சூரியன் மறைந்துள்ளது, மழை பொழிகிறது.. தாமரை மலரும்: தேர்தல் ரிசல்ட் பற்றி தமிழிசை சௌந்தரராஜன் சூசகம்
சென்னை: சூரியன் மறைந்திருக்கிறது, மழை பொழிகிறது, மழை பொழிந்தால் குளங்கள் நிரம்பி தாமரை மலரும் என்று தமிழிசை சௌந்தரராஜன் தெரிவித்தார்.
தென் சென்னை மக்களவைத் தொகுதிக்குட்பட்ட பகுதிகளில் நீர் மோர் பந்தல்களை, பாஜக தென்சென்னை வேட்பாளரும் முன்னாள் ஆளுநருமான தமிழிசை சௌந்தரராஜன் நேற்று திறந்து வைத்தார். பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார் தமிழிசை சௌந்தரராஜன்.

அப்போது பேசிய அவர், "கோடை காலம் என்பதால் தண்ணீர் பந்தல் அமைத்தோம். என்றாலும் மழை பெய்து வானமே தண்ணீரை கொடுத்துவிட்டது. ஆனாலும், நாங்கள் சூடான சாப்பாடு கொடுக்கிறோம். சென்னையில் பெய்து வரும் மழையில் சூரியன் மறைந்திருக்கிறது. மழை பெய்தால் குளங்கள் நிரம்பும். தாமரை மலரும். அந்த வகையில் எனக்கு மகிழ்ச்சிதான்." எனத் தெரிவித்தார்.
மேலும் பேசிய தமிழிசை, "தமிழ்நாட்டில் மக்கள் மகிழ்ச்சியாக இருக்கிறார்களா என்பது மிகப்பெரிய கேள்விக்குறியாக உள்ளது. தமிழ்நாட்டில் நாம் நினைப்பதை விட போதைப்பொருள் நடமாட்டம் மிக அதிகமாக இருந்து வருகிறது. இளைஞர்கள் அதிகம் பாதிக்கப்பட்டுக் கொண்டிருக்கின்றனர்.
முன்பெல்லாம் பேருந்துகளில் மக்கள் மட்டுமே பயணித்து கொண்டிருந்தனர். ஆனால் இன்றைக்கு பேருந்து இருக்கைக்கு அடியில் கத்தி, அரிவாள், துப்பாக்கி போன்றவையும் சேர்ந்து பயணம் செய்கின்றன. மோசமான கூலிப்படை கலாச்சாரம் தமிழகத்தில் மீண்டும் தலையெடுத்து இருக்கிறது. கொலை, கொள்ளை, திருட்டுகள் அதிகரித்துள்ளன. இதற்கு எல்லாம் மாநில அரசு பதில் சொல்லியே ஆக வேண்டும்.
அதேபோல சனாதனத்தை டெங்குவை போல ஒழிப்போம் என்றனர். ஆனால் இன்றைக்கு டெங்குவையே ஒழிக்க முடியாமல், தமிழகத்தில் 10 மாவட்டங்களில் டெங்கு பரவல் அதிகரித்து காணப்படுகிறது. எனவே தமிழக அரசு உடனடியாக டெங்கு தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு மக்களின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும்." எனத் தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications