பழைய வீடியோவை பதிவிட்டு வதந்தி பரப்பினால் அவ்வளவுதான்! காவிரி விவகாரத்தில் தமிழக டிஜிபி வார்னிங்
சென்னை: காவிரி நதி நீர் பங்கீடு விவகாரத்தில் தமிழ்நாடு-கர்நாடகா இடையே சலசலப்புகள் ஏற்பட்டுள்ள நிலையில், இந்த விவகாரத்தில் வதந்தி பரப்பினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என தமிழக டிஜிபி எச்சரித்துள்ளார்.
காவிரி நீரை பெறுவதற்கு தமிழ்நாடு தொடர்ந்து கர்நாடக மாநிலத்திடம் போராடி வருகிறது. கடந்த ஆகஸ்ட் மாதம் விநாடிக்கு 25,000 கன அடி நீர் திறந்து விட வேண்டும் என்று தமிழ்நாடு வலியுறுத்தியிருந்தது. இதனை கர்நாடகா ஏற்கவில்லை. எனவே உச்சநீதிமன்றத்தை தமிழக அரசு நாடியது. அதேபோல கர்நாடக அரசும் நீதிமன்றத்தை நாட காவிரி மேலாண்மை ஆணையம் இந்த விவகாரம் குறித்து முடிவெடுக்க நீதிமன்றம் உத்தரவிட்டது.

ஆணையமானது, விநாடிக்கு 5,000 கனஅடி நீரை திறக்க கர்நாடகாவுக்கு கூறியது. ஆனால் கர்நாடகா இதை ஏற்கவில்லை. காவிரி நீர் பிடிப்பு பகுதிகளில் போதுமான மழை இல்லாததாலும், ஒட்டுமொத்தமாக பருவமழை குறைந்ததாலும் நீர் வரத்து குறைவாக இருக்கிறது என்று கூறி இந்த நீரை திறக்க மறுத்துவிட்டது. இதனையடுத்து உச்சநீதிமன்றமானது, காவிரி மேலாண்மை ஆணையம் வழிகாட்டிய அளவுக்கு தண்ணீரை திறக்க வேண்டும் என்று உத்தரவிட்டது.
இது கர்நாடகாவில் பெரும் சலசலப்புகளை உருவாக்கியுள்ளது. குறிப்பாக மண்டியா, சாம்ராஜ் நகர், மைசூர், பெங்களூர் உள்ளிட்ட இடங்களில் கர்நாடக விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். நாளை காவிரி நீர் பங்கீடு விவகாரம் தொடர்பாக கன்னட அமைப்புகள் பெங்களூரில் பந்த் நடத்தப்போவதாக அறிவித்துள்ளன. அதேபோல, வாட்டாள் நாகராஜ் தலைமையிலான கன்னட சலுவாளி கட்சி, கன்னட ரக்ஷன வேதிகே (பிரவீண்) ஆகிய அமைப்புகள், காவிரி பிரச்சனைக்காக செப்டம்பர் 29-ந் தேதி பந்த் நடத்தப்படும் என அறிவித்துள்ளன.
முன்னதாக நேற்று பெங்களூர் பந்த் நடைபெற்றது. இந்த போராட்டத்திற்கு கரும்பு விவசாயிகள் சங்கம் தலைமை தாங்கியது. இந்த பந்த காரணமாக தமிழ்நாடு-பெங்களூர் பேருந்து சேவை தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டது. அதேபோல தமிழ்நாட்டை சேர்ந்த லாரிகளும் நேற்று பெங்களூரில் நுழையவில்லை. இந்த பந்த் போராட்டத்தில் ஏராளமான அமைப்புகள் பங்கேற்றிருந்தன.பெங்களூரின் சுதந்திர தின பூங்காவில் விவசாய சங்கத்தினர் அரை நிர்வாணமாக போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அதேபோல தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உருவப்படம் அவமதிக்கப்பட்டது. கடைகள் அனைத்தும் காலை 9 மணி முதல் மாலை வரை மூடப்பட்டிருந்தன. இது தவிர ஓலா, ஊபர் போன்ற டாக்ஸி வாகன சேவை நிறுவனங்களும் பந்துக்கு ஆதரவளிப்பதாக கூறியிருந்தன. இதனையடுத்து நேற்று எந்தவித வன்முறையும் இன்றி பந்த் சுமுகமாக நடைபெற்று முடிந்தது. இப்படி இருக்கையில் தமிழ்நாட்டில் சிலர் சோஷியல் மீடியாக்களில் பழைய வீடியோக்களை பதிவிட்டு, புதிய வீடியோ என்று கூறி பதற்றத்தை ஏற்படுத்துவதாக புகார்கள் எழுந்தன.
இதுபோன்ற வீடியோக்கள் அதிக அளவு பரப்பப்படும் நிலையில், அது வன்முறையாக வெடிக்கும் என்று சொல்லப்பட்டது. இப்படி இருக்கையில், காவிரி விவகாரத்தில் வதந்தி பரப்பினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என தமிழக டிஜிபி எச்சரிக்கை விடுத்துள்ளார். பொதுமக்கள் விழிப்புடன் இருக்க வேண்டும், வதந்திகளை நம்ப வேண்டாம் என்றும் டிஜிபி சங்கர் ஜிவால் கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications