தமிழ்நாட்டில் முதல் முறையாக.. கணினி மூலம் பொதுத்தேர்வு எழுதிய பார்வை மாற்றுத்திறனாளி மாணவர்!
சென்னை: தமிழ்நாட்டில் முதல் முறையாக கணினி மூலம், பார்வை மாற்றுத்திறனாளி மாணவர் ஒருவர் பொதுத்தேர்வை எழுதியிருக்கிறார். மாணவர்களை தேர்வு எழுத ஊக்குவிக்க இந்த முயற்சி மேற்கொள்ளப்பட்டிருக்கிறது.
இனி வரும் நாட்களில் பார்வை மாற்றுத்திறனாளிகள் கணினி மூலம் தேர்வு எழுதுவதற்கு முன்னோட்டமாக இந்த முயற்சி இருக்கும் என்று கல்வியாளர்கள் கூறுகின்றனர்.

தமிழகம் முழுவதும் சுமார் 8.21 லட்சம் மாணவ/மாணவியர்கள் 12ம் வகுப்பு பொதுத்தேர்வை எழுதினர். இதில் மாற்றுத்திறனாளி மாணவர்கள் மட்டும் 20 ஆயிரத்திற்கும் அதிகம். மற்ற மாணவர்களை விட, மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கு சில கூடுதல் விலக்குகள் அளிக்கப்பட்டிருக்கின்றன. குறிப்பாக சொல்வதை கேட்டு எழுத உதவியாளர், மொழிப்பாடத்திலிருந்து விலக்கு, தேர்வெழுத கூடுதலாக ஒரு மணி நேரம் என மாற்றுத்திறனாளிகளுக்கு சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன.
இந்நிலையில் தமிழ்நாட்டில் முதல் முறையாக பார்வை மாற்றுத்திறனாளி மாணவர் கணினி மூலம் தேர்வெழுதியிருக்கிறார். திருவள்ளூர் மாவட்டத்தை சேர்ந்த 12ம் வகுப்பு மாற்றுத்திறனாளி மாணவர் ஆனந்தன் கடந்த 3 ஆண்டுகளாக கணினி மூலம் தேர்வெழுத பயிற்சியை பெற்று வந்திருந்தார். இதனையடுத்து, நேற்று பூந்தமல்லியில் உள்ள தேர்வு மையத்தில் ஆனந்தன் தேர்வெழுதியுள்ளார்.
இது குறித்து மாவட்ட ஆட்சியர் கூறுகையில், "திருவள்ளூர் மாவட்டத்தில் அரசு பள்ளிகளை சேர்ந்த 28,514 மாணவ/மாணவியர்கள் தேர்வு எழுதுகிறார்கள். தனித்தேர்வர்களாக 1,464 பேர் தேர்வை எழுதுகின்றனர். மொத்தமாக 29,978 மாணவ/ மாணவியர்கள் தேர்வெழுதுகிறார்கள். 109 பொதுத்தேர்வு மையங்கள் செயல்பட்டு வருகிறது. அதேபோல மாணவர்களின் வினாத்தாள்கள் ஆவடி, செங்குன்றம், திருத்தணி, திருவள்ளூர் மற்றும் பொன்னேரி என 5 இடங்களில் பாதுகாப்பாக வைக்கப்பட்டிருக்கிறது.
இங்கிருந்து வினாத்தாள்கள் துப்பாக்கி ஏந்திய காவலர்களின் உதவியோடு சம்பந்தப்பட்ட பள்ளிகளுக்கு வரும். இந்த முறை பார்வை மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கு கணினி முறையில் தேர்வெழுத அனுமதிக்கப்பட்டிருக்கிறது. பூந்தமல்லியில் 18 பார்வை மாற்று மாற்றுத்திறனாளி மாணவர்கள் தேர்வெழுதுகிறார்கள். இதில் ஒருவர் கணினி மூலம் எழுதுகிறார்.
மாற்றுத்திறனாளி மாணவர்கள் அவர்களின் விருப்பத்திற்கு தேர்வு எழுத இந்த ஏற்பாடுகள் செய்யப்பட்டிருக்கின்றன. மற்றபடி பள்ளியில் மாணவர்களுக்கு அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டிருக்கின்றன. மாணவர்கள் சிரமமின்றி வந்து செல்ல தடையில்லா பேருந்து போக்குவரத்திற்கும் ஏற்பாடு செய்யப்பட்டிருக்கிறது" என்று கூறியுள்ளார்.
தேர்வு நாளில் தாய் உயிரிழந்த நிலையிலும் கூட மாணவர் ஒருவர், பொதுத்தேர்வை எழுதியிருக்கிறார். இந்த விடாமுயற்சியை பாராட்டிய முதல்வர் ஸ்டாலின், "இதுதான் தமிழ்ச் சமூகம்! கல்விதான் நம் உயிரினும் மேலானது! பொங்கு தமிழர்க்கு இன்னல் விளைத்தால் சங்காரம் நிசமெனச் சங்கே முழங்கு!" என்று வாழ்த்தியுள்ளார்.












Click it and Unblock the Notifications