திடீர் நெஞ்சுவலி.. அமைச்சர் அன்பில் மகேசுக்கு ஆஞ்சியோகிராம் பரிசோதனை! வெளியான பரபர தகவல்
சென்னை: திடீர் நெஞ்சுவலி காரணமாக பெங்களூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள தமிழக பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேசுக்கு ஆஞ்சியோகிராம் பரிசோதனை மேற்கொள்ளப்பட உள்ளதாக பரபரப்பான தகவல்கள் வெளியாகி உள்ளது. அது ஏன்? பரிசோதனை ஏன் மேற்கொள்ளப்பட உள்ளது? என்பது பற்றிய விபரம் வருமாறு:
முதல்வர் ஸ்டாலின் அமைச்சரவையில் பள்ளி கல்வித்துறை அமைச்சராக இருப்பவர் அன்பில் மகேஷ். இவர் இன்று பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்க சென்றார். சேலத்தில் இருந்து கிருஷ்ணகிரிக்கு காரில் அவர் சென்று கொண்டிருந்தார்.

அப்போது திடீரென அவர் நெஞ்சுவலிப்பதாக கூறியுள்ளார். இதையடுத்து உடனடியாக அவர் தர்மபுரி மாவட்டம் காரிமங்கலத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது.
இதையடுத்து அமைச்சர் அன்பில் மகேஷ் மேல் சிகிச்சைக்காக பெங்களூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு டாக்டர்கள் சிகிச்சை அளித்தனர். தற்போது அவர் நலமாக இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். இருப்பினும் அவரை தொடர்ந்து மருத்துவர்கள் கண்காணித்து வருகின்றனர்.
கண்ணன் என்ற டாக்டர் தலைமையிலான குழு அமைச்சர் அன்பில் மகேசுக்கு சிகிச்சை அளித்து வருகிறது. இதற்கிடையே தான் தற்போது இன்னொரு தகவல் வெளியாகி உள்ளது. அதாவது அமைச்சர் அன்பில் மகேசுக்கு ஆஞ்சியோகிராம் பரிசோதனை மேற்கொள்ளப்பட உள்ளதாம். தற்போது அவர் நெஞ்சு வலிப்பதாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இதனால் நெஞ்சு வலி தொடர்பான ஆஞ்சியோகிராம் பரிசோதனை மேற்கொள்ளப்பட உள்ளது. பொதுவாக இதய ரத்த நாளங்களில் அடைப்புகள் இருந்தால் ரத்தம் சரியாக இதயத்துக்கு கிடைக்காது. இதனால் மாரடைப்பு ஏற்படும். இத்தகைய சூழலில் ஆஞ்சியோகிராம் பரிசோதனை என்பது மேற்கொள்ளப்படும். இந்த பரிசோதனை என்பது இதயத்துக்கு ரத்தம் எடுத்து செல்லும் ரத்த நாளங்களில் அடைப்புகள் ஏதேனும் இருக்கிறதா என்பதை கண்டறியும் பரிசோதனை முறையாகும்.
இந்த பரிசோதனை முடிவடையும்பட்சத்தில் இதய ரத்த நாளங்களில் அடைப்புகள் ஏதேனும் இருக்கிறதா? இல்லையா? என்பது கண்டறியப்பட்டு விடும். இந்த பரிசோதனை ரிசல்ட் வந்த பிறகே அவருக்கு அடுத்தக்கட்டமாக எந்த வகையான சிகிச்சை அளிக்கப்பட வேண்டும் என்பதை டாக்டர்கள் முடிவு செய்வார்கள். மேலும் அன்பில் மகேசுக்கு கணையம் சார்ந்த பிரச்சனைகளுக்கான பரிசோதனைகளும் மேற்கொள்ளப்பட உள்ளதாக கூறப்படுகிறது. இதனால் அன்பில் மகேசின் மனைவி மற்றும் குடும்பத்தினர் பெங்களூர் விரைந்துள்ளனர்.
முன்னதாக அமைச்சர் செந்தில் பாலாஜி அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டு இருந்தார். இவரும் நெஞ்சுவலியால் பாதிக்கப்பட்ட நிலையில் ஆஞ்சியோகிராம் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இந்த பரிசோதனையில் அவருக்கு இதய ரத்த நாளங்களில் 3 அடைப்புகள் இருப்பது தெரியவந்தது. இதையடுத்து அவருக்கு பைபாஸ் அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications