"டெல்டா+".. ஒரு கேஸ் வந்தாலே போதும் மொத்தமாக சீல்.. தமிழ்நாடு அரசின் புது "கண்டெயின்மெண்ட்" அஸ்திரம்
சென்னை: தமிழ்நாட்டில் டெல்டா + வகை கொரோனா கண்டறியப்படும் பகுதிகள் நோய் கட்டுப்பாட்டு பகுதியாக மாற்றப்படும் என்று தமிழ்நாடு அரசு முடிவு செய்துள்ளது.
Recommended Video
நாடு முழுக்க டெல்டா + வைரஸ் ஆங்காங்கே பரவ தொடங்கி உள்ளது. 40க்கும் அதிகமான நபர்கள் நாடு முழுக்க டெல்டா + வைரஸ் மூலம் பாதிக்கப்பட்டுள்ளனர். தமிழ்நாட்டில் டெல்டா பிளஸ் வகை தொற்றால் மூன்று பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
சென்னை, காஞ்சிபுரம், மதுரையில் தலா ஒருவருக்கு டெல்டா+ தொற்று கண்டறியப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் இதனால் டெல்டா + பரவல் தீவிரமாக கண்காணிக்கப்பட்டு வருகிறது.

டெல்டா +
இந்த நிலையில் டெல்டா + கேஸ்களை கட்டுப்படுத்துவதில் இப்போதே மத்திய மாநில அரசுகள் தீவிரம் காட்டி வருகின்றன. இந்தியாவில் எங்கெல்லாம் டெல்டா + கொரோனா கேஸ்கள் பதிவாகிறதோ அங்கெல்லாம் கட்டுப்பாடுகளை அதிகரிக்க வேண்டும் என்று மத்திய அரசு அறிவுறுத்தி உள்ளது. இது தொடர்பாக அனைத்து மாநில தலைமை செயலாளர்களுக்கு உத்தரவு பறந்துள்ளது.

மாநில அரசு
ஒவ்வொரு மாநில அரசின் தலைமைச்செயலர்களும் இதில் தனி கவனம் செலுத்த வேண்டும். எங்கு கேஸ் வந்தாலும் உடனே அங்கு கட்டுப்பாட்டு விதிகளை கொண்டு வர வேண்டும்.டெல்டா + வைரஸின் இரட்டிப்பு நேரம் மிக வேகமாக உள்ளது. இதனால் மாநில அரசுகள் கண்டிப்பான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்று உத்தரவிட்டு இருந்தது.

தமிழ்நாடு
இதற்கு ஏற்ப தற்போது தமிழ்நாடு அரசும் தற்போது கட்டுப்பாட்டு விதிகளை மாற்றியுள்ளது. அதன்படி, ஒரு பகுதியில் டெல்டா பிளஸ் வைரசால் பாதிக்கப்பட்ட நபர் கண்டறியப்பட்டால், அந்த பகுதி நோய் கட்டுப்பாட்டு பகுதியாக மாற்றப்படும். அங்கு தீவிர கண்காணிப்புகள் மேற்கொள்ளப்படும். கேஸ் எங்கெல்லாம் இருக்கிறதோ அங்கெல்லாம் கட்டுப்பாடுகள் கொண்டு வரப்படும் என்று அரசு அறிவித்துள்ளது.

கண்டெயின்மெண்ட்
அதாவது, இனி ஒரு தெருவில் டெல்டா + வரை கண்டறியப்பட்டால் அந்த பகுதி கண்டெயின்மெண்ட் என்று அறிவிக்கப்படும். முதல் அலையின் போது கண்டெயின்மெண்ட் பகுதிகள் எப்படி உருவாக்கப்பட்டதோ அதேபோல் டெல்டா + பரவலை தடுக்கும் வகையில் கண்டெயின்மெண்ட் பகுதிகள் உருவாக்கப்படும். டெல்டா + கேஸ்கள் இருக்கும் ஏரியாக்கள் மட்டும் சீல் வைக்கப்படும்.

விதிமுறை
இந்த கொரோனா வகை அதிக பாதிப்பை ஏற்படுத்த கூடாது என்பதால் இந்த கட்டுப்பாட்டு விதியை கையில் எடுத்துள்ளனர். கேரளாவில் இதேபோல் டெல்டா + கேஸ்கள் வந்த பகுதிகள் சீல் வைக்கப்பட்டு உள்ளன. பத்தினம்திட்டாவில் உள்ள கட்பாரா கிராமம், பாலக்காட்டில் உள்ள பரலி, பரியாரி ஆகிய கிராமங்களில் டெல்டா + வைரஸ் காரணமாக மொத்தமாக சீல் வைக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications