டாஸ்மாக் ரெய்டு விசாரணையை வேறு அமர்வுக்கு மாற்ற திடீர் முறையீடு! தலைமை நீதிபதி முக்கிய அறிவுறுத்தல்
சென்னை: கடந்த மாதம் டாஸ்மாக் அலுவலகத்தில் அமலாக்கத் துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர். அமலாக்கத்துறை சோதனைக்கு எதிராக டாஸ்மாக் மற்றும் தமிழக அரசு தாக்கல் செய்த வழக்குகளைச் சென்னை ஐகோர்ட்டில் நீதிபதிகள் எஸ் எம் சுப்பிரமணியம், கே ராஜசேகர் விசாரித்து வருகின்றனர். இதற்கிடையே விசாரணையை வேறு அமர்வுக்கு மாற்றக் கோரி சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி அமர்வில் முறையீடு செய்யப்பட்டுள்ளது.
கடந்த மாத தொடக்கத்தில் டாஸ்மாக் அலுவலகத்தில் அமலாக்கத் துறை அதிகாரிகள் ரெய்டு நடத்தனர். மார்ச் 6ம் தேதி தொடங்கிய இந்த சோதனை மார்ச் 8ம் தேதி வரை நடைபெற்றது. 3 நாட்கள் நடைபெற்ற இந்த சோதனை முடிந்த பிறகு, மதுபானங்கள் கொள்முதல் உட்பட பல விஷயங்களில் 1000 கோடி ரூபாய்க்கு முறைகேடு நடந்ததுள்ளதாக அமலாக்கத் துறை அறிக்கை வெளியிட்டிருந்தது.

நீதிமன்றத்தில் வழக்கு
இருப்பினும், இந்த சோதனையை எதிர்த்து டாஸ்மாக் நிறுவனம் சார்பில் வழக்கு தொடரப்பட்டது. அமலாக்கத் துறையின் இந்த சோதனையை அரசியலமைப்பு சட்டத்தின் கூட்டாட்சி கட்டமைப்புக்கு விரோதமானது என அறிவிக்கக் கோரியும், விசாரணை என்ற பெயரில் டாஸ்மாக் அதிகாரிகளைத் துன்புறுத்தக் கூடாது என உத்தரவிடக் கோரியும் சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது. மேலும், அரசு அனுமதி இல்லாமல் நடந்த சோதனையை சட்டவிரோதமான என அறிவிக்கக்கோரியும் தமிழக உள்துறை செயலாளரும், டாஸ்மாக் நிர்வாக இயக்குநரும் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்திருந்தனர்.
இந்த வழக்கை முதலில் நீதிபதிகள் எம் எஸ் ரமேஷ் மற்றும் என் செந்தில்குமார் அடங்கி அமர்வு விசாரித்தனர். அவர்கள் டாஸ்மாக் அலுவலகத்தில் நடத்தப்பட்ட விசாரணை குறித்து கேள்வி எழுப்பியிருந்தனர். இருப்பினும், வழக்கு கடந்த வாரம் விசாரணைக்கு வந்த போது இருவரும் வழக்கு விசாரணையில் இருந்து விலகுவதாக அறிவித்தனர். இதையடுத்து வழக்கை நீதிபதிகள் எஸ் எம் சுப்பிரமணியம் மற்றும் கே ராஜசேகர் அடங்கிய அமர்வு விசாரித்தது.
அமலாக்க துறை
கடந்த செவ்வாய்க்கிழமை வழக்கு விசாரணைக்கு வந்த நிலையில், அமலாக்கத் துறை சார்பில் பதில் மனு தாக்கல் செய்யப்பட்டது. அதில் அமலாக்கத் துறையின் சட்டப்பூர்வமான விசாரணையைச் சீர்குலைக்கும் வகையில் தமிழக அரசு தாக்கல் செய்துள்ள வழக்கை அபராதத்துடன் தள்ளுபடி செய்ய வேண்டும் எனக் கோரிக்கை விடுக்கப்பட்டு இருந்தது. மேலும், லஞ்ச ஒழிப்புத் துறை பதிவு செய்த வழக்குகளின் அடிப்படையில் மட்டுமே சோதனை நடத்தியதாகவும், அந்த ஆதாரங்களும் இல்லாமல் சோதனை நடத்தவில்லை எனவும் தெரிவிக்கப்பட்டிருந்தது.
முறையீடு
இதையடுத்து இந்த வழக்கில் அமலாக்கத்துறை தாக்கல் செய்துள்ள பதில் மனுவுக்கு பதில் அளிக்கத் தமிழக அரசுக்கு அவகாசம் வழங்கிய நீதிபதிகள், விசாரணையை ஏப்ரல் 8ம் தேதிக்கு தள்ளி வைத்திருக்கிறார்கள். இந்நிலையில், நீதிபதி எஸ் எம் சுப்பிரமணியம் தலைமையிலான அமர்வில் இடம் பெற்றிருக்கும் நீதிபதி கே ராஜசேகர், அமைச்சர் செந்தில் பாலாஜி தரப்பில் ஆஜராகும் வழக்கறிஞரின் சகோதரர் என்பதால், தமிழக அரசு தாக்கல் செய்த வழக்கின் விசாரணையை வேறு அமர்வுக்கு மாற்ற வேண்டும் என மூத்த வழக்கறிஞர் கே எம் விஜயன், தலைமை நீதிபதி ஸ்ரீராம் தலைமையிலான அமர்வில் இன்று முறையீடு செய்தார்.
தலைமை நீதிபதி அறிவுறுத்தல்
இது சம்பந்தமாக நீதிபதி எஸ் எம் சுப்பிரமணியம் தலைமையிலான அமர்வில் முறையிடும்படி அறிவுறுத்திய தலைமை நீதிபதி அமர்வு, நீதிபதி எஸ் எம் சுப்பிரமணியன் தலைமையிலான அமர்வு எடுக்கும் முடிவின் அடிப்படையில் நிர்வாக உத்தரவுகள் பிறப்பிக்கப்படும் என்றும் தெரிவித்தனர்.












Click it and Unblock the Notifications