ரேஷன் கார்டு வைத்துள்ளவர்களுக்கு தமிழக அரசு முக்கிய அறிவிப்பு.. நாளை மிஸ் பண்ணிடாதீங்க
சென்னை: தமிழகம் முழுவதும் ரேஷன் கார்டு வைத்துள்ளவர்களுக்கு அரசு முக்கிய அறிவிப்பினை வெளியிட்டுள்ளது. பொதுவினியோக திட்டத்தில் உள்ள குறைகளை களைவதற்கும், மக்களின் குறைகளை கேட்டு உடனுக்குடன் தீர்வு காணவும், மாதந்தோறும் உணவுப்பொருள் வழங்கல் சம்பந்தமான பொதுமக்கள் குறைதீர்க்கும் முகாம் நடைபெறுவது வழக்கம். அந்த வகையில் ஏப்ரல் 12ம் தேதியான நாளை சிறப்பு முகாம் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
ரேஷன் கார்டில் பெயர் மாற்றம் வேண்டும் என்றால் அல்லது ரேஷன் கார்டில் திருத்தம் செய்ய வேண்டும் என்றால் முன்பு போல் இப்போது வட்டாட்சியர் அலுவலகத்திற்கும், விஏஓ ஆபீசுக்கும் அலைய தேவையில்லை.. எல்லாமே இ சேவை மையத்தில் மேற்கொள்ள முடியும். அதேபோல் ஆன்லைனிலும், மொபைல் ஆப்பிலும் ரேஷன் கார்டில் திருத்தங்களை மேற்கொள்ள முடியும். புதிய ரேஷன் கார்டுக்கு விண்ணப்பிப்பது, திருமணம் ஆனவர்கள் பெயரை குடும்ப உறுப்பினர் பெயரில் இருந்து நீக்குவது போன்ற பணிகளை மேற்கொள்ள முடியும்.

அதேபோல் ஊர் விட்டு ஊர் மாறினால், உங்கள் வீட்டு கேஸ் பில்லை காட்டி இசேவை மையத்தில் கொடுத்து ஒரு வாரத்தில் ரேஷன் கார்டில் அட்ரெஸ் மாற்றிக்கொள்ள முடியும். இவற்றை ஆன்லைனிலும், இசேவை மையத்திலும் மேற்கொள்ள முடிகிறது. அதேநேரம் ஆன்லைன் செயல்முறைகளை பற்றி தெரியாத சாமானிய மக்கள் பலர் இருக்கிறார்கள். அவர்களுக்காக அரசு ஒவ்வொரு மாதமும் முகாம் நடத்தி சேவைகளை அரசு செய்து வருகிறது. வெறும் மனுக்களை வாங்கி சரி செய்வதை தாண்டி, குறைகளையும் கேட்டு நிவர்த்தி செய்து வருகிறது. அந்த வகையில் ஏப்ரல் மாதத்திற்கான பொதுவினியோக திட்ட சிறப்பு குறைதீர்ப்பு முகாம் வரும் 12ம் தேதி தமிழகம் முழுவதும் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
சென்னையிலுள்ள 19 மண்டலங்களில் வருகிற 12-ந்தேதி பொது விநியோகத் திட்ட மக்கள் குறைதீர் முகாம் நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது:-
பொது விநியோகத் திட்டத்தின் பயன்களை குடும்ப அட்டைதாரர்கள் எளிதில் பெறும் வகையில் தமிழ்நாடு முழுவதும் ஒவ்வொரு வட்டத்திலும் மக்கள் குறைதீர் முகாம் பிரதி மாதமும் இரண்டாம் சனிக்கிழமை நடத்தப்படும் என அரசு அறிவித்துள்ளது. அதன்படி ஏப்ரல் 2025 மாதத்திற்கான மாதாந்திர பொது விநியோகத் திட்ட மக்கள் குறைதீர் முகாம் சென்னையில் உள்ள உணவுப் பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறையின் 19 மண்டல உதவி ஆணையாளர் அலுவலகங்களில் 12.04.2025 அன்று காலை 10 மணி முதல் பிற்பகல் 1 மணி வரை நடைபெறவுள்ளது.
