நாம் எங்கிருந்தாலும் தாயை கைவிடக் கூடாது.. அன்னையர் தினவிழாவில் தமிழக ஆளுநர் உருக்கம்
சென்னை: நாம் எங்கிருந்தாலும் தாயை கைவிடக் கூடாது என அன்னையர் தினவிழாவில் தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி உருக்கமாக பேசியிருந்தார்.
அன்னையர் தினம் இன்று கொண்டாடப்படுகிறது. தாய் என்றால் அன்பு, அன்பு என்றால் தாய், கருணை, அன்பின் மறு உருவம்தான் தாய். தாயிற் சிறந்த கோயிலும் இல்லை.. என்பதற்கேற்ப அன்னையே முதல் கடவுள்.

இன்றும் பல இடங்களில் தாய்களுக்கு கோயில் கட்டி கும்பிடும் வழக்கம் இருந்து வருகிறது. அன்னை இல்லையேல் ஒரு உயிர் கூட பிறந்திருக்காது. அன்னை ஜார்விஸ் என்ற பெண்ணால் 1908 இல் இந்த தினம் கொண்டாடப்பட்டது.
உயிர் பிரியும் வரை தனக்காக இல்லாமல் தன் குடும்பத்தினருக்காக கடைசி வரை உழைத்துக் கொண்டிருப்பவர் தாய். குழந்தைகளை வளர்க்க அவர்களிடம் இருந்து அர்ப்பணிப்பு குணத்தை நாம் கற்றுக் கொள்கிறோம். இன்றைய தினம் தாய்க்கு பிடித்தமான பரிசுகளை வாங்கித் தந்து மகிழ்விக்க வேண்டும்.
அன்னையர் தினத்திற்காக அரசியல் தலைவர்கள், சாதாரண மக்கள் என வாழ்த்துகளை பரிமாறி வருகிறார்கள். அந்த வகையில் ஆளுநர் மாளிகையில் நடந்த அன்னையர் தின விழாவில் ஆளுநர் ஆர்.என்.ரவி பேசுகையில் நாம் எங்கிருந்தாலும் தாயை கைவிடக் கூடாது. வளர்ந்து வரும் உலகில் தற்போதைய இளைஞர்கள் பெற்றோரை விட்டுவிட்டு வேறு பகுதிக்கு செல்கிறார்கள்.
குழந்தைகள், குடும்பத்தினரின் நலனுக்காக உழைப்பதை அன்னையர்கள் மகிழ்ச்சியாக கருதுகிறார்கள். தாய் மூலம் மட்டுமே மனிதனுக்கு அன்பு குணம் வருகிறது என ஆளுநர் ஆர்.என்.ரவி உருக்கமாக தெரிவித்துள்ளார். அது போல் முதல்வர் ஸ்டாலினும் அன்னையர் தின வாழ்த்துகளை டிவிட்டரில் பகிர்ந்துள்ளார்.
அதில் அவர் கூறியிருப்பதாவது: உடலுக்குள் இன்னொரு உயிராய் நம்மைச் சுமந்து, உயிருக்கும் மேலாய் அன்பு செலுத்திடும் அன்னையர் அனைவர்க்கும் அன்னையர் தின வாழ்த்துகள்! அன்பினால் அவனியை நிறைக்கும் தாயின் எதிர்பார்ப்புகளையும் விருப்பங்களையும் மதிப்போம், நிறைவேற்றுவோம்! இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
அது போல் புதுவை மாநில கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன் தனது வாழ்த்து செய்தியில் கூறியிருப்பதாவது:- பாலைத்தரும் அன்னையர் வாழ்வு பாலைவனமாகாமல் சோலைவனமாகவும், அணைத்து நம்மை வளர்ப்பவர் வாழ்வு அணைந்து போகாமல், அனைத்தும் கிடைக்கப் பெற்று, பெற்றவளின் மனம் குளிர கற்று, உற்ற துணையாய் முன்னேறி முழு வாழ்வு வாழ்வதே மக்கள் மனித தெய்வங்களாம் அம்மாவிற்கு சொல்லும் வாழ்த்து. செலுத்தும் நன்றி என்றார். என் அம்மாவை வணங்கி எண்ணற்ற அம்மாக்களுக்கு என் வண்ணமயமான அன்னை தின வாழ்த்துக்கள்.
முன்னாள் முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் வெளியிட்டுள்ள அறிக்கையில், தனித்துவம் பெற்ற அன்பை, யாருடனும் ஒப்பிட முடியாத, அளவிட முடியாத அன்பை, கற்பனை செய்ய முடியாத பாசத்தை அள்ளித்தரும் தாயின் தன்னலமற்ற தியாகத்தைப் போற்றும் வகையில் கொண்டாடப்படும் அன்னையர் தினமான இன்று அனைத்து தாய்மார்களுக்கும் எனது அன்னையர் தின வாழ்த்துக்களை மட்டற்ற மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன் என கூறி உள்ளார்.
அம்மா மக்கள் முன்னேற்ற கழக பொதுச்செயலாளர் டி.டி.வி. தினகரன் கூறியிருப்பதாவது:- எல்லா உயிர்களிடத்தும் நிபந்தனையற்ற அன்பை வாரி வழங்கும் உலகம் முழுவதும் உள்ள அன்னையர்களுக்கு என் நெஞ்சார்ந்த அன்னையர் தின வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன். இன்றைய அவசர கால டிஜிட்டல் யுகத்தில் வீடு, அலுவலகம் என அனைத்தையும் கவனிக்க வேண்டிய நெருக்கடியான காலக்கட்டத்திலும் அனைவரிடத்திலும் அன்பு செலுத்த அன்னையர்கள் என்றுமே தவறுவதில்லை.
தமிழ்நாட்டு மக்களும், லட்சோப லட்சம் கழக கண்மணிகளுக்கும், பெற்றெடுக்காத தாயாக திகழ்ந்தவர் மறைந்த அம்மா. அவரது ஆட்சிக்காலத்தில் அன்னையர்களுக்காக பல நலத்திட்டங்களை சிறப்புற செயல்படுத்தி அனைவரின் அன்பை பெற்றவராக திகழ்ந்தார். அம்மா காட்டிய அன்பு வழியில் தாய்மார்களை நேசிக்கும், அரவணைக்கும் பண்பை நமக்குள் என்றென்றும் வளர்த்தெடுப்போம் என்று இந்த அன்னையர் தினத்தில் உறுதி ஏற்போம் என்றார்.












Click it and Unblock the Notifications