வெயில் ஓவர்னு கவலை படாதீங்க.. இந்த மந்திரத்தை சொல்லுங்க! வெப்பம் பறந்திடும்! சொல்வது கோயில் சாமியார்
சென்னை: கோடை வெப்பம் தொடர்ந்து அதிகரிக்கும் நிலையில், இதில் இருந்து தப்பிக்க எளிய வழியை தெலங்கானா பூசாரி பரிந்துரைத்துள்ளார்.
இந்தியாவில் கோடைக் காலங்களில் வெப்பம் எந்தளவுக்கு உச்சத்தைத் தொடும் எனத் தனியாகச் சொல்லத் தேவையில்லை. மார்ச் இறுதியில் தொடங்கும் அதீத வெப்பம் ஏப்ரல், மே வரை உச்சத்தில் இருக்கும்.

அதிலும் கடந்த சில ஆண்டுகளைக் காட்டிலும் இந்தாண்டு வெப்பம் அதிகமாகவே இருக்கிறது. கடந்த மார்ச் மாதமே தமிழ்நாட்டில் சில இடங்களில் வெப்பம் 100 டிகிரி தொட்டது. இப்போதும் வெப்பம் அதிகமாகவே இருந்து வருகிறது.
மே மாதத்தில் சில நாட்கள் மோச்சா புயல் காரணமாக வெப்பம் குறைந்திருந்தாலும் ஒட்டுமொத்தமாக வெப்பம் அதிகமாகவே இருந்து வருகிறது. சென்னையில் வெப்பம் 105 டிகிரி பாரன்ஹீட் வரை கூட சென்றது. வெப்பம் இந்தளவுக்கு அதிகமாக இருப்பதால் பொதுமக்கள் வெளியே வரவே ஒரு முறைக்கு இரண்டு முறை யோசிக்கிறார்கள். மதிய நேரங்களில் வெளியே வருவதைத் தவிர்க்குமாறு வல்லுநர்களே பரிந்துரைக்கிறார்கள்.
ஒப்பீட்டளவில் நமது நாட்டில் தமிழ்நாட்டில் சற்று வெப்பம் குறைவாக இருக்கிறது என்றே சொல்ல வேண்டும். ஏனென்றால் மற்ற மாநிலங்களில் வெப்பம் நாம் நினைத்துக் கூட பார்க்க முடியாத அளவுக்கு அதிகரிக்கிறது. நமது அண்டை மாநிலமான தெலுங்கானாவில் வெப்பம் 113 டிகிரி பாரன்ஹீட்டை தாண்டியது.
ஆந்திராவில் மேலும் மோசமடைந்து வெப்பம் 120 டிகிரி பாரன்ஹூட் கூட சென்றது. அந்த அதீத வெப்பம் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கையைக் கடுமையாகப் பாதிக்கிறது. குறிப்பாக டெலிவரி பாய்கள் உள்ளிட்டோர் இதனால் மிகக் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இதனிடையே இந்தாண்டு ஏற்பட்டுள்ள இந்த அதீத வெப்பத்திற்கு ஜோதிட காரணிகள் முக்கிய காரணம் என்று சில ஆன்மீகவாதிகள் தெரிவித்துள்ளனர். தெலுங்கானா மாநிலம் காசிப்பேட்டையில் அமைந்துள்ள ஸ்ரீ ஸ்வேதர்கமூல கணபதி கோவிலின் தலைமை அர்ச்சகர் இனவோலு அனந்த மல்லையா சர்மா கூறுகையில், "சூரியன் விருச்சிக ராசியில் இருந்து விருஷப ராசிக்கு மாறுகிறது. அது இப்போது கிருத்திகை நட்சத்திரத்தில் இருப்பதும் தான் கோடை வெயில் உச்சத்தில் இருக்கக் காரணம்.

இந்த கடுமையான வெப்பம், மனிதர்களை மட்டுமன்றி விலங்குகள் மற்றும் பறவைகள் உட்பட அனைத்து வகையான உயிரினங்களையும் கடுமையாகப் பாதிக்கிறது. கோடையின் கடுமையான வெப்பத்தைத் தணிக்க நாங்கள் ஏழு ஆறுகளில் இருந்து வரும் நீர், 108 தேங்காய்களைப் பயன்படுத்தி தெய்வத்திற்குச் சிறப்புப் பூஜைகளை நடத்தினோம்" என்றார்.
மேலும், அவர் அடுத்த 12 நாட்கள் வெப்பம் அதிகமாக இருக்கும் என்றும் இதனால் மக்கள் தீவிர எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என அறிவுறுத்துகிறார். தொடர்ந்து உயரும் வெப்பநிலை மற்றும் ஒழுங்கற்ற சூரியனின் தாக்கம் நமக்குப் பல வித பாதிப்புகளை ஏற்படுத்தும் என்றும் அவர் தெரிவித்தார்.
இது மட்டுமின்றி a, e, v, u, y, o ஆகிய எழுத்துகளில் பெயரைக் கொண்டுள்ளோர் அதீத எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என்றும் அவர் அறிவுறுத்தினார்.
மேலும், கோடை வெப்பத்தில் இருந்து பாதுகாத்துக் கொள்ள அடுத்த 12 நாட்களுக்கு ஓம் ஜூம் ஸ்வாஹா (Aum Zoom Swaha) என்ற மந்திரத்தைத் தினமும் 108 முறை உச்சரிக்குமாறு சர்மா குறிப்பிட்டார்.












Click it and Unblock the Notifications