India Today Tamil Nadu Exit Poll 2024:அதிகரிக்கும் அண்ணாமலையின் செல்வாக்கு! சரியும் எடப்பாடி பழனிசாமி
சென்னை: லோக்சபா தேர்தலுக்கு பிந்தைய கருத்துக் கணிப்பு முடிவுகள் 2024 வெளியான நிலையில் தமிழகத்தில் பாஜக கூட்டணிக்கு 3 இடங்களில் வெற்றி வாய்ப்பு கிடைக்கும் என இந்தியா டுடே ஆக்சிஸ் மை இந்தியா கருத்துக் கணிப்பு வெளியிட்டுள்ளது.
தமிழகத்தில் 39 தொகுதிகளில் முதல் கட்டமாக கடந்த ஏப்ரல் 19ஆம் தேதி லோக்சபா தேர்தல் நடந்து முடிந்தது. இந்த தேர்தலில் அதிமுக, திமுக, பாஜக, நாம் தமிழர் என 4 கட்சிகள் கொண்ட நான்கு முனை போட்டி நிலவுகிறது.

தமிழகம் என்றால் திராவிட கட்சிகளான திமுக, அதிமுக என மாறி மாறி கோலோச்சி கொண்டிருந்த நிலையில் தற்போது மூன்றாவதாக தேசிய கட்சியான பாஜகவும் தமிழக களத்தில் போட்டியிட்டுள்ளன.
தமிழகத்தில் பாஜக வளர்ந்து வருவதாகவும் தாமரை மலர்ந்தே தீரும் என்றும் பாஜக தலைவர்கள் நம்பிக்கை தெரிவித்து வருகிறார்கள். இந்த முறை தமிழகத்தில் 19 லோக்சபா இடங்களில் போட்டியுள்ளது. அது போல் 5 தொகுதிகளில் தாமரை சின்னத்தில் கூட்டணி கட்சிகள் போட்டியிட்டன.
இந்தியாவில் மேற்கு பகுதிகள், வடக்கு பகுதிகளில் பாஜக ஆதிக்கம் செலுத்தி வரும் நிலையில் 39 லோக்சபா தொகுதிகளை கொண்ட தமிழகத்திலும் பாஜக கால் பதிக்க விரும்புகிறது. பல ஆண்டுகளாக திமுக வெர்சஸ் அதிமுக என்பதை உடைத்துவிட்டு திமுக வெர்சஸ் பாஜக என கொண்டு வர முயற்சிக்கிறது.
தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை, தமிழகத்தில் 234 தொகுதிகளிலும் என் மண் என் மக்கள் என்ற பாதயாத்திரை மேற்கொண்டிருந்தார். இதற்கு அதிக வரவேற்பு கிடைத்ததாக சொல்லப்படுகிறது. மேலும் தமிழகத்திலிருந்து இரட்டை இலக்கத்தில் பாஜக எம்பிக்களை நாடாளுமன்றத்திற்கு அனுப்புவோம் என அண்ணாமலை கூறி வருகிறார்.
அது போல் இந்த லோக்சபா தேர்தலே வரும் 2026 ஆம் ஆண்டு தமிழக சட்டசபை தேர்தலில் தாமரை மலர்ந்து ஆட்சியை பிடிப்பதற்கான உந்துதல் என கூறி வருகிறார்கள். இந்த நிலையில் தமிழகத்தில் நடந்த முடிந்த தேர்தலுக்கான பிந்தைய கருத்துக் கணிப்புகள் வெளியாகியுள்ளது.
அதில் இந்தியா டுடே ஆக்சிஸ் மை இந்தியா கணிப்பின் படி தமிழகத்தில் திமுக கூட்டணி 33 முதல் 37 இடங்களில் வெல்லும். அது போல் பாஜக கூட்டணி 2-4 இடங்களில் வெல்லும் என்றும் அதிமுக கூட்டணி 0 முதல் 2 தொகுதிகளில் வெல்லும் என்றும் கணிக்கப்பட்டுள்ளது.
இதில் பாஜக 2 முதல் 4 இடங்களில் வெல்லும் என கணித்துள்ள நிலையில் அதிமுகவோ ஒரு இடங்களில் கூட வெல்லாமல் போக வாய்ப்புள்ளது அல்லது 2 தொகுதிகளாவது வெல்லும் என்றும் கணிக்கப்பட்டுள்ளது. இது அதிமுகவுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கடந்த 2019ஆம் ஆண்டு நடந்து முடிந்த மக்களவை தேர்தலில் பாஜகவால்தான் அதிமுக தோல்வியுற்றது என அதிமுகவின் மூத்த தலைவர்கள் விமர்சித்து வந்த நிலையில் தற்போது பாஜக, அதிமுகவைவிட வளர்ச்சி அடைந்துள்ளதாகவே கருதப்படுகிறது. இந்த தேர்தலுக்கு பிறகு எடப்பாடி பழனிசாமியின் அதிமுக தலைமை பதவிக்கு ஆபத்து வரும் என ஓபிஎஸ் தரப்பு கூறி வந்த நிலையில் இது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
அதே வேளையில் கடந்த முறை தமிழக பாஜக தலைவராக முருகன் இருந்த போது ஒரு இடத்தில் கூட பாஜக வெல்லவில்லை. ஆனால் இந்த முறை அண்ணாமலையின் தலைமையிலான தமிழக பாஜக , 2 முதல் 4 இடங்களில் வெல்லும் என கருத்துக் கணிப்புகள் கணித்துள்ளது, அவருடைய செல்வாக்கை அதிகரிப்பதாகவே பார்க்கப்படுகிறது. எதுவாக இருந்தாலும் உண்மையான தேர்தல் முடிவுகளுக்கு ஜூன் 4 வரை காத்திருக்க வேண்டும்.












Click it and Unblock the Notifications