என்ன இப்படி இருக்கு! இதுதான் காமராஜர் நினைவிடமா? பேத்தி கமலிகா சார்பில் முதல்வருக்கு ‛டிமாண்ட்’
சென்னை: சென்னை கிண்டியில் உள்ள மறைந்த முன்னாள் முதல்வர் காமராஜரின் நினைவிடத்தை அவரது பேத்தி கமலிகா மற்றும் நாடார் அமைப்புகளை சேர்ந்தவர்கள் பார்த்தனர். பராமரிப்பு இன்றி பொலிவிழந்து காணப்படும் நினைவிடத்தை பராமரிக்க வேண்டும் என்று முதல்வர் ஸ்டாலினுக்கு கோரிக்கை வைத்துள்ளனர்.
சுதந்திர போராட்டத்தில் ஈடுபட்டு சிறைவாசம் சென்று அரசியலில் அடியெடுத்து வைத்தவர் காமராஜர். நகர்மன்ற தலைவர், எம்எல்ஏ, எம்பி, தமிழக முதல்வர், காங்கிரஸ் கட்சியின் தேசிய தலைவர் என படிப்படியாக உயர்ந்தார்.

நம் நாட்டின் பிரதமரை தேர்வு செய்ததில் 2 முறை காமராஜர் முக்கிய பங்காற்றினார். தமிழக அரசியலிலும், தேசிய அரசியலிலும் தவிர்க்க முடியாத சக்தியாக வலம் வந்தவர் தான் காமராஜர்.
மேலும் தமிழ்நாட்டில் காமராஜரின் பிறந்தநாள் விழா ஆண்டுதோறும் கல்வி வளர்ச்சி நாளாக கொண்டாடப்பட்டு வருகிறது. இதற்கு முக்கிய காரணம் என்றால் அவர் முதல்வராக இருந்தபோது கல்விக்கு கொடுத்த முக்கியத்துவம் தான். தமிழகத்தில் பள்ளிகள் இல்லாத கிராமம் இருக்கக்கூடாது என்ற இலக்கை தீட்டி அதில் தீவிரமாக செயல்பட்டார்.

அதோடு ஏழை குழந்தைகள் பசியாற பள்ளிகளில் மதிய உணவு திட்டத்தை அமல்படுத்தினார். இந்நிலையில் தான் மறைந்த காமராஜர் நினைவிடம் சென்னை கிண்டியில் அமைந்துள்ளது. இந்த நினைவிடம் தான் சரியாக பராமரிக்கப்படுவது இல்லை என கூறப்படுகிறது. இதுதொடர்பாக அவ்வப்போது புகார்கள் எழுவது உண்டு.
இந்நிலையில் தான் இன்று காமராஜர் பேத்தி கமலிகா, பெருந்தலைவர் மக்கள் கட்சி தலைவர் என்ஆர் தனபாலன், நாடார் சங்க கூட்டமைப்பு தலைவர் மின்னல் ஸ்டீபன், தமிழ்நாடு நாடார் சங்க தலைவர் முத்து ரமேஷ், அகில இந்திய நாடார் மகாஜன சபை தலைவர் கார்த்திகேயன், ஹரி நாடார் உள்ளிட்டவர்கள் காமராஜர் நினைவிடத்துக்கு சென்று பார்வையிட்டனர்.

அப்போது நினைவிடத்தில் சுத்தமின்றி பார்க்க மோசமாக காட்சியளித்தது. இதையடுத்து அவர்கள் முதல்வர் ஸ்டாலினுக்கு முக்கிய கோரிக்கையை வைத்தனர். காமராஜர் நினைவிடம் முறையாக பராமரிக்கப்படவில்லை. இது வருத்தமளிக்கிறது. இந்த விஷயத்தில் முதல்வர் ஸ்டாலின் தலையிட்டு நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி உள்ளனர். அதோடு போலீசாரிடம் கோரிக்கை தொடர்பான மனு அளிக்கப்பட்டது.












Click it and Unblock the Notifications