உலகமே பாராட்டுகிறது.. ஆனால் தமிழகத்தின் வளர்ச்சி "ஒருவருக்கு" மட்டும் புரியவில்லை.. முதல்வர் ஸ்டாலின்
சென்னை: தலைநகர் சென்னையில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பேசிய தமிழக முதல்வர் ஸ்டாலின், மாநில வளர்ச்சி ஒருவருக்குப் புரியவில்லை என்று பேசியுள்ளார்.
தமிழகத்தில் அமைக்கப்பட்டுள்ள 500 நகர்ப்புற நலவாழ்வு மையங்களைத் திறந்து வைக்கும் நிகழ்ச்சி சென்னை தேனாம்பேட்டையில் நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட முதல்வர் ஸ்டாலின் நகர்ப்புற நலவாழ்வு மையங்களைக் காணொலி மூலம் திறந்து வைத்தார்.

இந்த நிகழ்ச்சியில் உரையாற்றிய முதல்வர் ஸ்டாலின், "நம்முடைய ஆட்சியைப் பொறுத்தவரை. குறிப்பாகத் திராவிட மாடல் ஆட்சியைப் பொறுத்தவரைக்கும். கல்வி - மருத்துவம் ஆகிய இரண்டையும் திராவிட மாடல் அரசு இரண்டு கண்களாக நினைத்துப் போற்றி வருகிறோம் - செயல்படுத்தி வருகிறோம். கல்வியில் சிறந்த தமிழ்நாடாகவும் மக்கள் நலம் பேணுவதில் மிகச் சிறந்த தமிழ்நாடாகவும் நம்முடைய மாநிலம் இன்றைக்குத் தலைநிமிர்ந்து நிற்கிறது.
ஆனால் இப்படித் தலைநிமிர்ந்து நிற்கக்கூடிய நம்முடைய மாநிலத்தின் வளர்ச்சி. மாநிலத்திலே மிகப் பெரிய பொறுப்பில் இருக்கக்கூடிய ஒருவருக்கு மட்டும் அது புலப்படவில்லை. அவர் திராவிட மாடல் ஆட்சியை ஏற்றுக்கொள்ளாத நிலையில் அந்த கருத்துக்களை எல்லாம் விமர்சனங்களாக்கி தொடர்ந்து தினந்தோறும் ஏதாவது ஒரு செய்தியை மக்களைக் குழப்பக்கூடிய வகையிலே அவர் செய்து கொண்டிருக்கிறார். அதை பற்றியெல்லாம் மக்கள் கொஞ்சம்கூட கவலைப்பட மாட்டார்கள்.
அதையெல்லாம் மக்கள் தெளிவாகப் புரிந்து கொண்டிருக்கிறார்கள்.என்னைப் பொறுத்தவரை அவர் தொடர்ந்து அப்படி சொல்லிக் கொண்டே இருக்க வேண்டும். அப்போது தான் நமக்கு ஒரு எழுச்சி ஏற்படும். மக்களும் தெளிவாகப் புரிந்து கொள்வார்கள். நம்மை ஆளாக்கிய கருணாநிதியின் நூற்றாண்டு விழா ஜூன் 3-ஆம் தேதியிலிருந்து நாம் கொண்டாடத் தொடங்கியிருக்கிறோம்.
இந்த ஆண்டு முழுவதும் கொண்டாடுவதற்காகத் திட்டமிட்டு, நம்முடைய அரசின் சார்பிலே ஏனென்றால் இந்த அரசே அவருடைய அரசு, ஐந்து முறை தமிழகத்திலே ஆட்சிப் பொறுப்பிலிருந்து தமிழ்நாட்டு மக்களுக்கு எண்ணற்ற திட்டங்களைச் செய்து காட்டியிருக்கக்கூடியவர்.
அதிலும் குறிப்பாக ஏழை எளிய மக்களுக்காகக் கண்ணொளி காப்போம் திட்டம், டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி மகப்பேறு நிதி உதவித் திட்டம், வருமுன் காப்போம் திட்டம், கலைஞர் காப்பீட்டுத் திட்டம், 108 இலவச ஆம்புலன்ஸ் திட்டம் போன்ற எண்ணற்ற சுகாதாரத் திட்டங்கள் நம்முடைய நாட்டில் முன்னோடித் திட்டங்களாகக் கொண்டு வரப்பட்டு, இன்றளவும் இந்தத் திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன.
கருணாநிதியின் பாதையில்தான் நமது அரசின் நல்வாழ்வுத் திட்டங்களும் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. இன்னும் சொல்ல வேண்டுமென்றால், ஆட்சிப் பொறுப்பேற்ற பிறகு, இதுநாள் வரையில் தொழில்துறை நிகழ்ச்சிகளில் தான் அதிகம் கலந்து கொண்டிருக்கிறேன். அதற்கு அடுத்தபடியாக நான் அதிகமாகக் கலந்துகொண்டது மக்கள் நல்வாழ்வுத் துறை நிகழ்ச்சிகள்தான். அந்த அளவிற்கு இன்றைக்கு இத்துறையில் பல முன்னேற்றங்களைப் பார்த்துக் கொண்டிருக்கிறோம்.
எத்தகைய சூழலில் நாம் பொறுப்பேற்றோம் என்பது, உங்கள் அனைவருக்கும் நன்றாகத் தெரியும். கொரோனா என்ற கொடிய தொற்று நோய், அந்த அலை தீவிரமாக இருந்த காலத்தில், ஆட்சிக்கு வந்தோம். ஆட்சிக்கு வந்தபிறகு அதனைக் கட்டுப்படுத்தினோம். அன்று நம்முடைய அமைச்சர் மா.சுப்பிரமணியம் எந்த அளவிற்கு பணியாற்றினார். அவர் மாரத்தான் வீரர் மட்டுமல்ல பணியாற்றுவதிலும் ஒரு மாரத்தான் வீரராக இருந்து பணியாற்றினார் என்பது உங்களுக்கு எல்லாம் நன்றாகத் தெரியும்.
நான் பலமுறை சொன்னது உண்டு. ஆட்சிக்கு வந்தபிறகு நான் முதலமைச்சர் மற்றவர்கள் எல்லாம் துறையின் அமைச்சர்களாகப் பொறுப்பேற்று இருந்தாலும், மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறையின் அமைச்சராக இருந்தவர் மா.சுதான். ஆனால் மா.சு. மட்டுமல்ல, முதலமைச்சர் உட்பட எல்லா அமைச்சர்களும் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சராக மாறினோம். அதனால் தான் கொரோனாவை கட்டுப்படுத்தும் முயற்சியிலே ஒரு பெரிய வெற்றியைப் பெற்றோம்.
அதற்கு நம்முடைய அதிகாரிகள் எந்த அளவிற்கு எல்லாம் துணை நின்றார்கள் இன்றைக்கும் நான் எண்ணிப் பார்க்கின்ற போது மகிழ்ச்சி அடைகிறேன். இந்திய அளவில் பல்வேறு சுகாதார குறியீடுகளில் முதல் மூன்று மாநிலங்களின் வரிசையில் தமிழ்நாடு உள்ளது. இதை அவர் தெரிந்து கொள்ள வேண்டும். எவர் என்று உங்களுக்குத் தெரியும்.
பொதுவாக ஒரு மாநிலத்தின் வளர்ச்சிக்கான குறியீடுகளில் ஒன்றாக மக்கள் நல்வாழ்வு விளங்கி வருவதுடன் தனிநபருக்கான சிகிச்சை செலவுகள் குறைவாக இருப்பதும் நம் மாநிலத்தின் மருத்துவத் துறையின் சிறப்பினை வெளிப்படுத்துகிறது.
அந்த அடிப்படையில் தான் 5.08.2021 அன்று "மக்களைத் தேடி மருத்துவம்" என்ற மகத்தான திட்டத்தைத் தொடங்கி வைத்தேன். தொடர்ந்து மாநிலம் முழுவதும் விரிவாக்கப்பட்ட இந்தத் திட்டத்தின் கீழ் இதுவரை 1 கோடியே 51 ஆயிரத்து 661 பயனாளிகளுக்கு முதன்முறை சேவைகளும். 3 கோடியே 4 லட்சத்து 71 ஆயிரத்து 896 நபர்களுக்கு தொடர் சேவைகளும் வழங்கப்பட்டு வருகின்றது.
நாட்டிற்கே முன்னோடியான இந்தத் திட்டத்தைப் புகழ்ந்து உலக சுகாதார அமைப்பே தனது வலைத்தளத்தில் ஒரு பாராட்டு கட்டுரை வெளியிட்டிருக்கிறது. அதாவது பயனாளிகளுக்கு அவர்கள் வீட்டை விட்டே வெளியே வரத் தேவையில்லாமல், மருத்துவப் பணியாளர்கள் பரிசோதனை மேற்கொள்வது, நோய்க் கண்டறிவது. சிகிச்சை தருவது, மருந்துகளைத் தருவது பற்றி எழுதப்பட்டுள்ளது. அதை தயவுசெய்து குறை சொல்கின்ற அவர் படித்துப் பார்க்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன். அதிலும் பெண் மருத்துவப் பணியாளர்கள் எப்படி இந்தத் திட்டத்தின் முதுகெலும்பாகச் செயல்படுகிறார்கள் என்பது பற்றியும் குறிப்பிட்டுக் காட்டியிருக்கிறார்கள். உலக அமைப்பே பாராட்டும் வகையில் நாம் இந்தத் திட்டத்தைச் செயல்படுத்தி வருகிறோம்.
தமிழ்நாட்டின் மருத்துவக் கட்டமைப்பை அனைவரும் போற்றுகிறார்கள். நான் அண்மையில் ஜப்பான், சிங்கப்பூர் போன்ற நாடுகளுக்கு முதலீட்டாளர்களை ஈர்ப்பதற்காகச் சென்றேன். அதைக்கூட இங்கே இருக்கக்கூடிய எதிர்க்கட்சி தலைவர் எப்படி விமர்சித்தார் என்பது உங்களுக்குத் தெரியும். முதலீட்டை ஈர்க்கப் போகவில்லை, முதலீடு செய்யப் போயிருக்கிறார் என்று சொல்கிறார் இது அவர் புத்தி. எனவே, அதைப்பற்றி நான் அதிகம் பேச விரும்பவில்லை.
'இன்னுயிர் காப்போம், நம்மைக் காக்கும் 48' திட்டத்தின்கீழ் சாலை விபத்துக்குள்ளானவர்கள் எந்த மாநிலத்தவர்களாக இருந்தாலும், தமிழ்நாடு மட்டுமல்ல எந்த மாநிலத்தவராக இருந்தாலும் 48 மணி நேரத்திற்குள் அவசர அறுவை சிகிச்சை இலவசமாகச் செய்யப்படும் ஒரு மாநிலம் இருக்கிறது என்றால் அது தமிழ்நாடு மட்டும்தான். 18.12.2021 முதல் 31.05.2023 வரை விபத்தில் பாதிக்கப்பட்டவர்கள் 1 லட்சத்து 65 ஆயிரத்து 355 பேர் இந்தத் திட்டத்தின்கீழ் 145 கோடியே 27 லட்சம் ரூபாய் செலவில் சிகிச்சை பெற்று இன்னுயிர் மீட்கப்பட்டுள்ளனர்.
இங்கே நம்முடைய துறையினுடைய அமைச்சர் மா.சு சொன்னதைப்போல. சென்னையிலே. கிண்டி பகுதியிலே. கலைஞர் நூற்றாண்டு விழாவையொட்டி, கலைஞர் நூற்றாண்டு நினைவு பன்னோக்கு மருத்துவமனை மிகப் பிரமாண்டமாகக் கட்டப்பட்டுள்ளது. அது வருகிற 15-ஆம் தேதி அதனுடைய திறப்பு விழா நிகழ்ச்சி நடைபெறவிருக்கிறது என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன். மக்கள் நல்வாழ்வுத்துறையானது மாரத்தான் ஓட்டம் போல மிகப் பெரிய பணிகளைச் செய்து கொண்டிருக்கிறது.
கொரோனா அலையையும் எதிர்கொண்டு. மக்களைக் காத்து, மாநிலத்தின் மருத்துவக் கட்டமைப்பையும் வளர்த்தெடுத்தோம். இதற்குக் காரணமான அமைச்சர் மா.சுப்பிரமணியனுக்கு இந்த நேரத்தில் நன்றியையும், வாழ்த்துகளையும், பாராட்டுகளையும் தெரிவித்துக் கொள்வதோடு, அத்தோடு அவருக்கு துணை நிற்கக்கூடிய அனைத்து அதிகாரிகளையும் பணியாளர்களையும் இந்த நேரத்தில் நான் பாராட்டுகிறேன்.
இந்த வரிசையில்தான் இன்னொரு மகத்தான திட்டமாக நகர்ப்புற நலவாழ்வு மையங்கள் திறக்கப்பட்டு இருக்கின்றன. இது தொடர்பான முறையான அறிவிப்பை, "கிராமப்புறங்களில் ஆரம்பச் சுகாதார நிறுவனங்கள் அமைந்திருப்பதைப் போல நகர்ப்புறங்களில் நகர்ப்புற நல்வாழ்வு மையங்களை அமைக்க இருக்கிறோம்" எனச் சட்டமன்றத்தில் நான் 110 விதியின் கீழ் அறிவித்தேன்.
708 நகர்ப்புற நலவாழ்வு மையங்களை, கோடி 177 ரூபாய் மதிப்பீட்டில் தமிழ்நாட்டில் உள்ள மாநகராட்சி மற்றும் நகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் அமைத்திட உத்தரவிட்டேன். தமிழ்நாட்டில் ஏற்கனவே கிராமப்புற சுகாதார திட்டம் வலுவாக உள்ளது அதை நகர்ப்புறங்களில் விரிவாக்கும் திட்டமே இது. இத்திட்டத்தின் கீழ் தமிழகத்தில் அமைக்கப்பட்டுள்ள 500 நகர்ப்புற நலவாழ்வு மையங்களைத் திறந்து வைக்கப்படுகிறது. இந்த எண்ணிக்கை வரும் காலங்களில் அதிகரிக்கும்" என்று அவர் தெரிவித்தார்.
மேலும், சென்னை கிண்டியில் அமைக்கப்பட்டுள்ள பன்நோக்கு மருத்துவமனை ஜூன் 15ஆம் தேதி திறக்கப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.












Click it and Unblock the Notifications