தீபாவளிக்கு முன் வந்த சூப்பர் நியூஸ்.. 1000க்கும் கீழ் குறைந்த தினசரி கொரோனா பாதிப்பு.. என்ன காரணம்
சென்னை: தமிழ்நாட்டில் பல மாதங்களுக்குப் பிறகு தினசரி கொரோனா பாதிப்பு 1000க்கு கீழ் குறைந்துள்ளது. இன்றைய தினம் மாநிலத்தில் 990 பேருக்கு மட்டுமே கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டில் 2ஆம் அலையைத் தொடர்ந்து கொரோனா ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. பண்டிகை காலத்தைக் கருத்தில் கொண்டு அறிவிக்கப்பட்ட பல கூடுதல் தளர்வுகள் இன்று முதல் அமலுக்கு வருகிறது.
கூடுதல் தளர்வுகளால் வைரஸ் பாதிப்பு அதிகரிக்குமோ என்று அஞ்சப்பட்டது. இந்நிலையில், பல மாதங்களுக்குப் பிறகு இன்று மாநிலத்தில் தினசரி கொரோனா பாதிப்பு 1000க்கு கீழ் குறைந்துள்ளது.

தினசரி கொரோனா பாதிப்பு
தமிழ்நாட்டில் சுமார் 200 நாட்களுக்குப் பிறகு தினசரி கொரோனா பாதிப்பு 1000க்கு கீழ் குறைந்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் தமிழ்நாட்டில் 1.20 லட்சம் பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டதில் 990 பேருக்கு மட்டுமே வைரஸ் உறுதி செய்யப்பட்டுள்ளது. மாநிலத்தில் இதுவரை மொத்தம் 27,03,613 பேருக்கு வைரஸ் உறுதி செய்யப்பட்டுள்ளது. அதேபோல மாநிலத்தில் கொரோனா பாசிட்டிவ் விகிதமும் தொடர்ந்து கட்டுக்குள்ளேயே உள்ளது. தமிழகத்தின் பாசிட்டிவ் விகிதம் தற்போது 0.8%ஆக உள்ளது. அதிகபட்சமாகத் திருப்பூரில் 1.7%ஆகவும் சேலத்தில் 1.4%,ஆகவும் பாசிட்டிவ் விகிதம் உள்ளது. தலைநகர் சென்னையில் 0.6%ஆகவே பாசிட்டிவ் விகிதம் நீட்டிக்கிறது.

கொரோனா உயிரிழப்புகள்
அதேபோல கடந்த 24 மணி நேரத்தில் தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வந்த 3 பேர், அரசு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வந்த 17 பேர் என மொத்தம் 20 கொரோனா நோயாளிகள் உயிரிழந்துள்ளனர். அதிகபட்சமாகச் செங்கல்பட்டு மாவட்டத்தில் 4 பேரும் சென்னை மற்றும் கோவையில் தலா 3 பேரும் கொரோனாவால் உயிரிழந்துள்ளனர். இதுவரை மாநிலத்தில் 36,136 கொரோனாவால் உயிரிழந்துள்ளனர்.

ஆக்டிவ் கேஸ்கள்
அதேபோல ஆக்டிவ் கேஸ்களின் எண்ணிக்கையும் தமிழ்நாட்டில் தொடர்ந்து குறைந்து வருகிறது. நேற்று மாநிலத்தில் 11,492ஆக இருந்த ஆக்டிவ் கேஸ்கள், இன்று 11,309ஆகக் குறைந்துள்ளது அதேபோல கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் மொத்தம் 1,153 பேர் கொரோனாவில் இருந்து குணமடைந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். இதுவரை தமிழ்நாட்டில் 26,56,168 பேர் கொரோனாவில் இருந்து முற்றிலுமாக குணமடைந்துள்ளனர்

மாவட்ட வாரியாக பாதிப்பு
மாவட்ட வரியான கொரோனா பாதிப்பில் கோவை தான் மோசமாக உள்ளது. கோவையில் இன்று மொத்தம் 117 போருக்கு வைரஸ் பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. அதேபோல தலைநகர் சென்னையில் 111 பேருக்கு கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. செங்கல்பட்டில் 85 பேருக்கும் ஈரோட்டில் 73 பேருக்கும் திருப்பூரில் 66 பேருக்கும் கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. சென்னை மற்றும் கோவைத் தவிரத் தமிழ்நாட்டில் வேறு எந்த மாவட்டத்திலும் வைரஸ் பாதிப்பு 100ஐ தாண்டவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications