வீரப்பன் தேடுதல் வேட்டை.. அதிரடிப்படையால் பாதிக்கப்பட்ட மக்கள்! 3 வாரங்களில் இழப்பீடு வழங்க உத்தரவு!
சென்னை: வீரப்பன் தேடுதல் வேட்டையில், அதிரடிப்படையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு வழங்க வேண்டிய பாக்கி இழப்பீட்டு தொகையை மூன்று வாரங்களில் வழங்கும்படி, தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சந்தனக்கடத்தல் வீரப்பன் தேடுதல் வேட்டையில் ஈடுபட்ட தமிழக - கர்நாடக சிறப்பு அதிரடிப்படையினர், விசாரணை என்ற பெயரில் மலை கிராம மக்கள் மீது மனித உரிமை மீறல்களில் ஈடுபட்டதாக தேசிய மனித உரிமை ஆணையத்தில் புகார்கள் அளிக்கப்பட்டன.

புகார்களை விசாரித்த தேசிய மனித உரிமை ஆணையம், அதிரடிப்படையால் பாதிக்கப்பட்டவர்களுக்கு 5 கோடி ரூபாய் இழப்பீடு வழங்க தமிழக அரசுக்கு உத்தரவிட்டது. இந்த உத்தரவின்படி, தமிழக அரசு, பாதிக்கப்பட்ட மக்களுக்கு, ஒரு கோடியே 20 லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் இழப்பீடு வழங்கிய நிலையில், பாக்கி தொகை 3 கோடியே 80 லட்சம் ரூபாயை வழங்க தேசிய மனித உரிமை ஆணையம் உத்தரவிட்டது.
இந்த உத்தரவை எதிர்த்து தமிழக தலைமை செயலாளர் தரப்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த உயர் நீதிமன்றம், பாக்கி தொகையை வழங்க வேண்டும் எனவும், பயனாளிகள் குறித்த விவரங்களை சேலம் மாவட்ட ஆட்சியரிடம் வழங்கும்படி, விடியல் மக்கள் நல அறக்கட்டளைக்கு உத்தரவிட்டிருந்தது. இந்த வழக்கு நீதிபதிகள் எஸ்.எஸ்.சுந்தர் மற்றும் என்.செந்தில் குமார் அமர்வு முன் விசாரணைக்கு வந்தது.
அப்போது, வீரப்பன் தேடுதல் வேட்டையில் பாதிக்கப்பட்டவர்களின் விவரங்கள் சேலம் மற்றும் ஈரோடு மாவட்ட ஆட்சியர்களிடம் வழங்கியதாக விடியல் அமைப்பு தரப்பில் தெரிவிக்கப்பட்டது. பாதிக்கப்பட்டவர்கள் அடையாளம் காணப்பட்டது குறித்தும், இழப்பீட்டு நிதி ஒதுக்கீடு குறித்தும் அரசு கடிதத்தை தாக்கல் செய்த கூடுதல் தலைமை வழக்கறிஞர், பாக்கி இழப்பீட்டு தொகையை வழங்க மூன்று வார அவகாசம் வழங்கக் கோரினார். இதனை ஏற்றுக் கொண்ட நீதிபதிகள், மூன்று வாரங்களில் பாக்கி இழப்பீட்டை, பாதிக்கப்பட்டவர்களுக்கு வெளிப்படையான முறையில் வழங்க வேண்டும் என உத்தரவிட்டனர்.
வீரப்பன் தேர்தல் வேட்டை: 1990 கால கட்டங்களில் சத்தியமங்கலம் மற்றும் அதனை ஒட்டி உள்ள வனப் பகுதிகளில் சந்தன மர கடத்தலில் ஈடுபட்டு வந்த வீரப்பன் வனக்காவலர்கள் மற்றும் காவல் துறையினரை கொலை செய்து வந்தான். இதை எடுத்து வீரப்பனை பிடிப்பதற்காக 1995 ஆம் ஆண்டு தமிழ்நாடு சிறப்பு அதிரடிப்படை அமைக்கப்பட்டது. 2004 ஆம் ஆண்டு அதிமுக ஆட்சி காலத்தில் ஏடிஜிபி விஜயகுமார் தலைமையிலான சிறப்பு அதிரடி படையினர் வீரப்பனை என்கவுண்டர் செய்தனர்.
ஆனால் அதற்கு முன்னதாக தேர்தல் வேட்டை என்ற பெயரில் மலையோர கிராமங்கள் மீது விசாரணை என்ற பெயரில் சிறப்பு அதிரடிப்படையினர் மனித உரிமை மீறல்களை ஈடுபட்டதாக புகார்கள் அளிக்கப்பட்டது. இந்த புகாரின் அடிப்படையில் அமைக்கப்பட்ட விசாரணை ஆணையம் அப்பகுதியைச் சேர்ந்த மக்கள் பாதிக்கப்பட்டவர்கள் தனியார் தொண்டு நிறுவனங்கள் காவல்துறை உள்ளிட்டவுடன் விசாரித்தது.
இந்த ஆணையத்தின் விசாரணை அடிப்படையில் சிறப்பு அதிரடிப்படையால் பாதிக்கப்பட்ட 89 பேருக்கு இழப்பீடு வழங்க தமிழக அரசுக்கு கர்நாடக அரசுக்கும் உத்தரவிட்டது. அதன்படி தமிழக அரசு பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஒரு கோடியே 20 லட்சம் 50 ஆயிரம் ரூபாய் இழப்பீடும், காவேரிபுரம் லக்கம்பட்டி ஆகிய கிராமங்களுக்கு 8 கோடியை 64 லட்சத்து 50 ஆயிரம் ரூபாயில் நலத்திட்ட உதவிகளை செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications