வருடத்திலேயே இல்லாத அதிகரிப்பு.. ஒரே நாளில் ஆயிரத்தை நெருங்கியது.. தமிழகத்தில் கொரோனா இரண்டாவது அலை?
சென்னை: தமிழகத்தில் மீண்டும் கொரோனா வைரஸ் பாதிப்பு மிக வேகமாக அதிகரித்து வருகிறது. ஒரே நாளில் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 1000 என்ற அளவுக்கு நெருங்கி விட்டது. இதன் மூலம் தமிழகத்தில் கொரோனா வைரஸ் இரண்டாவது அலை ஏற்பட்டுள்ளதா என்று சந்தேகம் எழுந்துள்ளது.
Recommended Video

கடந்த வருடம் கொரோனா வைரஸ் பாதிப்பு பரவிய காலகட்டத்தில் தமிழக சுகாதாரத்துறை மாலை வேளைகளில் வெளியிடக்கூடிய அந்த புள்ளிவிபர அறிவிப்பை மக்கள் மிகவும் உன்னிப்பாக கவனிப்பார்கள்.
காலப்போக்கில் வைரஸ் பாதிப்பு குறையத் தொடங்கியதால் அது வெறும் சம்பிரதாய அறிவிப்பாக மட்டுமே பார்க்கப்பட்டது. பெரிதாக யாரும் கவனம் கொடுக்கவில்லை.

புள்ளி விவரம்
ஆனால் இப்போது திடீரென கொரோனா வைரஸ் நோய் தொற்றுகள் அதிகரித்து இருப்பதன் காரணமாக அரசின் புள்ளிவிவர அறிக்கை மீது மறுபடியும் மக்களின் கவனம் செல்லத் தொடங்கியுள்ளது. இன்று தமிழக சுகாதாரத் துறை வெளியிட்டுள்ள அறிக்கையில் உள்ள அம்சங்கள் சற்று அச்சுறுத்துவதாக இருக்கின்றன. அதன்படி கடந்த 24 மணி நேரத்தில் தமிழகம் முழுக்க 945 புதிய கேஸ்கள் பதிவாகியுள்ளது. அதாவது கிட்டத்தட்ட 1000 என்ற அளவை நோக்கி சென்று கொண்டிருக்கிறது கேஸ் எண்ணிக்கை.

சென்னை டாப்
சென்னையில் தான் அதிகப்படியான கொரோனா வைரஸ் பாதிப்பு பதிவாகியுள்ளது. நேற்று இந்த நகரத்தில் 352 பேருக்கு தொற்றுநோய் உறுதிசெய்யப்பட்ட நிலையில் இன்று அது 395 என்ற அளவுக்கு அதிகரித்துள்ளது. தமிழகத்தில் இன்று 576 பேர் கொரோனா வைரஸ் நோயிலிருந்து குணமடைந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர்.

கோவைக்கு 2வது இடம்
சென்னைக்கு அடுத்தபடியாக கோவையில் ஒரே நாளில் 107, கொரோனா வைரஸ் தொற்றுக்கள் பதிவாகியுள்ளன. செங்கல்பட்டு மாவட்டத்தில் 103, திருவள்ளூர் மாவட்டத்தில் 56, காஞ்சிபுரம் மாவட்டத்தில் 30, திருப்பூர் மாவட்டத்தில் 22 பேருக்கு நோய் தொற்று பதிவாகியுள்ளது. மதுரை மாவட்டத்தைப் பொறுத்தளவில் 19 , கன்னியாகுமரி மாவட்டத்தில் 14, வேலூர் மாவட்டத்தில் 13, சேலம் மாவட்டத்தில் 13, திண்டுக்கல் மாவட்டம் 12, ஈரோடு 12 என்று நோய் பரவல் பதிவாகியுள்ளது. நெல்லை, நாகை, தஞ்சை மாவட்டங்களில் தலா 10 கொரோனா வைரஸ் கேஸ்கள் பதிவாகியுள்ளன.

அதிகம்
நீண்ட நாட்களுக்குப்பின் இதுவரை இல்லாத வகையில் ஒரே நாளில் 945 கொரோனா வைரஸ் கேஸ்கள் தமிழகத்தில் பதிவாகியுள்ளன. தமிழகத்தில் 938 பேர், வெளிமாநிலங்களில் இருந்து வந்தவர்கள் 7 பேர் என மொத்தம் 945 பேருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு பதிவாகியுள்ளது. அதேநேரம், இறப்பு எண்ணிக்கை 8 என்ற அளவில் இருந்தது.

கொரோனா அதிகரிக்க காரணம்
தமிழகத்தில் பரிசோதனையின் அளவும் அதிகரிக்கப்பட்டுள்ளது. 71 ஆயிரத்து 888 பேருக்கு பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது. நேற்று 64 ஆயிரத்து 193 பேருக்கு பரிசோதனை செய்யப்பட்டது. இதனிடையே தமிழகத்தில் மீண்டும் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்படுமா என்று சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணனிடம் இன்று நிருபர்கள் கேள்வி எழுப்பிய போது, அது போன்ற வதந்திகளை நம்ப வேண்டாம் என்று தெரிவித்தார். அதேநேரம் தேர்தல் காலம் என்பதால் பொதுமக்கள் அதிகமாக கூடுவதன் காரணமாக நோய்கள் அதிகரிக்கிறது என்றும், முகக் கவசங்களை மக்கள் தவறாமல் அணிய வேண்டும் என்றும் ராதாகிருஷ்ணன் கேட்டுக் கொண்டார்.












Click it and Unblock the Notifications