"16 வயதினிலே".. நான் காலேஜ் படிச்சப்போ.. நான் பரட்டைதான்.. கருப்புதான்.. ஆனாலும்.. நச் தமிழிசை
தமிழிசை சவுந்தராஜன் தன்னுடைய ஹேர்ஸ்டைல் பற்றி பேசியுள்ளார்
சென்னை: "16 வயதினிலே" ரஜினிக்கு பிறகு பரட்டை என பெயர் எடுத்தது நான் தான் போல.. எனக்கு சுருட்டை முடிதான்.. ஆனால் யார் பணத்தையும் சுருட்டியது அல்ல.. நான் கருப்புதான்.. ஆனால், என் கைகளில் கருப்பு பணம் இல்லை" என்று தெலுங்கானா ஆளுநர் தமிழிசை சவுந்தராஜன் தெரிவித்துள்ளார்.
தமிழிசை அரசியல்வாதி என்பதையும் தாண்டி... மிகச்சிறந்த டாக்டர்.. மகப்பேறு மருத்துவ உயர் சிறப்பு படிப்புகளை, கனடா, ஆஸ்திரேலியா நாட்டுக்கு சென்று படித்தவர்.
அதாவது, கருவில் இருக்கும் குழந்தைக்கு குறைபாடுகள் இருந்தால், அதனை எப்படி கருவிலே சரி செய்வது என்ற படிப்பினைதான் இவர் தேர்ந்தெடுத்து படித்தார்.

மருத்துவம்
வெளிநாடுகளில் ராத்திரி 2 மணி வரைக்கும் கண்விழித்து பெண்களுக்கு மருத்துவம் பார்த்தவர்.. தமிழகத்தில் மருத்துவ கல்லூரியில் துணை பேராசிரியராகவும் வேலை பார்த்தவர். ஆனால், இத்தனை திறமைகளை பற்றி எதையுமே தெரிந்து கொள்ளாமல், தமிழிசையின் தலைமுடி, அவரது உருவத்தை வைத்து சோஷியல் மீடியாவில் சகட்டு மேனிக்கு விமர்சனம் செய்த கொடுமை இந்த தமிழ்நாட்டில்தான் நடந்தது.

சீப்பு
"அந்த அம்மாவுக்கு யாராவது 5 ரூபாய்க்கு சீப்பு இருந்தால் வாங்கி தாங்கப்பா.." என்று ஒரு நடிகரும், பல கட்சிக்கு சென்று வந்த அந்த பேச்சாளர் கேலியும் செய்திருந்தார். எத்தனையோ பேர், தன்னை விமர்சித்தாலும், தமிழிசையே பலமுறை அதற்கு பதில் அளித்தார்.. "என் உருவத்தை, உயரத்தை, தலைமுடியை, நிறத்தை கேலி செய்கிறார்கள். பலர் எனக்கு போன் செய்து தகாத வார்த்தைகளில் பேசுவதுண்டு. இந்த மாதிரியான கேலி கிண்டல்களை ஆண் அரசியல்வாதிகளிடமும் செய்வார்களா அவர்கள்?" என்று நறுக்கென கேட்டிருக்கிறார்.

பதவி உயர்வு
அதற்கு பிறகு தமிழிசை, ஆளுநராக பதவி உயர்வு பெற்று தெலுங்கானாவுக்கு சென்றுவிட்டார்.. அவரை வைத்து கேலி செய்தவர்களுக்கு தமிழிசையின் உயரம் வெட்கத்தைதான் தந்தது.. இப்போது தமிழிசை இல்லாத தமிழகம் வெறிச்சோடி இருக்கிறது.. எப்போதாவது ஒருமுறை தமிழகம் வந்து போகிறார் தமிழிசை.. அப்படிதான் இப்போதும் வந்துள்ளார்.. சென்னையில் நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்று பேசியபோது, தமிழிசை சவுந்தராஜன் சொன்னதாவது:

16 வயதினிலே
"16 வயதினிலே" ரஜினிக்கு பிறகு பரட்டை என பெயர் எடுத்து நான் தான் போல என விளையாட்டுக்கு சொல்லுவேன்... என்னை எப்போதுமே பரட்டை முடியுடன் தான் மீம்ஸ் போடுவார்கள்... சுருட்டை முடியுடன் பிறப்பது அவ்வளவு பெரிய தப்பா? நான் கல்லூரில் படிக்கும்போது என் டிரஸ்ஸுக்கே ரசிகர்கள் நிறைய பேர் இருப்பார்கள்.

விமர்சனம்
ஆனால், அரசியல் கட்சி தலைவர் ஆனதும், அதில் என்னால் போதிய கவனம் செலுத்த முடியவில்லை. கருப்பாக யாருமே இல்லையா? எப்ப பார்த்தாலும் என்னையே விமர்சனம் செய்து வருகிறார்களே என்று எனக்குள் கேட்டு கொள்வேன். ஆனாலும் இதையெல்லாம் நான் பெரிசாவே எடுத்துக்க மாட்டேன்... என்னை குள்ளம் என்றார்கள்..

பணம்
குணத்திலும், மக்களுக்கு நல்லது செய்ய வேண்டும் என்ற நினைப்பில் என்றுமே நான் உயர்ந்திருக்க வேண்டும் என்று தான் நினைத்திருக்கிறேன். எனக்கு சுருட்டை முடி தான்... ஆனால், என்னுடைய சொந்த பணத்தில் தான் பொது மக்களுக்கு செலவு செய்திருக்கிறேன் தவிர, யார் பணத்தையும் சுருட்டியது கிடையதாது.. நான் கருப்பு தான்... ஆனால், என் கைகளில் கருப்பு பணம் இல்லை...

விமர்சனங்கள்
இதற்கெல்லாம் நான் கவலைப்படவில்லை... ஏனென்றால் அவமானங்கள், விமர்சனங்கள் வரும்போது தான், இதைத்தாண்டி நாம் உயர வேண்டும் என்பதுதான் விதி... வெறி இருந்தால் தான் வெற்றி பெற முடியும். இதனை அனைவரும் கடைபிடிக்க வேண்டும்" என்றார்.. தமிழிசை இப்படி எப்போதுமே பேசியதில்லை.. ஆனால், நிறைய கல்லடிகளும், காயங்களையும் சுமந்திருக்கிறார் என்பது மட்டும் தெரிந்தது.. அதனால்தான் அவர் பேசி முடித்ததும் அந்த அரங்கமே அதிர்ந்து தட்டிய கைதட்டல்கள் ரொம்ப நேரத்துக்கு கேட்டு கொண்டே இருந்தது.












Click it and Unblock the Notifications