45% வாக்கு உறுதி.. திமுகவின் பரபர இன்டர்னல் சர்வே.. அடித்து மேலே வரும் தவெக விஜய்.. ரகசிய ரிப்போர்ட்
சென்னை: 2026 சட்டமன்றத் தேர்தலை நோக்கிய அரசியல் சதுரங்க ஆட்டம் இப்போதே சூடுபிடிக்கத் தொடங்கிவிட்டது. கோட்டைக்குச் செல்லும் ரேஸில் யார் முன்னிலையில் இருக்கிறார்கள் என்பதை அறிந்துகொள்ள, ஆளுங்கட்சியான தி.மு.க தரப்பில் ஒரு ரகசிய சர்வே சமீபத்தில் எடுக்கப்பட்டு உள்ளதாம். லீக்கான அந்த சர்வேயின் முடிவுகள் இப்போது அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன.

அறிவாலயத்தின் அந்த 'டாப் சீக்ரெட்' சர்வேயில் சொல்லப்பட்டுள்ள முக்கியத் தகவல்கள் இதோ:
அசைக்க முடியாத இடத்தில் ஆளுங்கட்சி: தற்போதைய கள நிலவரப்படி, தமிழகத்தில் தி.மு.க-வே தொடர்ந்து முன்னிலையில் இருப்பதாகவும், மக்களின் ஆதரவு அக்கட்சிக்குச் சாதகமாகவே இருப்பதாகவும் சர்வே முடிவுகள் கூறுகின்றன. கிட்டத்தட்ட திமுகவிற்கு 45 சதவிகித வாக்கு வங்கி உள்ளதாம்.
கடந்த 2021 சட்டமன்றத் தேர்தலில் 45.4% வாக்குகளைப் பெற்றிருந்த தி.மு.க கூட்டணி, தற்போதைய கள நிலவரப்படியும் அதே பலத்தைத் தக்கவைத்திருப்பது ஆளுங்கட்சிக்குக் கூடுதல் உற்சாகத்தை அளித்துள்ளது. இந்த ரகசியப் புள்ளி விவரங்களின்படி, தி.மு.க இப்போதும் தமிழகத்தின் முதன்மையான சக்தியாகத் திகழ்வதுடன், வரப்போகும் தேர்தலில் 200-க்கும் மேற்பட்ட இடங்களைக் கைப்பற்றும் இலக்கை நோக்கித் தடையின்றி முன்னேறி வருகிறது. விஜய் தலைமையிலான த.வெ.க மற்றும் அ.தி.மு.க ஆகிய கட்சிகளுக்கிடையே இரண்டாம் இடத்திற்கானப் போட்டி கடுமையாக நிலவும் சூழலில், தி.மு.க-வின் இந்தத் தனித்துவமான வாக்கு சதவீதம் அக்கட்சியை ஒரு பாதுகாப்பான நிலையில் வைத்துள்ளதாக சர்வே கூறுகிறதாம்.
விஜய்யின் ஏறுமுகம்: நடிகர் விஜய்யின் தனிப்பட்ட வாழ்க்கை தொடர்பாகப் பல விவாதங்களும், விவாகரத்து உள்ளிட்ட வதந்திகளும் ஒருபுறம் சமூக வலைதளங்களில் சுழன்றடித்தாலும், அரசியல் ரீதியாக அவரது மவுசு குறையவில்லை. மாறாக, அவரது செல்வாக்கு நாளுக்கு நாள் உயர்ந்து கொண்டே செல்வதாக இந்த ரகசியப் புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன.
சிறுபான்மையினரின் புதிய நம்பிக்கை: இதுவரை குறிப்பிட்ட சில கட்சிகளுக்கு மட்டுமே ஆதரவளித்து வந்த சிறுபான்மையின மக்களின் வாக்குகள், இப்போது த.வெ.க-வை நோக்கி நகர்வதாகவும், அந்தச் சமூகத்தினரின் முக்கியத் தேர்வாக விஜய் உருவெடுத்துள்ளதாகவும் சர்வே குறிப்பிடுகிறது. விஜய் சிறுபான்மையினரின் ஆப்ஷன் பி ஆக உள்ளதாக சர்வே கூறுகிறதாம்.
கிராமப்புறங்களில் வேர்விடும் கட்சி: நகரங்களை விட கிராமப்புறங்களில் விஜய்யின் கட்சிக்கு எதிர்பாராத அளவுக்கு வரவேற்பு இருப்பதாகத் தெரியவந்துள்ளது. இதன் மூலம் சுமார் 25 சதவீத வாக்குகள் வரை த.வெ.க அறுவடை செய்யக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.
கூட்டணி கணக்குகளும் ராமதாஸ் முடிவும்: தற்போதுள்ள நிலையில் காங்கிரஸோ அல்லது அ.தி.மு.க-வோ விஜய்யுடன் கைகோர்க்க ஆர்வம் காட்டவில்லை என்றாலும், பா.ம.க நிறுவனர் ராமதாஸ் தனது ஆதரவாளர்களுடன் விஜய்யின் கூட்டணிக்கு வரக்கூடும் என்கிற தகவல் கசிந்துள்ளது. சர்வேயில் இதற்கு நல்ல வரவேற்பும் இருக்கும் என்று கூறப்படுகிறதாம்.
இலை கொடுத்த சவால்: புதிய கட்சிகளின் வரவு ஒருபுறம் இருந்தாலும், அ.தி.மு.க ஒரு வலுவான சக்தியாகவே களத்தில் நீடிக்கிறது. குறிப்பாக 'இரட்டை இலை' சின்னம் மற்றும் கடந்த தேர்தலில் அவர்கள் பெற்ற 60-க்கும் மேற்பட்ட இடங்களை வைத்துப் பார்க்கும்போது, அவர்கள் இன்னமும் ஒரு பெரும் போட்டியாளராகவே தொடர்கிறார்கள். அவர்களின் வாக்கு சதவிகிதம் 20%க்கும் மேல் இருக்கும் என்று சர்வே கூறுகிறதாம்.
விமர்சனங்களும் விஜய்யும்: விஜய்யின் தனிப்பட்ட வாழ்க்கை மற்றும் சமீபத்திய பேச்சுகள் சில இடங்களில் அவருக்குச் சங்கடத்தை ஏற்படுத்தியுள்ளன. அவர் ஒரு தனிநபர் அல்லாமல் பொது ஆளுமையாக இருப்பதால், அவரது ஒவ்வொரு சொல்லும் மக்களிடையே தீவிரமாக உற்றுநோக்கப்படுகிறது. அவரின் தனிப்பட்ட வாழ்க்கை அரசியலை பெரிதும் பாதிக்கலாம் என்றும் சர்வேயில் கூறப்பட்டு உள்ளதாம்.
மொத்தத்தில், வரப்போகும் தேர்தலில் முதல் இடத்திற்குப் போட்டி இல்லை என்றாலும், இரண்டாம் இடத்தைப் பிடிக்கப் போவது அ.தி.மு.க-வா அல்லது த.வெ.க-வா என்கிற மோதல் இப்போதே தொடங்கிவிட்டது.












Click it and Unblock the Notifications