முதல்வர் ஸ்டாலின் ஓடி ஒளிகிறார்.. மக்களை ஏமாற்றாமல் வெள்ளை அறிக்கை வெளியிடணும்! ராமதாஸ் சாடல்
விழுப்புரம்: தமிழ்நாடு முதல்வர் ஸ்டாலின் முதலீடுகளை ஈர்க்க அமெரிக்கா சென்றுள்ள நிலையில், இந்த விவகாரத்தில் பாமக நிறுவனர் ராமதாஸ் பல்வேறு கேள்விகளை எழுப்பியுள்ளார். மேலும், கடந்த 3 ஆண்டுகளில் தமிழ்நாட்டிற்கு வந்த முதலீடுகள் குறித்து வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
தமிழ்நாட்டிற்கு புதிய முதலீடுகளை ஈர்க்க இப்போது முதல்வர் ஸ்டாலின் அமெரிக்கா சென்றுள்ளார். அங்கே பல்வேறு நிறுவனங்களின் தலைவர்களை முதல்வர் ஸ்டாலின் நேரில் சந்தித்து தமிழகத்தில் முதலீடு செய்யக் கோரிக்கை விடுக்க உள்ளார்.

இதற்கிடையே தமிழ்நாட்டிற்கு வந்த முதலீடுகள் குறித்து விமர்சித்துள்ள பாமக நிறுவனர் ராமதாஸ், தமிழ்நாடு அரசு இது குறித்து வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும் என்றும் விமர்சித்துள்ளார்.
பாமக ராமதாஸ்: இது குறித்து தைலாபுரம் தோட்டத்தில் செய்தியாளர்களிடம் பேசிய பாமக நிறுவனர் ராமதாஸ், "தமிழ்நாட்டிற்குத் தொழில் முதலீடு தொடர்பாக 9.99 லட்சம் கோடி மதிப்பில் 889 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகி இருப்பதாகவும் இதன் மூலம் 19 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு உருவாகும் என்றும் முதல்வர் சொல்கிறார்.
வெள்ளை அறிக்கை: கடந்த 3 ஆண்டுகளில் தமிழ்நாட்டிற்கு எவ்வளவு தொழில் முதலீடு வந்துள்ளது என்பது குறித்து திமுக அரசு வெள்ளை அறிக்கை வெளியிடவேண்டும் என்று கடந்த 8ம் தேதியே வலியுறுத்தி இருந்தேன். ஆனால், வெள்ளை அறிக்கை வெளியிடுவது மரபு இல்லை என முதல்வர் ஓடி ஒளிகிறார். இப்போது மரபு இல்லை என்று சொல்லும் இதே முதல்வர்தான் அதிமுக ஆட்சியில் தொழில் முதலீடுகள் குறித்து வெள்ளை அறிக்கை வெளியிடவேண்டும் என்று 1000 முறை கோரினார். அப்போது மட்டும் எந்த மரபு அடிப்படையில் அப்படி கோரிக்கை விடுத்தார்?
3 ஆண்டுகளில் ரூ.10 லட்சம் கோடிக்கு ஒப்பந்தம் போடப்பட்டிருந்தாலும் ரூ.17,616 கோடி அளவுக்கு மட்டுமே முதலீடு வந்துள்ளது.. எனவே, வராத முதலீடுகளை வந்ததாகக் கூறி மக்களை ஏமாற்றக் கூடாது. இதன் காரணமாகவே இந்த விவகாரத்தில் வெள்ளை அறிக்கை வெளியிடவேண்டும் என வலியுறுத்துகிறேன்.
ஆலோசகர்கள் நியமனம்: திமுக ஆட்சிக்கு வந்தவுடன் ஆலோசகர்கள் எனப் பலரை நியமித்தார்கள். இது குறித்து நான் முன்பே குற்றஞ்சாட்டி இருந்தேன். இப்போது தமிழக தலைமைச் செயலக சங்கமும் இதே சுட்டிக்காட்டி இருக்கிறது. ஆலோசகர்கள் என நியமிக்கப்பட்டோருக்கு எந்தவொரு போட்டி தேர்வும் நடத்தப்படவில்லை. இட ஒதுக்கீடும் கடைப்பிடிக்கப்படவில்லை. சமூக நீதிக்கு எதிராக இது இருக்கிறது.. இந்த விவகாரத்தில் தமிழக அரசு உரிய விளக்கத்தைத் தரவில்லை என்றால் வழக்கு தொடர்வோம்.
மேலும், இப்போது தமிழகத்தில் உள்ள 13 மருத்துவக் கல்லூரிகளில் இன்னும் முதல்வர்கள் பணியிடம் காலியாகவே உள்ளது. அதிலும் சென்னை, திருச்சி, சேலம் மருத்துவக் கல்லூரிகளில் முதல்வர் பதவி சுமார் 4 மாதங்களாக காலியாக இருக்கிறது. இந்த விவகாரத்தைக் கடந்த 16ம் தேதியே பாமக எழுப்பி இருந்தது. முதல்வர்களை நியமிக்க முடியவில்லை என்றால் மருத்துவக் கல்லூரியை ஏன் திறக்கிறீர்கள் என்று உயர் நீதிமன்ற மதுரை கிளையும் கேள்வி எழுப்பியுள்ளது. எனவே, இனியும் மருத்துவக் கல்லூரி முதல்வர்கள் நியமனத்தில் தாமதம் கூடாது" என்றார்.
விலைவாசி உயர்வு: இது தவிரத் தமிழகத்தில் அரசி விலை புதிய உச்சத்தை எட்டி இருப்பதாக விமர்சித்த அவர், ஆண்டு தேவை 99 லட்சம் டன் அரசியாக இருக்கும் போது, 72 லட்சம் டன் அரிசி மட்டுமே உற்பத்தி செய்யப்படுவதாகத் தெரிவித்தார். இதைச் சரிசெய்ய நெல் சாகுபடி பரப்பை அதிகரிக்கத் தமிழக அரசு நடவடிக்கை எடுக்கவேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.












Click it and Unblock the Notifications