தமிழகத்திற்கு காவிரி தேவையில்லையா? கன்னட அமைப்பினரின் ட்வீட்டுகளை டேட்டாவுடன் நொறுக்கிய வெதர்மேன்
சென்னை: தமிழகத்தில் கூடுதலாக மழை பெய்வதால் காவிரி நீர் தேவையில்லை என கன்னட அமைப்பின சமூகவலைதளங்களில் கூறி வருவது அபத்தம் என தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் கடந்த சில தினங்களாக மேற்கு திசை காற்று நிலவி வருவதால், ஆங்காங்கே மழை பெய்து வருகிறது. சென்னை உள்ளிட்ட மாவட்டங்களில் மாலை மற்றும் இரவு நேரங்களில் அதிக மழை பெய்து வருகிறது.

சென்னையில் தென்மேற்கு பருவமழை காலத்தில் வழக்கத்தை விட அதாவது இயல்பை விட அதிகமாகவே மழை பெய்து வருகிறது. இந்த நிலையில் இன்றைய தினம் வங்கக் கடலில் உருவான காற்றழுத்தம் ஆழ்ந்த காற்றழுத்தமாக வலுப்பெற்றுள்ளது.
இதனால் வரும் 4-ஆம் தேதி வரை சென்னை உள்ளிட்ட இடங்களில் மழை பெய்யும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது. இந்த நிலையில் மழை நிலவரம் குறித்து தமிழ்நாடு வெதர்மேன் தனது எக்ஸ் சமூகவலைதள பக்கத்தில் கூறியிருப்பதாவது: கன்னட அமைப்புகள் சில சென்னையில் மழை பெய்து வருவதால் தமிழகத்திற்கு கூடுதல் மழை கிடைத்துள்ளதாக கூறுகிறார்கள்.
கூடுதல் மழை பெய்துள்ளதால் எதற்காக காவிரி நீர் என்று கேட்கிறார்கள். அவர்கள் எல்லாம் ஒரு விஷயத்தை புரிந்து கொள்ள வேண்டும். அதாவது சென்னை மற்றும் வடக்கு மாவட்டங்கள்தான் கூடுதல் மழையை பெற்றனவே தவிர, காவிரி டெல்டா மாவட்டங்களில் குறைந்த அளவிலான மழையே பெய்துள்ளது.
மேட்டூர் அணையில் 10 டிஎம்சி தண்ணீரில் 5 டிஎம்சி தண்ணீரை பயன்படுத்த முடியாத நிலை உள்ளது. காவிரி டெல்டா மாவட்டங்களில் தென்மேற்கு பருவமழையின் அளவு மிகவும் குறைவாகவே உள்ளது. கர்நாடகாவிலும் தென் மேற்கு பருவமழை குறைவாகவே கிடைத்துள்ளது என பிரதீப் ஜான் தெரிவித்துள்ளார். கர்நாடகா மக்களின் தவறான பிரச்சாரத்தை வானிலை மையத்தின் வரைப்படத்தை கொண்டு விளக்கியுள்ளார்.
அக்டோபரில் நல்ல மழை பெய்தால் காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பற்றாக்குறையே நிலவும் என்றும் அவர் தெரிவித்துள்ளார். குமரி, நெல்லை மற்றும் பெரியாறு நீர்ப்பிடிப்புப் பகுதிகளில் உள்ள அணைகள், மிக மோசமாகப் பாதிக்கப்பட்ட சில மாவட்டங்களில் அக்டோபர் மாதத்தில் அதிக மழை பெய்ய வாய்ப்புள்ளது. சென்னை மற்றும் வட மாவட்டங்களில் அக்டோபர் மாதம் குறைவாக மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications