வெளுக்கும் மின்சார வாரியம்! ஒரே வாரம்தான்.. அடுத்தடுத்து 3 முக்கிய அறிவிப்புகளை வெளியிட்ட இபி போர்ட்
சென்னை: தமிழ்நாடு மின்சார வாரியம் கடந்த ஒரு வாரத்தில் 3 முக்கியமான அறிவிப்புகளை வெளியிட்டு உள்ளது. மக்களின் மின் பயன்பாட்டில் இதனால் மிகப்பெரிய மாற்றங்கள் ஏற்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
தமிழ்நாடு மின்சார வாரியத்தில் பல்வேறு மாற்றங்கள் செய்யப்பட்டு வருகின்றன. இந்த நிலையில்தான் மேற்கண்ட 3 அறிவிப்புகள் மிக முக்கியமானதாக பார்க்கப்படுகிறது.

அறிவிப்பு 1: தமிழ்நாடு முதல்வர் ஸ்டாலின் லண்டனில் இருந்து முக்கியமான டீம் ஒன்றை தமிழ்நாட்டிற்கு கொண்டு வந்துள்ளார். அவர்களுக்கு சிறப்பு ப்ரொஜெக்ட் ஒன்றும் கொடுக்கப்பட உள்ளது. பொதுத்துறை நிறுவனங்களை மனதில் வைத்து முதல்வர் ஸ்டாலின் இந்த திட்டத்தை வகுத்து உள்ளார். அதன்படி லண்டனில் இருக்கும் பிரபல கன்சல்டன்சி நிறுவனமான Ernst & Young நிறுவனத்துடன் தமிழ்நாடு அரசு ஒப்பந்தம் செய்துள்ளது.
இந்த ஒப்பந்தத்தின்படி Ernst & Young நிறுவனம் தமிழ்நாட்டில் இருக்கும் 50 பொதுத்துறை நிறுவனங்களை ஆய்வு செய்து வருகிறது. பொதுத்துறை நிறுவனங்களின் ஆண்டு/காலாண்டு அறிக்கைகள், நடப்பு வருமான குறிப்புகள், இடைக்கால பொருளாதார அறிக்கைகள் மற்றும் பொதுத்துறை நிறுவனங்களின் செயல்திறன் போக்குகள் ஆகியவற்றை ஆய்வு செய்ய உள்ளனர். அந்த நிறுவனங்களின் பல்வேறு பொருளாதார அறிக்கைகளை வைத்து இந்த நிறுவனம் அவர்களின் செயல்பாடுகளை ஆய்வு செய்ய உள்ளனர்.
நிதி அமைச்சகத்தின் பிரிவான பொது நிறுவனங்களின் பணியகம் என்ற பிரிவுடன் இவர்கள் இணைந்து செயல்பட உள்ளனர். இந்த நிறுவனம் சமீபத்தில் மின்சார வாரியத்தில் ஆய்வு செய்தது. இந்த ஆய்வு முடிவில் மின்சார வாரியம் தொடர்பாக முக்கியமான பரிந்துரைகளை அந்த நிறுவனம் மேற்கொள்ளப்பட்டு உள்ளது.
பரிந்துரை: அதன்படி மின்சார வாரியமான Tangedco அமைப்பை 3 ஆக பிரிக்க பரிந்துரை செய்யப்பட்டு உள்ளது. அதாவது 3 நிறுவனங்களாக இதை மாற்ற பரிந்துரை செய்யப்பட்டு உள்ளது. மின்சார வாரியத்தின் கடன் 1.4 லட்சம் கோடி ரூபாயாக உள்ளது. தற்போது வெளியாகி உள்ள இந்த பரிந்துரை அறிக்கை இந்த கடன் நிலைமையை நிர்வகிப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது.

என்ன பரிந்துரை: மின் உற்பத்தி, விநியோகம் மற்றும் புதுப்பிக்கத்தக்க ஆற்றல் ஆகிய துறைகளை கவனிக்கும் வகையில் தனி தனி நிறுவனங்களை உருவாக்க வேண்டும் என்று இந்த பரிந்துரையில் கூறப்பட்டு உள்ளது. இதில் தமிழ்நாடு அரசுதான் இனி முடிவு எடுக்க வேண்டும். ஏற்கனவே சில மாநிலங்களில் மின்சார வாரியம் இப்படி 2-3 வகையாக பிரிந்து உள்ளது.
இந்த நிலையில் தற்போது தமிழ்நாட்டில் இதே ஐடியா கொடுக்கப்பட்டுள்ளது. இதற்கு முன்பே தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணையம் (TNERC) 2017 இல், மின்சார வாரியத்தை தனி விநியோக மற்றும் உற்பத்தி நிறுவனங்களாக பிரிக்க பரிந்துரைத்தது. ஆனால் அப்போது இந்த மாற்றம் செய்யப்படவில்லை.
டெல்லி, உத்தரப் பிரதேசம், மத்தியப் பிரதேசம், குஜராத், கர்நாடகா, ஆந்திரப் பிரதேசம் மற்றும் சில மாநிலங்கள் அவற்றின் மின் விநியோகம் மற்றும் மின் உற்பத்தி நிறுவனங்களின் பிரிவுக்குப் பிறகு சாதகமான முடிவுகளை பெற்றுள்ளன. அதாவது இந்த துறையை இரண்டாக பிரித்த பின் அவை சாதகமான முடிவுகளை பெற்றுள்ளன.டாங்கெட்கோவை மூன்று நிறுவனங்களாக மாற்றினால், அரசுக்கு சொந்தமான மின் உற்பத்தி செழித்து திறம்பட செயல்பட முடியும். இதனால் உற்பத்தி அதிகரிக்கும். கடன் அடியோடு குறையும் என்றும் மின்சார துறை அதிகாரிகள் கூறுகின்றனர்.
அறிவிப்பு 2: தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம் (டாங்ஜெட்கோ) வடசென்னையில் நிலக்கரியை திறமையாக கையாளும் வகையில் வேகன் ஏற்றும் வசதிகளை ஏற்படுத்த திட்டமிட்டுள்ளது.
தற்போது, ஒடிசாவில் உள்ள தால்சர் மற்றும் ஐபி பள்ளத்தாக்கு சுரங்கங்கள் மற்றும் தெலுங்கானாவில் உள்ள சிங்கரேணி சுரங்கங்கள் போன்ற இடங்களில் இருந்து டாங்ஜெட்கோ நிலக்கரியை பெறுகிறது. ஒடிசாவில் இருந்து எண்ணூர், தூத்துக்குடி, காரைக்கால் துறைமுகங்களுக்கு அனல்மின் நிலையங்களுக்கு நிலக்கரி கொண்டு செல்லப்படுகிறது. மேட்டூர் அனல் மின் நிலையத்துக்கு சிங்கரேணி சுரங்கங்களில் வேகன்கள் மூலம் நிலக்கரி விநியோகம் செய்யப்படுகிறது.
அதாவது வேகன் என்றால் நிலக்கரி கொண்டு செல்லும் ரயில். புதிதாக கட்டப்பட்டுள்ள வடசென்னை மூன்றாம் நிலை அனல் மின் நிலையத்தை டிசம்பருக்குள் இயக்க டாங்கட்கோ தயாராகி வருகிறது. இதற்காக வடசென்னையில் நிலக்கரியை திறமையாக கையாளும் வகையில் வேகன் ஏற்றும் வசதிகளை ஏற்படுத்த திட்டமிட்டுள்ளது.
2022-23ல் சிங்கரேணி சுரங்கங்களில் இருந்து மட்டும் 14.03 லட்சம் டன் நிலக்கரியை டாங்கெட்கோ கொள்முதல் செய்துள்ளது. ஏப்ரல் 20 ஆம் தேதி 19,347 மெகாவாட்டைத் தொட்ட மின் தேவை அதிகரித்துள்ள நிலையில், அடுத்த ஆறு ஆண்டுகளில் இது 25,000 மெகாவாட்டாக இருக்கும் என்று டாங்கெட்கோ கணித்துள்ளது.
சென்னையில் நிலக்கரியை திறமையாக கையாளும் வகையில் வேகன் இதுவரை இல்லாத நிலையில்தான் தற்போது வேகன் களமிறக்கப்பட்டு உள்ளது.
அறிவிப்பு 3: தமிழ்நாடு மின்சாரம் வழங்கல் சட்டத்தின் திருத்தத்தின்படி கூடுதல் லோடு மின்சாரத்தை பயன்படுத்தும் நபர்களுக்கு அபராதம் விதிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது.

தமிழ்நாடு மின்சாரம் வழங்கல் சட்டத்தின் திருத்தத்தின்படி, 12 மாதங்களில் அனுமதிக்கப்பட்ட மின்சுமையை மூன்று முறை மீறும் வீட்டு நுகர்வோர் கூடுதல் மேம்பாட்டுக் கட்டணம் மற்றும் பாதுகாப்பு வைப்புத்தொகையை செலுத்த வேண்டும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது.
ஒவ்வொரு மின் பயன்பாட்டாளருக்கும் குறிப்பிட்ட அளவு மட்டுமே மின்சார லோடு பயன்படுத்த அனுமதிக்கப்பட்டு உள்ளது. இதை மீறினால் அபராதம் செலுத்தப்படும். எடுத்துக்காட்டாக, உங்கள் அனுமதிக்கப்பட்ட மின்சுமை 8kW ஆகவும், அதைத் தாண்டி 10kW பயன்படுத்தினால் அபராதம் விதிக்கப்படும்.
ஒருமுறை லோடு கூடினால் சிக்கல் இல்லை. ஆனால் ஒரு வருடத்தில் மூன்று முறை 10kW ஐத் தொட்டால், 10kW உங்கள் இணைப்பு சுமையாக நிர்ணயிக்கப்படும். இதற்கு நீங்கள் கூடுதல் கட்டணம் செலுத்த வேண்டியிருக்கும். சமீபத்திய கட்டணத்தின்படி 1 கிலோவாட் மூன்று கட்ட இணைப்புக்கான மேம்பாட்டுக் கட்டணங்கள் ரூ. 5,110 மற்றும் பாதுகாப்பு வைப்புத் தொகை ரூ. 950/கிலோவாட் ஆகும்.
இந்த லிமிட்டை தாண்டும் பட்சத்தில் ஒவ்வொரு முறையும் உங்களுக்கு அபராதம் விதிக்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டு உள்ளது.












Click it and Unblock the Notifications