குடும்ப அட்டைகளில் பெயர் சேர்த்தல், பெயர் நீக்கம், முகவரி மாற்றம், கைபேசி எண் பதிவு / மாற்றம் செய்தல் உள்ளிட்ட பொது விநியோகத் திட்டம் தொடர்பான சேவைகள் மேற்கொள்ளப்படும். மேலும், நியாய விலைக் கடைகளில் பொருள் பெற நேரில் வருகை தர இயலாத மூத்த குடிமக்கள் உள்ளிட்டோருக்கு அங்கீகாரச் சான்று வழங்கப்படும்.
மேலும், பொது விநியோகக் கடைகளின் செயல்பாடுகள், தனியார் சந்தையில் விற்கப்படும் பொருட்கள் அல்லது சேவைகளில் குறைபாடுகள் குறித்த புகார்கள் ஏதேனும் இருப்பின் அவற்றை பொதுமக்கள் இம்முகாமில் தெரிவித்தால் குறைகளை விரைந்து தீர்வு செய்ய உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும். சென்னையிலுள்ள 19 மண்டல அலுவலகப் பகுதிகளில் உள்ள குடும்ப அட்டைதாரர்கள் இச்சேவையினை பயன்படுத்திக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்" இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தேனி மாவட்ட கலெக்டர் ரஞ்ஜீத் சிங் வெளியிட்ட அறிவிப்பில் கூறுகையில், "பொதுவினியோக திட்டத்தில் உள்ள குறைகளை களைவதற்கும், மக்களின் குறைகளை கேட்டு உடனுக்குடன் தீர்வு காணவும், மாதந்தோறும் உணவுப்பொருள் வழங்கல் சம்பந்தமான பொதுமக்கள் குறைதீர்க்கும் முகாம் நடந்து வருகிறது. அதன்படி நாளை மறுநாள் (சனிக்கிழமை) பொதுமக்கள் குறைதீர்க்கும் முகாம் மாவட்டத்தில் உள்ள 5 தாலுகா பகுதிகளிலும் நடக்கிறது.
பெரியகுளம் தாலுகாவில் வடுகபட்டி, தேனி தாலுகாவில் ஊஞ்சாம்பட்டி, ஆண்டிப்பட்டி தாலுகாவில் வாலிப்பாறை, உத்தமபாளையம் தாலுகாவில் கருநாக்கமுத்தன்பட்டி, போடி தாலுகாவில் காமராஜபுரம் ஆகிய இடங்களில் குறைதீர்க்கும் முகாம் நடைபெறுகிறது. இதில் பொதுமக்கள் கலந்துகொண்டு ரேஷன் கடைகளில் பொருட்கள் வினியோகம், ரேஷன் கார்டில் பெயர் சேர்த்தல், நீக்கம், திருத்தம், கடை மாற்றம் தொடர்பான கோரிக்கைகள், புகார்களை தெரிவிக்கலாம்.
கூட்டத்தில் கொடுக்கப்படும் புகார்கள், குறைபாடுகள் மீது 30 நாட்களுக்குள் நடவடிக்கை மேற்கொள்ளப்படும். மேலும், பொதுமக்கள் தங்கள் குறைகளை முன்கூட்டியே சம்பந்தப்பட்ட வட்ட வழங்கல் அலுவலர், கூட்டுறவு சார் பதிவாளர் மற்றும் ரேஷன் கடை நடத்தும் நிறுவன அலுவலர்களுக்கு மனு மூலமும் தெரிவிக்கலாம்.
முன்கூட்டியே பெறப்படும் புகார்கள் மற்றும் குறைபாடுகள் வகைபாடு வாரியாக பிரிக்கப்பட்டு, உடனுக்குடன் அவை தீர்வு செய்யப்படுவதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு முகாம் நடைபெறும் நாளில் பொதுமக்களுக்கு தெரிவிக்கப்படும்" இவ்வாறு தேனி மாவட்ட கலெக்டர் ரஞ்ஜீத் சிங் வெளியிட்ட அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது. தமிழ்நாட்டின் அனைத்து மாவட்டங்களிலும் நாளை தாலுகா அலுவலகங்களில் முகாம் நடைபெற உள்ளது என்று அறிவிக்கப்பட்டுள்ளது. எனவே வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ளலாம்.












Click it and Unblock the Notifications