உடனே கலைந்து போங்க..இல்லாவிட்டால் லத்தியால் அடித்து கலைக்க நேரிடும்! ப்ளாக்ஸை காட்டி போலீஸ் வார்னிங்
மதுரை: திருப்பரங்குன்றம் மலை உச்சியில் உள்ள தீபத்தூணில் தீபம் ஏற்றாததை கண்டித்து போராட்டத்தில் ஈடுபட்ட பாஜக, இந்து முன்னணி உள்ளிட்ட பல்வேறு கட்சிகளை சேர்ந்தவர்களை போலீசார் வேனில் ஏற்றி கைது செய்தனர். அதையும் மீறி பலர் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. இதற்கிடையே போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கலைந்து செல்ல வேண்டும் எனவும், இல்லையேல் லத்தி சார்ஜ் செய்யப்படும் என்ற எச்சரிக்கை வாசகங்களுடன் உள்ள பிளக்ஸ் பேனரை போலீசார் காட்டி எச்சரிக்கை விடுத்தனர்.
புகழ்பெற்ற திருப்பரங்குன்றம் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி கோயில் மலை உச்சியில் தீபத்தூண் ஒன்று அமைந்துள்ளது. இந்தத் தூணில் ஆண்டாண்டு காலமாக கார்த்திகை தீபம் ஏற்றப்பட்டு வருவதாகக் கூறி, இந்த ஆண்டு தீபத் திருவிழாவின் போது அங்கு தீபம் ஏற்ற உத்தரவிடக் கோரி நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.

கடந்த ஆண்டு திமுக ஆட்சியின்போது மலை உச்சியில் உள்ள தீபத்தூணில் தீபம் ஏற்றப்படவில்லை. அதற்குப் பதிலாக மலை மீதுள்ள உச்சிப்பிள்ளையார் கோயிலில் தீபம் ஏற்றப்பட்டது. இந்த நிலையில், இந்த ஆண்டு கார்த்திகை தீபத் திருவிழாவை முன்னிட்டு மலை உச்சியில் உள்ள தீபத்தூணில் தீபம் ஏற்ற உத்தரவிடக் கோரி உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.
வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம், தீபத்தூணில் தீபம் ஏற்றுவதற்கு இடைக்கால அனுமதி வழங்கியது.
இதற்கிடையே, திருப்பரங்குன்றம் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் 144 தடை உத்தரவு பிறப்பித்து மதுரை மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டார். இதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றத்தின் மதுரைக் கிளை, உச்ச நீதிமன்றத்தின் உத்தரவை நிறைவேற்றுமாறு அறிவுறுத்தியது.

இதனால், இந்த ஆண்டு மலை உச்சியில் உள்ள தீபத்தூணில் தீபம் ஏற்றப்படுமா என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டது. ஆனால், கடந்த ஆண்டைப் போலவே இந்த ஆண்டும் உச்சிப்பிள்ளையார் கோயிலில்தான் தீபம் ஏற்றப்பட்டது. இதனால், தீபத்தூணில் தீபம் ஏற்றப்படும் எனக் காத்திருந்த இந்து அமைப்பினர் அதிருப்தி அடைந்தனர். இதையடுத்து, திருப்பரங்குன்றம் கோயிலின் சன்னதி வீதியில் இந்து அமைப்பினர் போராட்டத்தில் ஈடுபட்டனர். அரசுக்கும் காவல்துறைக்கும் எதிராக முழக்கங்களை எழுப்பினர்.
கோயில் முன்பு அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்ட இந்து முன்னணி உள்ளிட்ட பல்வேறு இந்து அமைப்புகளைச் சேர்ந்தவர்களை போலீசார் கைது செய்து வாகனங்களில் ஏற்றினர். இதேபோல், 16 கால் மண்டபம் பகுதியில் போராட்டத்தில் ஈடுபட்ட பாஜகவினர் மற்றும் பிற அமைப்புகளைச் சேர்ந்தவர்களையும் போலீசார் அங்கிருந்து அகற்றினர்.
போலீசார் கைது நடவடிக்கைகளை மேற்கொண்டபோதும், சிலர் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். திருப்பரங்குன்றம் மலைக்குச் செல்லும் பாதையில் பொதுமக்கள் மற்றும் போராட்டக்காரர்கள் கூடுவது சட்டவிரோதமானது என காவல்துறை தரப்பில் அறிவிக்கப்பட்டது. மேலும், போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் உடனடியாகக் கலைந்து செல்ல வேண்டும் என்றும், இல்லையெனில் லத்தி சார்ஜ் நடத்தி கூட்டத்தைக் கலைக்க நேரிடும் என்றும் போலீசார் எச்சரித்தனர்.
"நீங்கள் கூடியிருப்பது சட்டவிரோதமான கூட்டம் உடனே கலைந்து போங்கள் இல்லாவிட்டால் லத்தியால் அடித்து கலைக்க நேரிடும்" என்ற எச்சரிக்கை வாசகங்கள் இடம்பெற்றிருந்த பிளக்ஸ் பேனரையும் போலீசார் போராட்டக்காரர்களிடம் காட்டினர். இதனால் திருப்பரங்குன்றம் கோயில் மற்றும் மலைக்குச் செல்லும் பாதைப் பகுதிகளில் பதற்றமான சூழல் நிலவியது.



Click it and Unblock the Notifications
