ரேஷன் கார்டு வைத்துள்ளவர்களுக்கு தமிழக அரசு முக்கிய அறிவிப்பு.. நாளை மிஸ் பண்ணிடாதீங்க
சென்னை: தமிழ்நாடு முழுவதும் பொது விநியோகத் திட்ட மக்கள் குறைதீர் முகாம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. பொது விநியோகத் திட்டத்தின் பயன்களை குடிமக்கள் எளிதில் பெறும் வகையில் தமிழ்நாடு முழுவதும் ஒவ்வொரு வட்டத்திலும் மக்கள் குறைதீர் முகாம் பிரதி மாதமும் நடத்தப்படுவது வழக்கம். அதன்படி மார்ச் 2026 மாதத்திற்கான மாதாந்திர பொது விநியோகத் திட்ட மக்கள் குறைதீர் முகாம் தமிழ்நாடு முழுக்க நாளை நடைபெறுகிறது.
சென்னையை பொறுத்தவரை சென்னையில் உள்ள உணவுப் பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறையின் 19 மண்டல உதவி ஆணையாளர் அலுவலகங்களில் மார்ச் 14ம் தேதி முற்பகல் 10.00 மணி முதல் பிற்பகல் 1.00 மணி வரை நடைபெறவுள்ளது.

குடும்ப அட்டைகளில் பெயர் சேர்த்தல், பெயர் நீக்கம், முகவரி மாற்றம், கைபேசி எண் பதிவு / மாற்றம் செய்தல் உள்ளிட்ட பொது விநியோகத் திட்டம் தொடர்பான சேவைகள் மேற்கொள்ளப்படும். மேலும், நியாய விலைக் கடைகளில் பொருள் பெற நேரில் வருகை தர இயலாத மூத்த குடிமக்கள் உள்ளிட்டோருக்கு அங்கீகாரச் சான்று வழங்கப்படும். பொது விநியோகக் கடைகளின் செயல்பாடுகள், தனியார் சந்தையில் விற்கப்படும் பொருட்கள் அல்லது சேவைகளில் குறைபாடுகள் குறித்த புகார்கள் ஏதேனும் இருப்பின் அவற்றை பொதுமக்கள் இம்முகாமில் தெரிவித்தால் குறைகளை விரைந்து தீர்வு செய்ய உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும்" என அறிவிக்கப்பட்டுள்ளது.
ராணிப்பேட்டை மாவட்ட கலெக்டர் சந்திரகலா வெளியிட்ட அறிவிப்பில், "பொதுவிநியோக திட்டம் சிறப்பில் ஒவ்வொரு மாதமும் சிறப்பு முகாம் நடத்தப்பட்டு வருகிறது. அதன்படி இந்த மாதத்துக்கான சிறப்பு முகாம் நாளை (சனிக்கிழமை) காலை 10 மணியில் இருந்து மதியம் 1 மணி வரை அந்தந்த வட்ட வழங்கல் அலுவலகங்களில் நடக்கிறது.
முகாமில் மின்னணு குடும்ப அட்டையில் முகவரி மாற்றம், பெயர் திருத்தங்கள், உறுப்பினர் பெயர் சேர்த்தல் மற்றும் நீக்கல், செல்போன் எண் மாற்றம், புதிய ரேஷன் கார்டு மற்றும் நகல் அட்டை கோருதல் போன்ற குறைகள் சரி செய்து வழங்கப்பட உள்ளது. மேலும் மின்னணு குடும்ப அட்டைகளில் உள்ள தவறான குடும்பத் தலைவரின் புகைப்படம் பதிவேற்றம் செய்ய வேண்டியிருப்பின் முகாமிலேயே புகைப்படம் பதிவேற்றம் செய்து திருத்தித் தரப்படும்.
இதுதவிர பொது விநியோகத் திட்டம் தொடர்பான குறைகளையும் தெரிவித்து பொதுமக்கள் பயன்பெறலாம். தனியார் சந்தையில் விற்கப்படும் பொருட்கள் மற்றும் சேவை குறைபாடுகள் குறித்த புகார்களை நுகர்வோர் பாதுகாப்பு சட்டம் 2019-ம் படி மேற்கொள்ள உரிய அறிவுரைகள் வழங்கும் வகையிலும் நடவடிக்கை மேற்கொள்வதற்கு உரிய மனுக்களை முகாம்களில் அளித்து பயன்பெறலாம் என தெரிவித்துள்ளார்.
திருப்பூர் மாவட்ட வருவாய் அதிகாரி கார்த்திகேயன் வெளியிட்ட அறிவிப்பில், "திருப்பூர் மாவட்டத்தில் பொது விநியோகத்திட்ட சிறப்பு குறைதீர்க்கும் முகாம் நாளை (சனிக்கிழமை) காலை 10 மணி முதல் மதியம் 1 மணி வரை அனைத்து தாலுகாவிலும் நடைபெற உள்ளன. முகாமில் அனைத்து குடிமைப்பொருள் தனி தாசில்தார்கள், வட்ட வழங்கல் அலுவலர்கள், தனி வருவாய் ஆய்வாளர்கள் பங்கேற்று மனுக்களுக்கு உடனடியாக தீர்வு காண உள்ளனர்.
அதன்படி, தாராபுரம் தாலுகாவில் தேர்பட்டி கிராமத்துக்கும், காங்கயம் தாலுகாவில் காங்கயம் கிராமத்துக்கும் அந்தந்த தொடக்க வேளாண் கூட்டுறவு கடன் சங்கத்தில் நடக்கிறது. அதே போல், மடத்துக்குளம் தாலுகாவில் காரத்தொழுவு கிராமத்துக்கும், திருப்பூர் வடக்கு தாலுகாவில் போயம்பாளையம் கிராமத்துக்கும், திருப்பூர் தெற்கு தாலுகாவில் வேலம்பட்டி கிராமத்துக்கும் முகாம் நடக்கிறது. உடுமலை தாலுகாவில் பள்ளப்பாளையம் கிராமத்துக்கும், ஊத்துக்குளி தாலுகாவில் ஊத்துக்குளி கிராமத்துக்கும் அங்குள்ள தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்களில் முகாம் நடக்கிறது.
பல்லடம் தாலுகாவில் சித்தம்பலம் கிராமத்துக்கு அங்குள்ள ஊராட்சி அலுவலகத்திலும், அவிநாசி தாலுகாவில் ஈட்டிவீரம்பாளையம் கிராமத்துக்கு மொய்யாண்டம்பாளையம் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்திலும் முகாம் நடைபெற உள்ளது. முகாமில் பொதுமக்கள் ரேஷன் கார்டுகளில் பெயர் சேர்த்தல், பெயர் நீக்கம், முகவரி மாற்றம், செல்போன் எண் பதிவு, மாற்றம் செய்தல், புதிய ரேஷன் கார்டு, நகல் கார்டு பெற மனுக்கள் செய்து தீர்வு காணலாம்" என தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications