தேர்தல் ரிசல்ட்டிற்கு பின் சர்ப்ரைஸ்? அமைச்சரவையில் விரைவில் மாற்றமா? "பொடி" வைத்து பேசும் உதயநிதி
சென்னை: திமுக அரசில் அமைச்சரவை பதவி கொடுத்தால் ஏற்பீர்களா என்ற கேள்விக்கு உதயநிதி ஸ்டாலின் பதில் அளித்துள்ளார்.
சென்னை தேனாம்பேட்டையில் உள்ள எஸ்ஐஇடி கல்லூரியில் உள்ள வாக்குச்சாவடியில் இன்று காலை முதல்வர் ஸ்டாலின் தனது மனைவி துர்கா ஸ்டாலினுடன் வாக்களித்தார். அவரை தொடர்ந்து உதயநிதி ஸ்டாலின் தனது மனைவி கிருத்திகா உதயநிதியுடன் அதே வாக்குச்சாவடியில் வாக்களித்தார்.
உதய சூரியன் சின்னம் பொறிக்கப்பட்ட லோகோ கொண்ட சட்டையுடன் உதயநிதி இன்று தேனாம்பேட்டையில் வாக்களித்தார்.

பேட்டி
இதையடுத்து பேட்டி அளித்த உதயநிதி ஸ்டாலின், சட்டசபை தேர்தலில் திமுக பெரிய வெற்றிபெற்றது. அதை விட மிகப்பெரிய வெற்றியை இதில் பெறுவோம். 10 நாட்களாக தமிழ்நாடு முழுக்க பிரச்சாரம் செய்தேன். பெரிய வரவேற்பு கிடைத்தது. தமிழ்நாடு அரசு மீது மக்களுக்கு நம்பிக்கை, நன்மதிப்பு இருக்கிறது. மக்கள் உற்சாக வரவேற்பு கொடுத்தனர். தேர்தல் முடிவிலும் இது எதிரொலிக்கும்.

அமைச்சர் பதவி
வேலுமணி திமுக அரசு மீது ஆதாரமற்ற புகார் தருகிறார். மேற்கு மண்டலத்தில் திமுக பெரிய வெற்றிபெற போகிறது. எனக்கு அமைச்சர் பதவி கொடுப்பதை பற்றி நான் பேச முடியாது. திமுக தலைமைதான் முடிவு எடுக்க வேண்டும். அமைச்சர் பதவி ஒருவேளை கொடுக்கப்பட்டால் அப்போது பேசிக்கொள்ளலாம். முடிவு எடுக்க வேண்டியது முதல்வர் ஸ்டாலின்தான், என்று உதயநிதி ஸ்டாலின் குறிப்பிட்டுள்ளார்.

பேச்சு என்ன?
திமுகவில் உதயநிதி ஸ்டாலினுக்கு அமைச்சர் பதவி வழங்கப்பட வாய்ப்பு உள்ளதாக பல நாட்களாகவே பேச்சு அடிபட்டு வருகிறது. நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலுக்கு பின் தமிழ்நாடு அமைச்சரவை மாற்றப்பட வாய்ப்பு உள்ளதாக தகவல்கள் வருகின்றன. ஊரக உள்ளாட்சி தேர்தலில் அமைச்சர்களின் தொகுதிகளில் திமுகவின் வெற்றியை பொறுத்தும், அமைச்சரவையின் செயல்பாடுகளை பொருத்தும் அமைச்சரவையில் மாற்றம் செய்யப்படலாம் என்று தகவல்கள் வந்தன.

சூசகம்
இந்த நிலையில்தான் உதயநிதி ஸ்டாலின் தனக்கு அமைச்சர் பதவி வேண்டுமா, வேண்டாமா என்று நேரடியாக சொல்லாமல் பொடி வைத்து பேசி இருக்கிறார். தேர்தலுக்கு பின்பாக அமைச்சர்களின் பணிகளையும், தேர்தல் ரிசல்டையும் வைத்து அமைச்சரவையில் சில சிறிய மாற்றங்கள் நடக்கலாம் என்று கூறப்படுகிறது. முக்கியமாக அதிமுகவில் இருந்து திமுகவிற்கு வந்த பலருக்கு ஏற்கனவே அமைச்சர் பதவி வழங்கப்பட்டுள்ளதால், திமுகவில் பல காலமாக இருக்கும் நபர்களுக்கு அமைச்சர் பதவி இந்த முறை வழங்கப்படலாம் என்று கூறப்படுகிறது.

100 சதவிகிதம்
அதாவது தேர்தலில் சரியாக பணிகளை செய்ய, துறை ரீதியாக பெரிய அதிரடியை நிகழ்த்தாத, 100% ரிசல்ட் தராத அமைச்சர்கள் மாற்றப்பட வாய்ப்பு உள்ளதாக தகவல்கள் வருகின்றன. உதயநிதி ஸ்டாலின் போன்ற இளையவர்களுக்கு, தென் தமிழ்நாட்டில் உள்ள சில எம்எல்ஏக்களுக்கும் அமைச்சர் பதவி அளிக்கப்படலாம் என்று தகவல்கள் வந்த வண்ணம் உள்ளன. இந்த நிலையில்தான் உதயநிதி ஸ்டாலின் அமைச்சர் பதவி குறித்து சூசகமாக பேசி இருக்கிறார்.












Click it and Unblock the Notifications