"பழைய ஓய்வூதிய திட்டத்தை.. அமல்படுத்துவது சாத்தியமில்லை!" காரணத்தை விளக்கும் நிதியமைச்சர் பிடிஆர்
சென்னை: அரசு ஊழியர்களுக்கு மீண்டும் பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும் என்ற கோரிக்கை அதிகரித்து வரும் நிலையில், இது தொடர்பாக அமைச்சர் பிடிஆர் முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார்.
Recommended Video
கடந்த ஆண்டு நடைபெற்ற சட்டசபைத் தேர்தலில் திமுக கூட்டணி, வென்று ஆட்சியைப் பிடித்தது. திமுக தலைவர் ஸ்டாலின் முதல்முறையாகத் தமிழக முதல்வராகப் பொறுப்பேற்றார்.
திமுக அரசு பொறுப்பு ஏற்று, இன்றுடன் ஓராண்டு நிறைவடையும் நிலையில், முதல்வர் ஸ்டாலின் இன்று சட்டசபையில் 5 முக்கிய திட்டங்களை அறிவித்தார்,

பழைய ஓய்வூதிய திட்டம்
கடந்த ஆண்டு நடைபெற்ற சட்டசபைத் தேர்தலில் திமுக பல்வேறு வாக்குறுதிகளை முன் வைத்து பிரசாரம் செய்தது. அதில் பெண்களுக்கு இலவச பேருந்து பயணம், பால் விலை குறைப்பு உள்ளிட்ட பல வாக்குறுதிகள் ஏற்கனவே நிறைவேற்றப்பட்டது. அதேநேரம் நீட் விலக்கு, பழைய ஓய்வூதிய திட்டம் உள்ளிட்ட வாக்குறுதிகள் இன்னும் நிறைவேற்றப்படவில்லை. அதிலும் பழைய ஓய்வூதிய திட்டத்தை நிறைவேற்ற வேண்டும் பல்வேறு அமைப்பினரும் தொடர்ந்து கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

முக்கிய அறிவிப்பு
திமுக தேர்தல் அறிக்கை வெளியான சமயத்திலேயே பழைய ஓய்வூதிய திட்டம் என்பது இனி வரும் காலங்களில் சாத்தியமில்லை என்றே பொருளாதார வல்லுநர்கள் கூறி இருந்தனர். தற்போது சட்டசபை கூட்டத்தொடர் நடைபெற்று வரும் நிலையில், தமிழக நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் இது தொடர்பாக சில முக்கிய கருத்துகளைத் தெரிவித்துள்ளார்.

அமைச்சர் பிடிஆர்
இன்று சட்டசபையில் பேசிய நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன், தமிழக அரசி பணியிடங்களுக்கான போட்டித் தேர்வுகளுக்கு விண்ணப்பிக்க ஒருங்கிணைந்த பிரத்தியேக செயலி அறிமுகப்படுத்தப்படும் என்றார். இந்த ஒரே செயலியின் மூலம் தேர்வு அறிவிப்பு, பாடத்திட்டங்கள், தேர்வு முடிவுகள் ஆகியவற்றை தெரிந்து கொள்ளலாம் என்றும் சான்றிதழ் சரிபார்த்தல் பணிகளையும் மேற்கொள்ளலாம் என்றும் கூறினார்.

சாத்தியமில்லை
தொடர்ந்து ஓய்வூதிய திட்டம் குறித்துப் பேசிய நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன், "தனிநபர் ஒருவருக்குப் பழைய ஓய்வூதியத் திட்டத்தில் ஆண்டுக்கு ரூ.2 லட்சம் செலவாகிறது. அதேநேரம் புதிய ஓய்வூதியத் திட்டத்தில் தனிநபர் ஒருவருக்கு ரூ.50,000 தான் செலவாகிறது. எனவே, பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்துவது சாத்தியமற்றது" என்று தெரிவித்தார். இது தவிர பல்வேறு முக்கிய அறிவிப்புகளையும் கூட அவர் வெளியிட்டார்.

முக்கியம்
தமிழ்நாட்டில் பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும் என்று பல்வேறு தொழிற் சங்கங்களும் தொடர்ந்து கோரிக்கை விடுத்து வருகின்றன. இந்தச் சூழலில் பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வாய்ப்பில்லை என்று நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் கூறியுள்ளது முக்கியமானதாகப் பார்க்கப்படுகிறது.












Click it and Unblock the Notifications