விஜய்க்கு சரியான எதிர்? இடைத்தேர்தலில் கனிமொழியை களமிறக்க திமுக பிளான்? ஸ்டாலின் ஆலோசனை?
சென்னை: அதிமுகவிலிருந்து மிகப்பெரிய அளவில் முக்கிய தலைவர்கள் தவெக நோக்கி படையெடுத்து வருகின்றனர். இதையடுத்து அடுத்த சில மாதங்களில் தமிழ்நாட்டில் பல்வேறு தொகுதிகளில் இடைத்தேர்தல் நடக்க உள்ளது. இந்த இடைத்தேர்தல்களில் திமுக எம்பி கனிமொழி போட்டியிட வாய்ப்புகள் உள்ளதாக தகவல்கள் வருகின்றன.
அதிமுகவின் முன்னாள் அமைச்சர்களும், சட்டசபை உறுப்பினர்களுமாக இருந்த சி. விஜயபாஸ்கர் (விராலிமலை தொகுதி) மற்றும் எம்.ஆர். விஜயபாஸ்கர் (கரூர் தொகுதி) ஆகியோர் தங்களது எம்எல் பதவிகளை ராஜினாமா செய்துவிட்டு தவெகவில் இணைந்துள்ளனர். இவர்களுடன் மதுராந்தகம் தொகுதி மரகதம் குமாரவேல், பெருந்துறை தொகுதி எஸ். ஜெயகுமார், தாராபுரம் தொகுதி பி. சத்யபாமா மற்றும் அம்பாசமுத்திரம் தொகுதி இசக்கி சுப்பையா ஆகிய 6 பெரும் தலைவர்கள் அதிமுகவிலிருந்து விலகி, ஆளும் தவெகவில் தங்களை இணைத்துக் கொண்டனர்.

ஏற்கனவே விஜய்யின் திருச்சி கிழக்கு தொகுதியில் அவர் தனது பதவியை ராஜினாமா செய்திருந்த நிலையில், தற்போது இந்த 6 தொகுதிகளும் சேர்ந்து மொத்தம் 7 சட்டசபை இடங்கள் காலியாக உள்ளது.
சென்னை உயர் நீதிமன்றத்தின் அதிரடி இடைக்கால தடை!
இந்த திடீர் ராஜினமாக்களைத் தொடர்ந்து, தமிழகத்தில் அடுத்தடுத்து இடைத்தேர்தல்கள் வரும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், சென்னை உயர் நீதிமன்றம் ஒரு முக்கிய உத்தரவைப் பிறப்பித்துள்ளது.
தேர்தல் வழக்குகள் ஏற்கனவே நிலுவையில் உள்ள காரணத்தால், திருச்சி கிழக்கு, பெருந்துறை, அம்பாசமுத்திரம், விராலிமலை மற்றும் கரூர் ஆகிய 5 சட்டமன்றத் தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் நடத்துவதற்கான தேதியை அறிவிக்க இந்திய தேர்தல் ஆணையத்திற்கு சென்னை உயர் நீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்துள்ளது.
மொத்தமுள்ள 7 காலியான தொகுதிகளில் 5 தொகுதிகளில் தேர்தல் நடத்த நீதிமன்றம் ஜூலை 31ம் தேதி வரை தற்காலிகமாக முட்டுக்கட்டை போட்டுள்ளதால், அரசியல் கட்சிகள் தங்களது தேர்தல் பணிகளை நீதிமன்ற உத்தரவுக்கு உட்பட்டு திட்டமிட வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளன.
முன்கூட்டியே களப்பணியைத் தொடங்கிய திமுக
நீதிமன்ற தடை ஒருபுறம் இருந்தாலும், பிரதான எதிர்க்கட்சியான திமுக தற்போதே இந்த தொகுதிகளுக்கான தனது தேர்தல் களப்பணிகளை மிக தீவிரமாகத் தொடங்கியுள்ளது.
தவெகவின் அசுர வேக வளர்ச்சியைத் தடுக்கவும், தங்களது வாக்கு வங்கியைத் தக்கவைக்கவும் இப்போதிருந்தே வியூகங்களை வகுக்க வேண்டிய கட்டாயத்தில் திமுக தலைமை உள்ளது.
அதன் ஒரு முக்கிய அங்கமாக, தூத்துக்குடி நாடாளுமன்ற உறுப்பினராக இருக்கும் கனிமொழி கருணாநிதியை இந்த இடைத்தேர்தலில் ஒரு தொகுதியில் போட்டியிட வைக்க வேண்டும் என்ற பலத்த கோரிக்கைகள் திமுகவிற்குள் எழுந்துள்ளன.
கனிமொழி ஏன் தமிழக சட்டமன்றத்திற்குள் வர வேண்டும்?
திமுகவின் ஒரு குறிப்பிட்ட முக்கிய பிரிவினர் நம்பும் ரகசிய அரசியல் வியூகம் இதுதான்.. தற்போது ஆளும் விஜய்க்கு பெண்கள் மத்தியில் மிக வலுவான வாக்கு வங்கி உள்ளது. விஜய்யின் இந்த பெண்கள் வாக்கு என்ற அஸ்திரத்தை முறியடிக்க திமுகவிடம் இருக்கும் ஒரே வலுவான முகம் கனிமொழி மட்டுமே.
கனிமொழி தனது எம்பி பதவியை ராஜினாமா செய்துவிட்டு, இந்த இடைத்தேர்தல் மூலம் தமிழக சட்டமன்றத்திற்குள் நுழைந்தால், அவர் மாநில அரசியலில் மிக முக்கிய பங்காற்ற முடியும். மகளிர் நலத்திட்டங்கள் மற்றும் பெண் வாக்காளர்களை கவர்வதில் கனிமொழியின் ஆளுமை மிக முக்கியமானது. அவர் மாநில அரசு மற்றும் சட்டசபைக்குள் வரும் பட்சத்தில், தவெகவின் கட்டமைப்பு மற்றும் விஜய்யின் பெண் வாக்கு வங்கி ஆட்டம் காணும் என்று திமுகவினர் நம்புகின்றனர்.
தமிழக அரசியலில் தவெகவின் அசுர எழுச்சியும்.. அதற்கு ஈடுகொடுக்க திமுக எடுத்துவரும் இந்த கனிமொழி அஸ்திரமும், வரவிருக்கும் இடைத்தேர்தல் களத்தை இன்னும் சுவாரசியமாக மாற்றும் சூழல்கள் உள்ளன!


Click it and Unblock the Notifications
