Periyar Seeman: பெரியார் மீது அவதூறு! சம்மனுக்கு ஆஜராகாத சீமான்! வீட்டுக்கே வந்த வடலூர் போலீஸ்
சென்னை: பெரியார் குறித்து அவதூறாக பேசிய புகாரில் சம்மன் அனுப்பியும் ஆஜராகாத நிலையில் சென்னையில் உள்ள சீமான் வீட்டுக்கு வடலூர் காவல் நிலைய போலீஸார் வருகை தந்துள்ளனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
தமிழகம் போற்றும் பகுத்தறிவு பகவலன் தந்தை பெரியார் குறித்து நாம் தமிழர் கட்சியின் சீமான் அவதூறு கருத்துகளை பேசியிருந்தார். இதற்கு பெரியாரிய அமைப்பினரும், திராவிட கட்சிகளும், பெரியார் ஆதரவாளர்களும் சீமானுக்கு கடும் கண்டனம் தெரிவித்தனர்.

இந்த நிலையில் தமிழகம் முழுவதும் சீமான் மீது புகார்கள் எழுந்தன. இதைத் தொடர்ந்து சீமான் வீட்டிற்கு முன்பாக பெரியாரிய அமைப்புகள் ஆர்ப்பாட்டம் நடத்துவதாக அறிவித்திருந்தன. அப்போதுதான் நாம் தமிழர் கட்சியினர் கைகளில் உருட்டுக்கட்டையுடன் உட்கார்ந்திருந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்தது.
அது போல் சீமான் மனைவி கயல்விழி உள்ளிட்ட மகளிர் அமைப்பினரும் சீமான் வீட்டு வாசலில் நாற்காலி போட்டுக் கொண்டு அமர்ந்திருந்தனர். இதையடுத்து தங்களை தாக்குவதற்காகவே சீமான் தனது கட்சி நிர்வாகிகளை வீட்டு வாசலில் அமர வைத்திருந்தார் என பெரியாரிய அமைப்புகள் போலீஸில் புகார் கொடுத்திருந்தன.
வடலூர் போலீஸார் வருகை: இந்த நிலையில் பெரியார் குறித்து பேசியதாக சீமானுக்கு எதிராக வடலூர் காவல் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில் அவரை விசாரணைக்கு ஆஜராகுமாறு சம்மன் அனுப்பியிருந்தனர். ஆனால் சீமானோ அந்த சம்மனுக்கு விளக்கம் அளிக்க ஆஜராகவில்லை என தெரிகிறது.
ராணிப்பேட்டை போலீஸார் வருகை: இதைத் தொடர்ந்து தற்போது வடலூர் காவல் நிலைய போலீஸார் சீமான் வீட்டுக்கு வந்துள்ளனர். அது போல் ராணிப்பேட்டை போலீஸாரும், தந்தை பெரியார் விவகாரத்தில் வந்த புகாரை அடுத்து சீமானின் கட்சி அலுவலகத்தில் சம்மன் அனுப்பியுள்ளனர்.
ஈரோடு போலீஸாரும் வருகை: ஈரோடு இடைத்தேர்தலில் சர்ச்சை பேச்சு பேசியதாக எழுந்த புகாரின் பேரில் விசாரணைக்கு ஆஜராக சீமானுக்கு சம்மன் அனுப்பப்பட்டது. ஆனால் அவர் ஆஜராகாததால் ஈரோடு போலீஸாரும் சீமான் வீட்டுக்கு சம்மன் கொடுக்க வந்துவிட்டனர். அவர் பிப்ரவரி 20ஆம் தேதி ஆஜராக சம்மன் கொடுக்கப்பட்டுள்ளது.
சர்ச்சை பேச்சு: ஈரோடு கிழக்கு தொகுதிக்கு கடந்த பிப் 5 ஆம் தேதி இடைத்தேர்தல் நடந்தது. ஏற்கெனவே பெரியார் குறித்து பேசிவிட்டு அவருடைய சொந்த மண்ணுக்கே சீமான் சென்ற போது கடும் எதிர்ப்பு நிலவியது. இந்த நிலையில் வேட்பாளர் சீதாலட்சுமியை ஆதரித்து பேசிய போது, ராமரும் வேண்டாம், ராமசாமியும் வேண்டாம் என கூறிய சீமான், பல்வேறு சர்ச்சை கருத்துகளை பேசியதாக சொல்லப்படுகிறது. இது குறித்து புகார் எழுந்த நிலையில் அவர் மீது நடவடிக்கை எடுக்க போலீஸார் அதிரடி காட்டி வருகிறார்கள்.
அண்மையில் புதுக்கோட்டையில் சீமான் செய்தியாளர்கள் சந்திப்பில் பேசுகையில் திராவிடா உனக்கு ஒரு தலைவர் பெரியார் மட்டும்தான். ஆனால் தமிழர்கள் எங்களுக்கு எத்தனையோ தலைவர்கள் இருக்கின்றனர். தமிழ்நாட்டில் முதல் இந்தி எதிர்ப்பு போரை நடத்தியது பெரியார் என பேசுகிற துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலினின் வரலாற்றை தலையில் அடித்துக் கொண்டு சிரித்து கொண்டுதான் போக வேண்டும். முதன்முதலில் தமிழ்நாட்டில் இந்தி பள்ளியைத் தொடங்கியதே உங்கள் பெரியார்தான்.
எல்லாரையும் படிக்க வைத்த பெரியார், உங்களைப் படிக்க வைக்காமல் விட்டுவிட்டார் வெரி சாரி. பெரியாரை எங்களை விட அதிகமாக எதிர்த்து பேசியது பேரறிஞர் அண்ணாவும், கலைஞரும் தான். தமிழகத்தை பெரியார் மண் என சொன்னால் கொலை வெறியாகிவிடும். இது சேர சோழ பாண்டிய மண், பூலித்தேவர் மண், வேலுநாச்சியார் மண், காமராஜர் மண், இது என் மண், தமிழ் மண், பெரியார் மண் அல்ல.எங்களுக்கு பெரியாரே மண்தான் என சர்ச்சைக்குரிய வகையில் சீமான் பேசியிருந்தார்.












Click it and Unblock the Notifications