திமுக அரசின் திமிர்..விஸ்வகர்மா திட்டத்தில் ’கலைஞர்’ ஸ்டிக்கர்! ஸ்டாலினை கடுமையாக விமர்சித்த தமிழிசை
சென்னை: தமிழ்நாட்டிலுள்ள கைவினைஞர்களைத் தொழில் முனைவோர்களாக உயர்த்திடும் வகையில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவின்படி கலைஞர் கைவினைத்திட்டம் என்ற பெயரில் திட்டம் ஒன்று உருவாக்கப்பட்டு தமிழ்நாடு அரசு ஆணை வெளியிடப்பட்டுள்ளது. இந்நிலையில் விஸ்வகர்மா திட்டத்தை எதிர்த்து விட்டு, அதே திட்டத்தை தனது தந்தை பெயரில் தமிழ்நாட்டில் திமுக முதல்வர் ஸ்டாலின் செயல்படுத்துவதாக பாஜக முன்னாள் தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் விமர்சித்துள்ளார்.
பாஜக தலைமையிலான மத்திய அரசு 'பிரதமரின் விஸ்வகர்மா திட்டம்' என்ற திட்டத்தை கொண்டு வந்துள்ள நிலையில், இது குறித்து பல்வேறு விமர்சனங்கள் எழுந்திருந்தன. இந்நிலையில் இந்த திட்டத்தை தமிழ்நாட்டில் அமல்படுத்தமாட்டோம் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் திட்டவட்டமாக அறிவித்துள்ளார்

இது குறித்து மத்திய அமைச்சருக்கு எழுதியுள்ள கடிதத்தில், சமூகநீதி அடிப்படையில், தமிழ்நாட்டிலுள்ள கைவினைஞர்களுக்கு அதிகாரம் அளிக்கும் வகையில் தமிழ்நாட்டிற்கு என ஒரு விரிவான திட்டத்தை உருவாக்கிட தமிழ்நாடு அரசு முடிவெடுத்துள்ளது" என்று கூறியுள்ளார்.
இந்த நிலையில் தமிழ்நாடு அரசின் குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் சார்பில் கலைஞர் கைவினை திட்டம் தமிழ்நாடு அரசின் சார்பில் அறிமுகப்படுத்தப்பட்டு அதற்கான அரசாணை வெளியிடப்பட்டிருக்கிறது. இந்த திட்டத்தின் மூலம் மூன்று லட்சம் ரூபாய் வரை பினையற்ற கடன் உதவி வழங்கப்படுகிறது. 50,000 வரை மானியமும், 5% வரை வட்டி மானியமும் வழங்கப்படுகிறது. மேலும் திறன் மேம்பாட்டிற்கான சிறப்பு பயிற்சிகளும் அளிக்கப்படுகிறது. எந்த வகுப்பை சேர்ந்த 35 வயது நிரம்பியவர்கள் இதற்கு விண்ணப்பிக்கலாம்.
கட்டட வேலைகள், நகை செய்தல், தையல் வேலை, துணி வெளுத்தல்-தேய்த்தல், மலர் வேலைப்பாடுகள், மர வேலைப்பாடுகள்,சிகை அலங்காரம், அழகு கலை, கூடை முடைதல், கயிறு பாய் பின்னுதல், துடைப்பான் செய்தல், சிற்ப வேலைப்பாடுகள், கற்சிலை வடித்தல், உலோக வேலைப்பாடுகள், பாரம்பரிய முறையில் ஜவுளி அச்சிடுதல், துணி நெய்தல், துணிகளில் கலை வேலைப்பாடுகள், மண்பாண்டங்கள் சுடுமண் வேலைகள், ஓவியம் வரைதல், வண்ணம் பூசுதல், பாசிமணி வேலைப்பாடுகள், தோல் கைவினைப் பொருட்கள் ,காலணிகள் தயாரித்தல், சுதை வேலைப்பாடுகள், பொம்மை தயாரித்தல், கண்ணாடி வேலைப்பாடுகள், பழங்குடியினரின் இயற்கை சேகரிப்புகள், கைவினைப் பொருட்கள், மீன்வளை தயாரித்தல், பூட்டு தயாரித்தல், படகு கட்டுமானம், பாரம்பரிய இசைக்கருவிகள் தயாரித்தல், மூங்கில் பிரம்பு, சணல் பனை ஓலை வேலைப்பாடுகள் உள்ளிட்ட மேற்கண்ட தொழில்களுக்கு கடன் உதவி வழங்கப்படுகிறது.
ஆதார் அட்டை, வங்கி கணக்கு விவரங்கள், தொலைபேசி எண் உள்ளிட்ட ஆவணங்களுடன் இந்த திட்டத்திற்கு கடன் உதவி கோரி விண்ணப்பிக்கலாம். கலைஞர் கைவினைத் திட்டத்தின் கீழ் விண்ணப்பங்கள் 11.12.2024 முதல் வரவேற்கப்படும் நிலையில், https://www.msmeonline.tn.gov.in/ என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்திலோ அல்லது மாவட்ட தொழில் மையத்தை தொடர்பு கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டிருக்கிறது.
இந்த நிலையில் மத்திய அரசின் விஸ்வகர்மா திட்டத்தை தமிழகத்தில் எதிர்த்து விட்டு, தனது தந்தை பெயரில் அதே திட்டத்தை செயல்படுத்துவதாக தமிழ்நாடு அரசு மீது குற்றம் சாட்டியுள்ளார் தமிழக பாஜக முன்னாள் தலைவரான தமிழிசை சௌந்தரராஜன். இதுதொடர்பாக எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ள அவர்," திமுக அரசின் திமிர்..தமிழகத்தில் விஸ்வகர்மா திட்டத்தை அனுமதிக்காதது தமிழகத்தில் இருந்து பதிவு செய்த 8.52 லட்சம் பேரின் வாய்ப்பை தடுக்கிறது.. அதில் 75% பெண்கள் உள்ளனர்.
19.89% அட்டவணை சாதி, 6.69% பட்டியல் பழங்குடியினர், 50.28% பிற்படுத்தப்பட்ட வகுப்பினர், 23.14% பொது பிரிவினருக்கும் வாய்ப்பு மறுக்கப்பட்டுள்ளது. இது உண்மையான சமூக நீதிக்கு எதிரான திமுக அரசியல் காரணங்கள் தான். கலைஞர் கருணாநிதியின் பெயரில் கைவினைஞர்களுக்கு உள்ளூர் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது. ஸ்டாலினின் தந்தை முன்னாள் முதல்வர் கலைஞர் பெயரைச் சொல்லி ஒவ்வொரு திட்டத்தையும் தமிழக அரசு விரும்புகிறது.. அதுதான் அவர்களின் எண்ணம்.
கைவினைக் கலைஞர்களுக்காக பிரதமர் மோடி, விஸ்வர்மா திட்டத்தை அறிமுகப்படுத்தினார். அதில் திமுக அரசு ஸ்டிக்கர் ஒட்டி, கலைஞர் கைவினைத் திட்டம் என கொண்டுவந்துள்ளது" என கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications