்த நிலையில் திமுகவின் போலி நாடகங்களை மக்கள் நம்ப மாட்டார்கள் என பதிலடி கொடுத்துள்ளார் தமிழக பாஜக தலைவரான அண்ணாமலை. இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில்," திமுக தலைவரும், தமிழக முதலமைச்சருமான திரு மு.க.ஸ்டாலின் அவர்கள், கருப்பு பெயிண்ட் டப்பாவுடன் சுற்றி வரும் கழகக் கண்மணிகளுக்கு கடிதம் ஒன்று எழுதியிருப்பதாக அறிந்தேன். அதில் அவர், நாம் எந்த மொழிக்கும் எதிரியில்லை. யார் எந்த மொழியைக் கற்பதற்கும் தடையாக நிற்பதில்லை என்று தெரிவித்திருக்கிறார்.
CBSE மற்றும் மெட்ரிகுலேஷன் தனியார் பள்ளிகளில் பயிலும் மாணவர்களுக்கு வழங்கப்படும் மும்மொழி கற்கும் வாய்ப்பு, அரசுப் பள்ளி மாணவர்களுக்கு மறுக்கப்படுவது ஏன் என்ற கேள்விக்கு, இதுவரை பதில் அளிக்க மறுத்து வருகிறார் முதலமைச்சர் ஸ்டாலின். மும்மொழி கற்கத் தடை இல்லை, ஆனால் நீங்கள் கற்கவேண்டும் என்றால் திமுகவினர் நடத்தும் CBSE அல்லது மெட்ரிகுலேஷன் பள்ளிகளில் உங்கள் குழந்தைகளைச் சேர்த்துவிடுங்கள் என்கிறாரா திரு ஸ்டாலின்?
உங்கள் போலி நாடகங்களை தமிழக மக்கள் இனியும் நம்பப்போவதில்லை. பணம் படைத்தவர்களுக்கு ஒரு நீதி, ஏழை எளியவர்களுக்கு ஒரு நீதி என்ற திமுகவின் சாயம் வெளுக்கத் தொடங்கிவிட்டது. மேலும், பெயிண்ட் டப்பாவுடன் சுற்றி வரும் உங்கள் கட்சியினருக்கு, இந்தி எது ஆங்கிலம் எது என்பதை, உங்கள் அறிக்கை விளக்க மறந்து போனது உள்ளபடி வருத்தமே." என கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications