White Paper: திமுக ஆட்சியில் மின் துறை செலவினங்கள் அதிகரிப்பு! ரூ 34,447 கோடி வருவாய் பற்றாக்குறை! நிர்மல் குமார்
சென்னை: மின்சார வாரியத்தின் நிதி, செலவினங்கள் குறித்த வெள்ளை அறிக்கையை இன்று அமைச்சர் நிர்மல் குமார் வெளியிட்டிருந்தார். அதில் திமுக ஆட்சியில் புதிய திட்டங்கள் ஏதும் இல்லாமலேயே செலவினங்கள் அதிகரித்துள்ளதாகவும் 5 ஆண்டுகளில் ரூ 34 ஆயிரம் கோடி வருமானம் பற்றாக்குறை ஏற்பட்டதாகவும் தெரிவித்துள்ளார்.
தமிழ்நாடு எரிசக்தி வளம் மற்றும் சட்டத்துறை அமைச்சர் சி.டி.ஆர். நிர்மல் குமார் தமிழ்நாடு மின்சார வாரியத்தின் நிதி நிலைமை, செலவினங்கள் குறித்து வெள்ளை அறிக்கை வெளியிடப்படும் என்று அறிவித்திருந்தார்.

அதன்படி 25ஆம் தேதி இன்று தமிழ்நாடு மின்சார வாரிய தலைமை அலுவலகத்தில் உள்கட்டமைப்பு, நிதி, மனிதவளம், தளவாடப் பொருட்கள், நடைபெற்று வரும் திட்டப்பணிகள், வருவாய் மற்றும் செலவினங்கள் குறித்த விரிவான வெள்ளை அறிக்கையினை அமைச்சர் சி.டி.ஆர். நிர்மல் குமார் வெளியிட்டார்.
இதுகுறித்து வெள்ளை அறிக்கையை வெளியிட்டு நிர்மல் குமார் கூறியிருப்பதாவது: திமுக ஆட்சியில் செலவினங்கள் அதிகரிக்கப்பட்டுள்ளன. உள்கட்டமைப்பும் மேம்படுத்தப்படவில்லை, புதிய திட்டங்கள் அமல்படுத்தாமலேயே செலவினங்கள் அதிகரிக்கப்பட்டுள்ளது. மின்சாரத் துறையை மீட்டெடுக்க வேண்டும். வருவாயைவிட செலவு அதிகரிக்கப்பட்டுள்ளது. 5 ஆண்டுகளில் ரூ 34,447 கோடி வருவாய் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது.
டிரான்ஸ்பார்மர் கொள்முதல் விவகாரம் உயர் நீதிமன்றம் வரை சென்ற நிலையில், தற்போது அதுகுறித்து சி.பி.ஐ விசாரணை மிகத் தீவிரமாக நடைபெற்று வருகிறது. கடந்த காலத்தில் மட்டும் 44 ஆயிரம் டிரான்ஸ்பார்மர்கள் வாங்கியதில் எவ்வளவு பெரிய ஊழல் நடந்தது? அதன் மூலம் அரசுக்கு எவ்வளவு கோடி இழப்பு ஏற்பட்டது? என்பது குறித்தான விசாரணைகள் போய்க் கொண்டிருக்கின்றன. எனவே, அந்தத் துறையைப் பற்றி செந்தில் பாலாஜி இப்போது பேச வேண்டிய அவசியமே இல்லை. அவர் எந்தத் துறைக்குச் சென்றாலும், அந்தத் துறை மீண்டும் பழைய நிலைக்கு மீண்டு வருவதற்கே மிகக் கடுமையாகச் சிரமப்பட வேண்டியுள்ளது.
