“இந்தியாவின் முதன்மை மாநிலமாக உருவாக்கிட உறுதியேற்போம்” - தமிழ்நாடு நாள் வாழ்த்து சொன்ன விஜய்
சென்னை: நமது மாநிலத்திற்கு தமிழ்நாடு எனப் பெயர் சூட்ட தீர்மானம் நிறைவேற்றப்பட்ட நாளை ஒட்டி முதலமைச்சர் ஜோசப் விஜய் வாழ்த்து தெரிவித்துள்ளார். அதில்,"தமிழ் மக்கள் அனைவருக்கும் மனமார்ந்த தமிழ்நாடு நாள் வாழ்த்துகள் தெரிவித்துக் கொள்கிறேன்" எனக் கூறியுள்ளார்.
மெட்ராஸ் ஸ்டேட் என்ற பெயரை, தமிழ்நாடு என்று மாற்ற வேண்டும் என்று தொடர் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்ட காங்கிரஸ் கட்சியை சேர்ந்த சங்கரலிங்கனார் 1956 ஆம் ஆண்டு அக்டோபர் 13 ஆம் தேதி உயிர்நீத்தார். தமிழ்நாடு என்று பெயர் சூட்டவேண்டும் என்று திமுக சட்டமன்ற உறுப்பினர்கள் 1957 ஆம் ஆண்டு கொண்டுவந்த தீர்மானம் வாக்கெடுப்பில் தோல்வியடைந்தது.

அதைத்தொடர்ந்து, 1961 ஆம் ஆண்டிலும், 1963-ம் ஆண்டிலும் இதுதொடர்பாக கொண்டுவரப்பட்ட தீர்மானங்களும் தோல்வி கண்டன. 1967ல் திமுக முதல் முறையாக தமிழ்நாட்டில் ஆட்சிப் பொறுப்புக்கு வந்த பிறகு தான் இதற்கு ஒரு தீர்வு ஏற்பட்டது.
பேரறிஞர் அண்ணா தமிழ்நாட்டின் முதலமைச்சரானதும் சென்னை மாகாணம் (மெட்ராஸ் ஸ்டேட்) தமிழ்நாடு என பெயர் மாற்றம் செய்ய தீர்மானம் கொண்டு வரப்பட்டது. 1967 ஜூலை 18 ஆம் தேதி, தமிழ்நாடு என பெயர் மாற்றம் செய்ய அன்றைய முதல்வர் அண்ணாதுரையால் தமிழக சட்டசபையில் தீர்மானம் கொண்டுவரப்பட்ட இந்த நாள் தமிழக அரசு சார்பில் "தமிழ்நாடு நாள்" என கொண்டாடப்பட்டு வருகிறது.
இதுகுறித்து தமிழக முதல்வர் விஜய் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில், "தமிழரின் தொன்மை, வரலாறு, பண்பாடு, மொழியுணர்வைப் போற்றும் வகையில் நமது மாநிலத்திற்கு "தமிழ்நாடு" எனப் பெயர் சூட்ட தீர்மானம் நிறைவேற்றப்பட்ட இந்நாளில், தமிழ் மக்கள் அனைவருக்கும் மனமார்ந்த "தமிழ்நாடு நாள்" நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
மெட்ராஸ் மாநிலமாக உருவான நவம்பர் 1-ஆம் நாளையும், 'தமிழ்நாடு' எனும் பெயர் சூட்ட பேரறிஞர் அண்ணா அவர்களால் சட்டமன்றத்தில் வரலாற்றுச் சிறப்புமிக்க தீர்மானம் முன்மொழியப்பட்டு நிறைவேற்றப்பட்ட ஜூலை 18-ஆம் நாளையும் இந்த அரசு கொண்டாடும் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன்.
சங்கம் கண்ட செம்மொழியின் தாயகமாக, சமத்துவமும், சமூகநீதியும் தழைத்தோங்கி, கல்வியிலும், தொழில்நுட்பத்திலும், திறன்மிகு மனிதவளத்திலும் சிறந்தோங்கும் தமிழ்நாட்டை இந்தியாவின் முதன்மை மாநிலமாக உருவாக்கிட இந்நாளில் உறுதியேற்போம்!
தமிழின் இனிமையும், தமிழரின் உயரியபண்பாடும். மனிதநேய மரபும் தலைமுறைகள் கடந்தும் தழைத்தோங்கட்டும். தமிழ்நாடு உருவாக உழைத்திட்ட தியாக சீலர்களை இந்நாளில் நினைவுகூர்ந்து வணங்கிடுவோம்!" எனத் தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications