ரேஷன் அட்டைதாரர்களே நோட் பண்ணுங்க.. தமிழ்நாடு அரசு ரேஷன் கடை பணியாளர்கள் சங்கம் எடுத்த அதிரடி முடிவு
சென்னை: வருகிற 17-ந் தேதி திங்கட்கிழமை அந்தந்த மாவட்டங்களில் நிர்வாகிகள் ஒன்றுகூடி விற்பனை கருவி (பாய்ண்ட் ஆப் சேல்ஸ்) செயல்பாடு, எடை தராசு இணைப்பு குறித்து மாவட்ட கலெக்டரிடம் மக்கள் குறை தீர்க்கும் நாளில் மனு அளிக்க உள்ளதாக தமிழ்நாடு அரசு ரேஷன் கடை பணியாளர்கள் சங்கம் அறிவித்துள்ளது. ஏப்ரல் 3-ந் தேதி வியாழக்கிழமை தமிழகம் முழுவதும் ரேஷன் கடைகளில் 5 அட்டைதாரர்களுக்கு மட்டும் பொருட்கள் விற்பனை செய்யப்படும் என்று போராட்டம் அறிவித்துள்ளது.
தமிழ்நாட்டில் 38 மாவட்டங்களில் 34,790 ரேஷன் கடைகள் இயங்கி வருகின்றன. இவற்றில் 33,377 கடைகள் கூட்டுறவு துறை மூலம் நடத்தப்பட்டு வருகிறது. இதில் ஆயிரம் குடும்ப அட்டைகளுக்கு குறைவாக உள்ள முழு நேரக் கடைகள் 18,782 ஆக இருககிறது. பகுதி நேர ரேஷன் கடைகள் 9,388 ஆக இருக்கிறது. ஆயிரம் முதல் ஆயிரத்து 500 குடும்ப அட்டைகள் கொண்ட முழு நேரக் கடைகள் 4,352 ஆகவும் செயல்பட்டு வருகின்றன.

இந்த ரேஷன் கடைகளின் மூலம் அரிசி, பருப்பு, சர்க்கரை, கோதுமை, ஆயில் உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்கள் சுமார் 2 கோடி பேருக்கு கைரேகை பெற்று ரேஷன் கடை பணியாளர்களால் வழங்கப்படுகிறது. ரேஷன் கடை பணியாளர்கள் தான் மகளிர் உரிமை தொகை விண்ணப்பங்கள், வெள்ள நிவாரண விண்ணப்பங்கள் மற்றும் அவசரகால நிவாரணங்கள், பல்வேறு வெளி பணிகளையும் மேற்கொள்கிறார்கள்.
ஆனால் சம்பளத்தை பொறுத்தவரை அரசு ஊழியர்களுக்கு நிகராக இருப்பதில்லை.. ஊதிய உயர்வு உள்பட அனைத்துமே அவர்களுக்கு அந்த அளவிற்கு இருப்பது இல்லை என்ற கவலை இருக்கிறது. ரேஷன் கடை பணியாளர்கள் அவ்வப்போது போராட்டம் நடத்தி வருகிறார்கள். அந்த வகையில் புதிதாக போராட்டத்தை அறிவித்துள்ளார்கள்.
தமிழ்நாடு அரசு ரேஷன் கடை பணியாளர்கள் சங்க பொதுச்செயலாளர் தினேஷ்குமார் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது: "தமிழ்நாடு அரசு ரேஷன் கடை பணியாளர்கள் சங்கத்தின் மாநில செயற்குழு கூட்டம் தலைவர் ராஜேந்திரன் தலைமையில் சென்னையில் நடைபெற்றது. கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தின்படி, வருகிற 17-ந் தேதி திங்கட்கிழமை அந்தந்த மாவட்டங்களில் நிர்வாகிகள் ஒன்றுகூடி விற்பனை கருவி (பாய்ண்ட் ஆப் சேல்ஸ்) செயல்பாடு, எடை தராசு இணைப்பு குறித்து மாவட்ட கலெக்டரிடம் மக்கள் குறைதீர்க்கும் நாளில் மனு அளிக்க உள்ளனர்.
மேலும், வருகிற 24-ந் தேதி கோரிக்கை அட்டை அணிந்து கருப்பு ஆடை உடுத்தி, பொருட்கள் வாங்க வரும் ரேஷன் அட்டைதாரர்களிடம் எங்களின் நியாயமான கோரிக்கைகளை பிரசாரம் செய்வோம். ஏப்ரல் 3-ந் தேதி வியாழக்கிழமை தமிழகம் முழுவதும் ரேஷன் கடைகளில் 5 அட்டைதாரர்களுக்கு மட்டும் பொருட்கள் விற்பனை செய்யப்படும்.
அதைத் தொடர்ந்து, ஏப்ரல் 11-ந்தேதி எங்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி அனைத்து தொழிற்சங்கங்களுக்கும் அழைப்பு விடுத்து சென்னையில் காத்திருப்பு போராட்டம் நடத்தப்படும். அதன்பிறகும், எங்கள் கோரிக்கைகளை நிறைவேற்ற முன்வராத நிலையில் மே 2-ந் தேதி முதல் ரேஷன் கடைகள் திறந்திருக்கும். ஆனால், பொருட்கள் ஏதும் வழங்கப்படமாட்டாது" இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications