ஸ்மோக் பிஸ்கட் ரொம்ப ஆபத்து.. உணவில் திரவ நைட்ரஜன் கலந்து விற்றால் நடவடிக்கை! தமிழக அரசு வார்னிங்
சென்னை: உணவுப் பொருட்களில் திரவ நைட்ரஜனை பயன்படுத்துவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று தமிழ்நாடு உணவு பாதுகாப்பு ஆணையர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
சமீபத்தில் கர்நாடக மாநிலம் தாவணகெரேவில் என்ற பகுதியில் ஸ்மோக் பிஸ்கட் எனப்படும் திர நைட்ரஜன் கலந்த பிஸ்கட்டை சாப்பிட்ட சிறுவனுக்கு திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டது.

அந்த சிறுவன் ஸ்மோக் பிஸ்கட்டை சாப்பிட்ட கொஞ்ச நேரத்திலேயே கடுமையான வயிற்று வலியில் அலறி துடித்தார். இது தொடர்பான வீடியோ இணையத்தில் பகீர் கிளப்பியது.
ஆபத்து: இதையடுத்து இந்த ஸ்மோக் பிஸ்கட்களை சாப்பிட வேண்டாம் என பலரும் எச்சரிக்கத் தொடங்கினர். திரவ நைட்ரஜனை வைத்து இந்த smoke biscuit தயாரிக்கப்படும் நிலையில், இது உயிருக்கு ஆபத்தானது. ஏனென்றால் திரவ நைட்ரஜனின் அதீத குளிர்ச்சி சுவாசப்பாதை, உணவுப்பாதையை உறைய வைத்துவிடும் ஆபத்து இருக்கிறது. இதனால் நேரடியாக உண்ணும் பொருட்களில் திரவ நைட்ரஜனை பயன்படுத்தக் கூடாது.
பொதுவாகத் தொழிற்சாலைகளில் பொருட்களைக் குளிர்ச்சியான நிலையில் பதப்படுத்தி வைக்கவே இதைப் பயன்படுத்துவார்கள். ஆனால், சிறுவர்களைக் கவர இதை பிஸ்கட்களில் கலந்து ஸ்மோக் பிஸ்கட், ஸ்மோக் பீடா என சிலர் விற்பனை செய்கின்றனர். இதனால் உயிரிழப்பும் கூட ஏற்படலாம் என்பதால் இதைப் பயன்படுத்த வேண்டாம் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
எச்சரிக்கை: திரவ நைட்ரஜனை குடிப்பதால் திசுக்கள் உறைந்து இரைப்பைக் குழாய் சிதையும் அபாயமும் இருக்கிறது. இதற்கிடையே தமிழ்நாடு அரசும் இது தொடர்பாக எச்சரிக்கை விடுத்துள்ளது. உணவுப் பொருட்களில் திரவ நைட்ரஜனை பயன்படுத்துவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று தமிழ்நாடு உணவு பாதுகாப்பு ஆணையர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
தமிழக அரசு: இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில், "உணவு பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய சட்டம் 2006 மற்றும் ஒழுங்குமுறைகள் 2011-ன்படி திரவ நைட்ரஜன் ஒரு செயலாக்க உதவியாக உறைதல் தன்மையுள்ள பொருட்களான பால் சார்ந்த இனிப்பு வகைகள் மற்றும் ஐஸ்கிரீம் போன்ற உணவுப் பொருட்களில் உறைதல் பணியினை மேற்கொள்ள மட்டுமே உதவுகிறது.
மேலும் திரவ நைட்ரஜன் உணவு பாதுகாப்பு மற்றும் தரநிலைகள் (உணவுப் பொருட்கள் தரம் மற்றும் உணவு சேர்க்கைகள்) ஒழுங்குமுறை, 2011இன் படி Packing Gas மற்றும் Freezant ஆக மட்டுமே பயன்படுத்த முடியும்.
கடும் நடவடிக்கை: எனவே உணவு பாதுகாப்பு மற்றும் தரநிர்ணய சட்டம் 2006. பிரிவு 38(10)-ன்படி உணவு பாதுகாப்புத் துறையைச் சேர்ந்த நியமன அலுவலர்கள் மற்றும் உணவு பாதுகாப்பு அதிகாரிகள் பிஸ்கட், ஐஸ்கிரீம், வேபர் பிஸ்கட் போன்ற உணவுப் பொருட்களுடன் திரவ நைட்ரஜனை நேரடியாகக் கலந்து விற்பனை செய்யும் உணவு வணிகர்கள் மீது உணவு பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய சட்டம். 2006-ன்படி உரியச் சட்ட நடவடிக்கை எடுக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது" என்று அதில் கூறப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications