ஃபைனல் மேட்சை இடையூறு இல்லாமல் பார்க்கலாம்! தமிழ்நாடு மின்வாரியம் கொடுத்த அசத்தல் அறிவிப்பு
சென்னை: உலக கோப்பை கிரிக்கெட் போட்டியின் இறுதி ஆட்டம் இன்று நடைபெறுகிறது. இந்நிலையில் இந்த போட்டியை தடையில்லாமல் காண தடையில்லா மின்சாரம் வழங்கப்படும் என தமிழ்நாடு மின்சார வாரியம் கூறியுள்ளது.
அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி ஸ்டேடியத்தில் இறுதி போட்டி இன்று நடைபெறுகிறது. இதில் இந்தியா-ஆஸ்திரேலியா அணிகள் மோதுகின்றன. இந்த மைதானம் உலகில் மிகப்பெரியதாகும். இதில் ஒரே நேரத்தில் சுமார் 1.32 லட்சம் மக்கள் போட்டியை கண்டு ரசிக்க முடியும். எனவே போட்டியை காண இந்தியாவின் பல்வேறு மாநிலங்களிலிருந்தும், ஆஸ்திரேலியா உள்ளிட்ட நாடுகளிலிருந்தும் ரசிகர்கள் அகமதாபாத்தில் குவிந்து வருகின்றனர்.

நாடு முழுவதும் இந்த இறுதி போட்டியின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்திருக்கிறது. அகமதாபாத்தில் நடைபெறும் போட்டியை காண பிரதமர் மோடி, ஆஸ்திரேலிய துணை பிரதமர் ரிச்சர்ட் மார்லஸ், 8க்கும் மேற்பட்ட மாநில முதலமைச்சர்கள், அமித்ஷா, அனுராக் தாக்கூர் உள்ளிட்ட ஒன்றிய அமைச்சர்கள், தமிழ்நாடு அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், உச்சநீதிமன்ற, குஜராத் உயர்நீதிமன்ற நீதிபதிகள், முகேஷ் அம்பானி, லட்சுமி மிட்டல் உள்ளிட்ட தொழிலதிபர்கள், அமெரிக்கா, சிங்கப்பூர் உள்ளிட்ட நாடுகளின் தூதர்கள் என பலரும் நரேந்திர மோடி ஸ்டேடியத்திற்கு வருகின்றனர். எனவே பாதுகாப்பு பணிகளுக்காக மட்டும் சுமார் 6000 பாதுகாப்பு படை வீரர்கள் ஈடுபடுகின்றனர்.
தமிழ்நாட்டை பொறுத்த அளவில் இன்று சென்னையிலிருந்து அகமதாபாத் செல்லும் விமானத்தின் டிக்கெட் விலை 3 மடங்கு அதிகரித்திருக்கிறது. போட்டியை நேரடியாக காண முடியாதவர்கள் வீட்டிலிருந்து போட்டியை கண்டுகளிக்க தடையில்லா மின்சாரம் விநியோகிக்கப்படும் என தமிழ்நாடு மின்சார வாரியம் (TANGEDCO) அறிவித்திருக்கிறது.
இது குறித்து மின்வாரியம் பதிவிட்டுள்ள ட்வீட்டில், "இந்தியாவின் உலகக் கோப்பை வெற்றிக்காக நாம் அனைவரும் ஒன்றிணைந்து TANGEDCO-வின் தடையில்லா மின்சாரத்துடன் ICC உலகக் கோப்பை கிரிக்கெட் 2023 ஐ கண்டு மகிழுங்கள்" என்று குறிப்பிடப்பட்டிருக்கிறது. சென்னையை பொறுத்த அளவில் கிரிக்கெட் ரசிகர்களை உற்சாகப்படுத்தும் விதமாக மெரினா கடற்கரையில் பெரிய எல்இடி டிஸ்பிளே வைக்கப்பட்டிருக்கிறது. இதில் போட்டி நேரலையாக ஒளிபரப்பப்பட்டு வருகிறது.
அதேபோல பிரதமர் நரேந்திர மோடி மற்றும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆகியோர் இந்திய அணி வெற்றி பெறுவதற்கு வாழ்த்துக்களை கூறியுள்ளனர்.












Click it and Unblock the Notifications