இன்று இந்திரா அமல்படுத்திய எமர்ஜென்சியின் 50-வது ஆண்டு- துக்க தினமாக அனுசரிக்க ஆளுநர் ரவி வேண்டுகோள்
சென்னை: 1975-ம் ஆண்டு நாட்டில் அவசரநிலைப் பிரகடனம் எனும் எமர்ஜென்சி அமல்படுத்தப்பட்டதன் 50-வது ஆண்டு இன்று.. இந்த நாளை முன்னிட்டு தமிழ்நாடு ஆளுநர் ரவி வெளியிட்டுள்ள செய்தியில், நமது தேசிய வரலாற்றின் இந்த கருப்பு அத்தியாயத்தை யாரும் நினைத்துக்கூட பார்க்காத வகையில் நமது தாய்நாட்டின் கண்ணியத்தையும் ஜனநாயகத்தையும் பாதுகாப்பதற்கான உறுதியுடன் இந்த நாளில் துக்கம் அனுசரிப்போம் என அழைப்பு விடுத்துள்ளார்.
1975-ம் ஆண்டு பிரதமராக இருந்த காங்கிரஸின் இந்திரா காந்தி அம்மையார், நாட்டில் அவசரநிலை எனும் எமர்ஜென்சியை அமல்படுத்தினார். அப்போதைய கால கட்டத்தில் ஒடுக்குமுறைகள் கட்டவிழ்த்துவிடப்பட்டு அடிப்படை உரிமைகள் அனைத்தும் மறுக்கப்பட்டன. எதிர்க்கட்சிகளின் தலைவர்கள் கைது செய்யப்பட்டு சிறைகளில் கொடூரமான அடக்குமுறைகளுக்கு உள்ளாகினர்.

தமிழ்நாட்டிலும் எமர்ஜென்சி கொடுமைகள் தலைவிரித்தாடின. அப்போது திமுக, இடதுசாரி தலைவர்கள் எமர்ஜென்சியால் கடுமையாக பாதிக்கப்பட்டனர். தற்போதைய முதல்வர் மு.க.ஸ்டாலின், எமர்ஜென்சியில் கைது செய்யப்பட்டு சிறையில் மிக மோசமான தாக்குதல்களை எதிர்கொண்டு உயிர் பிழைத்தார்.
எமர்ஜென்சியின் 50-வது ஆண்டு இன்று. இதனை முன்னிட்டு தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி வெளியிட்டுள்ள செய்தி: 50 ஆண்டுகளுக்கு முன்பு, ஜூன் 25, 1975 அன்று இந்த கருப்பு தினத்தில், அரசியலமைப்பை தூக்கியெறிந்தும், குடிமக்களின் அடிப்படை உரிமைகளை முடக்கியும், ஊடகங்களின் வாயைக் கட்டியும், நீதித்துறையை அடக்கிய சர்வாதிகாரியின் காலடியிலும் நமது ஜனநாயகம் எவ்வாறு நசுக்கப்பட்டது என்பதை தேசம் அதிர்ச்சியுடனும் திகிலுடனும் நினைத்துப் பார்க்கிறது.

ஆயுதமேந்திய ராணுவத்தினர் எங்கள் விடுதிக்குள் புகுந்து, விடுதி அறைகளை உதைத்து திறந்து, ரைஃபிள் துப்பாக்கியின் பின்பக்கத்தால் தாக்கி, புத்தகங்கள், உடைகளை கூட எடுத்துச் செல்ல அனுமதிக்காமல் எங்களை உடனடியாக வெளியேற்றிய நாளை நானும் எனது பல்கலைக்கழக நண்பர்களும் எப்படி மறக்க முடியும்?
சொந்தப் பிள்ளைகளாலேயே முதுகில் குத்தப்பட்டு பாரத மாதா கண்ணீர் வடித்த நாள் அது. நமது தேசிய வரலாற்றின் இந்த கருப்பு அத்தியாயத்தை யாரும் நினைத்துக்கூட பார்க்காத வகையில் நமது தாய்நாட்டின் கண்ணியத்தையும் ஜனநாயகத்தையும் பாதுகாப்பதற்கான உறுதியுடன் இந்த நாளில் துக்கம் அனுசரிப்போம்.. இவ்வாறு ஆளுநர் ரவி தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications