ரஃபேல் வாட்ச்: அமைச்சர் செந்தில் பாலாஜி விதித்த கெடு! ' பாதயாத்திரை' அளவுக்கு அதிர்ந்த அண்ணாமலை?
சென்னை: ரஃபேல் வாட் விவகாரத்தில் தமிழக மின்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி 1 மணிநேரம்தான் கெடு விதித்திருந்தார்.. இதற்கு பாதயாத்திரை போகும் அறிவிப்பை வெளியிட்டு பதில் தந்துள்ளார் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை.
கோவையில் செய்தியாளர்களை சந்தித்த தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தமது வாட்ச் குறித்து பேசினார். அப்போது, நான் போடும் சட்டை,வேட்டி, கை கடிகாரம், கார் ஆகியவற்றை ஆய்வு செய்கிற போக்கு அதிகரித்திருக்கிறது. நான் கையில் கட்டி இருப்பது ரஃபேல் விமானத்தின் உதிரி பாகங்களை வைத்து செய்யப்பட்ட சிறப்பு கைக் கடிகாரம்.
ரஃபேல் விமானத்தை தயாரித்த நிறுவனம் 500 கை கடிகாரங்களை தயாரித்தது. எனக்கு ரஃபேல் ஓட்ட கூடிய வாய்ப்பு கிடைக்கவில்லை. இதனால் இந்த கைக்கடிகாரத்தை கட்டி இருக்கிறேன். என் உடலில் உள்ள வரை இந்த கடிகாரம் கையில் இருக்கும் என்றெல்லாம் பேசினார் அண்ணாமலை.

அமைச்சர் செந்ததில் பாலாஜி கெடு
இதற்கு பதிலடியாக அமைச்சர் செந்தில் பாலாஜி, பிரான்ஸ் நிறுவத்திற்காக, உலகில் வெறும் 500 கை கடிகாரங்கள் மட்டுமே தயாரிக்கப்பட்ட, 5 லட்சத்துக்கும் மேல் விலையுள்ள Rafale watchஐ, வெறும் 4 ஆட்டுக்குட்டி மட்டுமே சொத்தென சொல்லும் ஆட்டுப்புளுகர் கட்டியிருக்கிறார். அவர் வாங்கின ரசீதை ஒரு மணி நேரத்திற்குள் வெளியிட்டால் எளியவர்களும் வாங்கி மகிழலாம்.

வார் ரூம் மிட்டலால் பணம் கிடைத்ததா?
வெளிநாட்டு வாட்சை கட்டியிருக்கும் தேசியவியாதி, மன்னிக்க தேசியவாதி, ஆடு வளர்த்து சேர்த்து 5 லட்ச ரூபாய் வாட்ச் கட்டும் அளவுக்கு உயர்ந்தது எப்படி? வார்ரூம் வழியாக தொழிலதிபர்களை மிரட்டினால் இப்படியெல்லாம் பணம் கிடைக்குமா? கடிகாரம் வாங்கிய ரசீதை ஒரு மணி நேரத்திற்குள் வெளியிட முடியுமா? இல்லை வழக்கம்போல excel sheet ஏமாத்து வேலை தான் வருமா? என கேள்வி கேட்டிருந்தார்.

பாதயாத்திரை போகிறேன்..
இதற்கு இப்போது பதில் தந்துள்ள அண்ணாமலை, திமுகவினர் என்னுடன் ஊழல் குறித்து விவாதிக்க விரும்புவதால், நான் அதை எதிர்கொள்ள ஆவலுடன் இருக்கிறேன். நான் @BJP4TamilNadu தலைவராக பொறுப்பேற்றதுக்கு முன்பு, மே மாதம் 2021ல் வாங்கிய எனது ரஃபேல் கடிகாரத்தின் விவரங்கள், அதன் ரசீது மற்றும் எனது வாழ்நாள் வருமான வரி அறிக்கைகள் 10 ஆண்டுகால எனது வங்கிக் கணக்குகளின் பரிவர்த்தனைகள் (எனது ஒவ்வொரு வருமானமும் காட்டப்படும்), ஆகஸ்ட் 2011 முதல் ஐபிஎஸ் அதிகாரியாக நான் பொறுப்பேற்றது முதல் ராஜினாமா செய்யும் வரை ஈட்டிய வருமானம் , எனக்குச் சொந்தமான அசையும் அசையா சொத்துகளின் விவரங்கள், என்னிடம் உள்ள ஆடு மற்றும் மாடுகளின் எண்ணிக்கை என அனைத்தையுமே விரைவில் நமது மாண்புமிகு பாரதப் பிரதமர் திரு @narendramodi அவர்களை போற்றும் நம் தமிழக மக்களைச் சந்திப்பதற்காக மாநிலம் முழுவதும் நான் மேற்கொள்ளவிருக்கும் பாதயாத்திரையின் முதல் நாளில் வெளியிடுவேன்.

சொத்துகளை ஒப்படைக்கிறேன்..
அன்றைய தினம் நான் பத்திரிக்கையாளர்களை சந்தித்து மேல் குறிப்பிட்ட அனைத்து விபரங்களையும் பொதுவெளியில் வெளியிட உள்ளேன். நான் அறிவித்ததை விட ஒரு பைசா அதிகமான சொத்தை யாரேனும் கண்டுபிடித்தால், எனது சொத்துக்கள் அனைத்தையும் அரசிடம் ஒப்படைக்க நான் தயார்; இதே போல வருமான விவரங்களையும் அசையும் மற்றும் அசையா சொத்துகளின் விவரங்களையும் திமுகவினர் மற்றும் திமுக தலைவர்கள் தமிழக சகோதர சகோதரிகளின் முன்னிலையில் வெளியிட தயாரா? என அண்ணாமலை கேள்வி கேட்டிருந்தார்.

ஆடிப்போனாரோ அண்ணாமலை?
தமிழக அமைச்சர் செந்தில் பாலாஜி ஒரு ரசீதைக் கேட்டு ஒரு மணிநேரம்தான் கெடு விதித்தார். இந்த விவகாரத்தில் தாம் ஆடிப்போய்விட்டதை வெளிப்படுத்தும் வகையிலேயே அண்ணாமலை பாதயாத்திரை போகிறேன்; அன்றைக்கு ஆவணங்களை தருகிறேன் என ட்விட்டரில் பதிவிட்டுள்ளார் என்கின்றனர் சீனியர் பத்திரிகையாளர்கள். நெருப்பில்லாமல் புகையப் போவது இல்லை என்பதைப் போல அமைச்சர் செந்தில் பாலாஜி ட்வீட் போட்டதும் ஏதோ ஒரு பதிலை சொல்லி பிரச்சனைக்கு அண்ணாமமலை முற்றுப்புள்ளி வைக்கிறாரோ என்கிற கேள்வியையும் அரசியல் வட்டாரங்கள் எழுப்புகின்றன.












Click it and Unblock the Notifications