"அது என்ன உங்க வீராணம்".. தவாக வேல்முருகனை கிண்டலடித்த கே.என்.நேரு.. அவையில் குபீர் சிரிப்பலை!
சென்னை: "அது என்ன உங்க வீராணம்" என தமிழக வாழ்வுரிமை கட்சித் தலைவர் வேல்முருகனை அமைச்சர் கே.என்.நேரு கிண்டலடித்த போது தமிழக சட்டசபையில் சிரிப்பலை எழுந்தது.
இந்த ஆண்டுக்கான தமிழக சட்டசபைக் கூட்ட தொடர் கடந்த 12 ஆம் தேதி ஆளுநர் உரையுடன் தொடங்கியது. ஆனால் தமிழக அரசு எழுதி கொடுத்த ஆளுநர் உரையில் தனக்கு உடன்பாடு இல்லை என்பதால் அதை தான் படிக்க விரும்பவில்லை என கூறி ஆளுநர் உரையை ஆர்.என்.ரவி முற்றிலும் புறக்கணித்தார்.

இது பெரும் சலசலப்பை ஏற்படுத்தியிருந்தது. இந்த நிலையில் கடந்த 15 ஆம் தேதி ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீது முதல்வர் ஸ்டாலின் பதில் உரை ஆற்றினார்.
இதையடுத்து தமிழக நிதிநிலை அறிக்கை தடைகளைத் தாண்டி என்ற தலைப்பில் கடந்த 19 ஆம் தேதி நிதியமைச்சர் தங்கம் தென்னரசு தமிழகத்தின் நிதி நிலை அறிக்கையை தாக்கல் செய்திருந்தார். இதைத் தொடர்ந்து 20 ஆம் தேதி வேளாண் துறைக்கான தனி பட்ஜெட்டை அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர் செல்வம் தாக்கல் செய்தார்.
நேற்றைய தினம் 21 ஆம் தேதி பட்ஜெட் மீதான விவாதங்கள் நடைபெற்றன. அப்போது கேள்வி நேரத்தின் போது பல எம்எல்ஏக்கள் தங்கள் தொகுதி சார்ந்த பிரச்சினைகளை எழுப்பி வந்தனர். அப்போது பண்ருட்டி தொகுதி எம்எல்ஏ வேல்முருகன், எங்கள் வீராணம் பகுதியில் இருந்து கூட்டு குடிநீர் திட்டம் மூலமாகவும் எனது தொகுதியில் 54 ராட்சத போர்வெல்களை அமைத்து பம்பிங் அமைப்பு முறையிலும் சென்னை மாநகர குடிநீர் தேவையை பூர்த்தி செய்து வருகிறோம்.
அப்படி இருக்கும் போது நான் வசிக்கும் 11 ஆவது மண்டலம் 150 ஆவது வார்டில் என் வீட்டை சுற்றி வெறும் 5 குடியிருப்புகள்தான் இருக்கின்றன. கடந்த 12 ஆண்டுகளாக மாதத்திற்கு இரு முறை விலை கொடுத்து லாரி மூலம் தண்ணீர் வாங்கி பயன்படுத்தி வருகிறேன். திமுக ஆட்சிக்கு வந்ததும் அமைச்சரின் கவனத்திற்கு கொண்டு வந்த பிறகு தண்ணீர் கிடைக்கிறது.
அதே வேளையில் அந்த தெருவுக்கு தடையில்லாமல் எந்த நேரமும் தண்ணீர் கிடைக்க உத்தரவு பிறப்பிக்க வேண்டும். எனக்கு தண்ணீர் கிடைக்குமா என்பதை அமைச்சர் வாயிலாக அறிய விரும்புகிறேன் என்றார். உடனே நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சர் கே.என்.நேரு சிரித்துக் கொண்டே ஒரு கேள்வி கேட்டார்.
அவர் கூறுகையில், "அது என்ன உங்க வீராணம்னு சொல்றீங்க, சேலம் மேட்டூரில் ஆரம்பித்து திருச்சி வழியாக வந்து கடைசியாகத்தான் வீராணம் ஏரிக்கு தண்ணீர் செல்கிறது. எனவே அது எங்களோடதுதான் என வேல்முருகனை கலாய்த்தார். இதனால் அவையில் சிரிப்பலை எழுந்தது.
மேலும் அமைச்சர் நேரு தொடர்கையில், வளசரவாக்கம் பகுதியில் வீட்டு தண்ணீர் இணைப்பு வேண்டும் என உறுப்பினர் வேல்முருகன் கேட்டுள்ளார். சென்னையை பொருத்தவரை செம்பரம்பாக்கம், புழல், பூண்டி, தேர்வாய் கண்டிகை மற்றும் வீராணம் ஆகிய 5 திட்டங்களில் இருந்து தண்ணீரை எடுத்து வருகிறோம். சாலைகளில் குழாய் அமைக்கும் பணிகள் 8 ஆண்டுகளாக நடந்து வந்த நிலையில் இன்னும் 7 மாசம் கால அவகாசம் கேட்டுள்ளனர். அந்த பணிகள் முடிந்தால் செம்பரம்பாக்கத்தில் இருந்து கூடுதலாக தண்ணீர் தர முடியும். சென்னையில் குடிநீரை சீராக கொடுப்பதற்கான எல்லா முயற்சிகளையும் மேற்கொண்டுதான் வருகிறோம். வேல்முருகன் வசிக்கும் பகுதியில் தினமும் தண்ணீர் கிடைக்கும் சூழலை உண்டாக்குவோம். இவ்வாறு கே.என்.நேரு தெரிவித்தார்.












Click it and Unblock the Notifications