தலைக்கு மேல வேலை இருக்கு! அப்படி என்ன வேலை? முடி வெட்டணும்பா! உதயநிதி -தயாநிதியால் கலகலப்பு!
சென்னை: சென்னையில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் நாடாளுமன்ற உறுப்பினர் தயாநிதி மாறனுடன் உரையாடிய போது நிகழ்ந்த ருசிகர தகவல் ஒன்றை உதயநிதி ஸ்டாலின் வெளியிட்டுள்ளார்.
கைத்தறித்துறை அமைச்சர் காந்தி ஏற்பாடு செய்திருந்த நிகழ்ச்சியில் பேசிய உதயநிதி ஸ்டாலின் இதனைக் கூறினார்.
கருணாநிதியை போன்று நகைச்சுவை ததும்ப உதயநிதி ஸ்டாலின் பொதுவிடங்களில் பேசுவது அவரது பேச்சுக்கு மிகுந்த வரவேற்பை பெற்றுக்கொடுத்திருக்கிறது.

கைத்தறி கண்காட்சி
சென்னை எழும்பூரில் தேசிய கைத்தறி கண்காட்சியை தொடங்கி வைப்பதற்காக திமுக இளைஞரணிச் செயலாளர் உதயநிதி ஸ்டாலின், மத்திய சென்னை நாடாளுமன்ற உறுப்பினர் தயாநிதி மாறன், சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்ரமணியன் ஆகியோரை சிறப்பு விருந்தினராக அழைத்துச் சென்றிருந்தார் தமிழக கைத்தறி மற்றும் கதர்வாரியத் துறை அமைச்சர் காந்தி.

தலைக்கு மேல வேலை
5 நிமிடத்தில் அங்கிருந்து புறப்பட்டு விடலாம் எனக் கூறி இவர்களை அழைத்துச்சென்ற அமைச்சர் காந்தி, கண்காட்சியில் அமைக்கப்பட்டிருந்த கடைகளை உதயநிதி ஸ்டாலினை வைத்து திறந்து வைக்க வைத்தார். இதில் அரைமணி நேரம் ஆகிவிட்டது. மேலும், கண்காட்சியில் உள்ள அரங்குகளை பார்வையிட அவர்களை அழைத்த போது, அண்ணே எனக்கு தலைக்கு மேல வேலை இருக்கு, புறப்படுகிறேன் என அமைச்சர் காந்தியிடம் தயாநிதி மாறன் எம்.பி. கூறியிருக்கிறார்.

உதயநிதி ஸ்டாலின்
இதனை கவனித்த உதயநிதி ஸ்டாலின், தயாநிதி மாறனிடம் தலைக்கு மேல என்ன வேலைன்னே எனக் கேட்டிருக்கிறார். முடிவெட்டனும்ப்பா என தயாநிதிமாறன் கூற அந்த இடமே கலகலப்பாகியுள்ளது. உடனே உதயநிதி ஸ்டாலின் சிரித்துக்கொண்டே அருகில் நின்ற அமைச்சர் மா.சுப்ரமணியனை பார்த்ததும், எனக்கு அந்த வேலையெல்லாம் இல்லை என அவர் தெரிவித்திருக்கிறார். இதனால் அங்கு மீண்டு சிரிப்பலை எழுந்தது.

அமைச்சர் காந்தி
இதேபோல் அமைச்சர் காந்தியை குழந்தையை போன்றவர் என்றும் குழந்தை பேசினால் எப்படி புரியாதோ அதேபோல் அமைச்சர் காந்தி பேசுவதும் புரியாது என உதயநிதி ஸ்டாலின் கலாய்த்தார். கருணாநிதியை போன்று நகைச்சுவை ததும்ப உதயநிதி ஸ்டாலின் பொதுவிடங்களில் பேசுவது அவரது பேச்சுக்கு மிகுந்த வரவேற்பை பெற்றுக்கொடுத்திருப்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications