Hair Transplant: முடி மாற்றும் அறுவை சிகிச்சைக்கு கட்டுப்பாடுகளை விதித்த தமிழக அரசு
சென்னை: தமிழகத்தில் முடி மாற்ற அறுவை சிகிச்சை (ஹேர் டிரான்ஸ்பிளான்ட்) போன்ற அழகு சார்ந்த மருத்துவ சிகிச்சைகளுக்கு கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.
தமிழ்நாடு மருத்துவ கவுன்சில் அறிவிப்பின்படி, இந்த சிகிச்சைகளை செய்ய தகுதியான மருத்துவர்கள் மட்டுமே அனுமதிக்கப்படுவர். பிளாஸ்டிக் சர்ஜரி (MCh/DNB Plastic Surgery) அல்லது தோல் நிபுணத்துவம் (MD/DNB Dermatology) படித்தவர்கள் மட்டுமே இதை செய்யலாம். மற்றவர்கள் செய்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இந்த அறிவிப்பு, போலி கிளினிக்குகள் அதிகரித்து வரும் நிலையில் வெளியாகியுள்ளது. சமீபத்தில் சென்னை அண்ணா நகரில் பதிவு செய்யப்படாத ஹேர் டிரான்ஸ்பிளான்ட் கிளினிக் நடத்திய மூவரை போலீசார் கைது செய்தனர்.
அவர்கள் தகுதியற்ற ஊழியர்களை வைத்து 10 மாதங்களாக சிகிச்சை செய்து வந்தனர். இதுபோன்ற போலி மையங்கள் நாடு முழுவதும் பரவி, நோயாளிகளின் உடல்நலத்தை பாதிக்கின்றன. தேசிய மருத்துவ ஆணையம் (NMC) வழிகாட்டுதல்களின்படி, இந்த சிகிச்சைகள் 'சலூன் சேவை' அல்ல, 'அறுவை சிகிச்சை' என வகைப்படுத்தப்பட்டுள்ளன. இதனால், அரசு கண்காணிப்பு அதிகரிக்கும்.
தமிழக அரசு, பொது மக்களின் நலன் கருதி இந்த நடவடிக்கையை எடுத்துள்ளது. கடந்த ஆண்டுகளில், தீக்காயம் மற்றும் ஆசிட் தாக்குதல் பாதிக்கப்பட்டவர்களுக்கு சென்னை ஸ்டான்லி மருத்துவமனையில் இலவச முடி மாற்ற சிகிச்சை வழங்கப்பட்டது. இப்போது, தகுதியான மருத்துவர்களால் மட்டுமே அனைத்து சிகிச்சைகளும் செய்யப்பட வேண்டும் என்பது வலியுறுத்தப்படுகிறது.
போலி கிளீனிக்
போலி கிளினிக்குகளைத் தவிர்த்து, பதிவு செய்யப்பட்ட மருத்துவமனைகளை அணுகுங்கள் என்று அதிகாரிகள் அறிவுறுத்துகின்றனர். இது நோயாளிகளின் பாதுகாப்பை உறுதி செய்யும். அழகுக்கலை மற்றும் முடி மாற்று சிகிச்சைகளின் போது ஏற்படும் அசம்பாவிதங்களைத் தவிர்க்க, இனி வரும் காலங்களில் தகுதியான மருத்துவர்கள் மட்டுமே இந்த சிகிச்சைகளை மேற்கொள்ள வேண்டும் என தமிழக அரசு அறிவித்துள்ளது.
நடந்தது என்ன?
சென்னை அண்ணாநகர் பகுதியில் அமைந்துள்ள ஒரு சிகை சீரமைப்பு சிகிச்சை மையத்தில் மருத்துவம் மற்றும் ஊரக நலத்துறை அதிகாரிகள் கடந்த 10ஆம் தேதி ஆய்வு செய்தனர். அப்போது பிளஸ் 2 படித்த 2 பேர் மருத்துவர்கள் என கூறிக் கொண்டு முடி மாற்று சிகிச்சைகளை மேற்கொண்டது தெரியவந்தது.
புகார்
இது தொடர்பாக காவல் துறையில் புகாரின் பேரில் அந்த இருவர் உள்பட 3 பேர் கைது செய்யப்பட்டனர். தற்போதைய நிலையில் தமிழகம் முழுவதும் இதுபோல் செயல்படும் சிகிச்சை மையங்களை முறைப்படுத்துவதிலும், கண்காணிப்பதிலும் நடைமுறை சிக்கல்கள் உள்ளன. இதனால் சிலர் இந்த மையங்களை பதிவு கூட செய்யாமல் நடத்தி வருவது மட்டுமின்றி, பள்ளி படிப்பை முடிக்காதவர்கள் கூட சிகிச்சை அளித்து வருகின்றனர்.
உயிரிழக்கும் அபாயம்
முடி இழப்பு என்பது தற்போது பெரும் பிரச்சினையாகிவிட்டது. பலருக்கு சொட்டையாக இருப்பதால் திருமணம் நடப்பது கூட பெரும் சிக்கலை ஏற்படுத்தியுள்ளது. இதனால் பெரிய பெரிய முடி மாற்றும் அறுவை சிகிச்சை மையங்களுக்கு சென்றால் அதிக செலவாகும் என்பதால் சாதாரண மையங்களுக்கு செல்வதால் படிக்காமல் அவர்கள் அளிக்கும் சிகிச்சையால் உயிரிழப்பு ஏற்படும் அபாயமும் உள்ளது. இதனால்தான் முடி மாற்றும் அறுவை சிகிச்சை செய்ய கட்டுப்பாடுகளை அரசு விதித்துள்ளது.


Click it and Unblock the Notifications