அதேபோல், புதுப்பிக்கத்தக்க எரிசக்தித் துறையான சோலார் திட்டங்களில் முதலீடு செய்ய விரும்பியவர்கள், இடைத்தரகர்களைச் சந்திக்காமல் விண்ணப்பிக்கவே முடியாத ஒரு நிலை கடந்த கால ஆட்சியில் இருந்தது. ஒரு மெகாவாட் சோலார் மின் திட்டத்திற்கு அனுமதி தர வேண்டும் என்றால், அதற்கு 25 லட்சம் ரூபாய் முதல் 30 லட்சம் ரூபாய் வரை கமிஷன் கேட்கப்பட்டதாக முதலீட்டாளர்களே நேரடியாக எங்களிடம் வந்து புகார்களைத் தெரிவித்துள்ளனர்.
இந்த முறைகேடான நிலையை முற்றிலும் மாற்றுவதற்காக, அனைத்து விண்ணப்பங்களையும் ஆன்லைன் மூலமாக வெளிப்படையான முறையில் வழங்கும் புதிய நடைமுறையை முதலமைச்சரின் உத்தரவின்படி கொண்டு வருகிறோம். இதற்காக உளுந்தூர்பேட்டை மற்றும் திருநெல்வேலியில் செயல்பட்டு வந்த பழைய மையங்களை மூடவும் முடிவு செய்துள்ளோம். டெண்டர் மற்றும் மதிப்பீட்டுக் கொள்கைகளிலும் பல்வேறு அதிரடி மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. மின்சாரத் துறையை முழுமையாகச் சீரமைக்கும் பணிகள் தற்போது முழுவீச்சில் நடைபெற்று வருகின்றன." இவ்வாறு நிர்மல் குமார் தெரிவித்துள்ளார்.
தமிழகத்தின் பொது நிதி நிலை குறித்த விரிவான வெள்ளை அறிக்கையை நிதியமைச்சர் வெளியிட்டுள்ளார். இந்த ஆவணம் மாநிலத்தின் பொருளாதார எதார்த்தத்தை புள்ளிவிவரங்களுடன் விளக்குகிறது.
அதன்படி, தமிழ்நாட்டின் நேரடிக் கடன் கடந்த ஐந்தாண்டுகளில் கணிசமாக உயர்ந்து ரூ. 10 லட்சம் கோடியைத் தொட்டுள்ளது. இது மாநிலத்தின் ஒட்டுமொத்த உற்பத்தி மதிப்பில் (GSDP) 28.3 சதவீதமாகும். பொதுத்துறை நிறுவனங்களின் கடன்கள் மற்றும் அரசின் இதர பொறுப்புகளையும் சேர்த்தால், மாநிலத்தின் மொத்த நிதிப் பொறுப்புகள் ரூ. 13.18 லட்சம் கோடியாக விஸ்வரூபம் எடுத்துள்ளது.
மேலும், தமிழ்நாட்டின் தனிநபர் கடன் சுமை சராசரியாக ரூ. 1,28,934 ஆக அதிகரித்துள்ளது என்று இந்த அறிக்கை சுட்டிக் காட்டியது.
மாநிலத்தின் நிதி நிர்வாகத்தில் நிலவும் ஆறு முக்கிய கவலைகளை இந்த வெள்ளை அறிக்கை முதன்மைப்படுத்துகிறது. அதிகரித்து வரும் கடன், வட்டிச் செலுத்துகை, பலவீனமான வரி வசூல் மற்றும் உழைக்கும் வயதுடைய மக்கள் தொகையில் ஏற்படப்போகும் மாற்றங்கள் ஆகியவை இதில் அடங்கும்.
குறிப்பாக, மாநிலத்தின் வருவாய்ப் பற்றாக்குறை வரலாற்று உச்சமாக ரூ. 78,324 கோடியை எட்டியுள்ளது கவலைக்குரிய ஒன்றாகப் பார்க்கப்படுகிறது. சாதாரண வருவாயைக் கொண்டு அரசின் தினசரிச் செலவுகளைக்கூடச் சந்திக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளதால், மூலதன முதலீடுகளுக்குப் பதிலாக அன்றாட நடப்பு செலவினங்களுக்கே அரசு கடன் வாங்கும் சூழல் உருவாகியுள்ளது என இந்த வெள்ளை அறிக்கையில் விவரிக்கப்பட்டிருந்தது.












Click it and Unblock the Notifications